Published : 12 Feb 2015 09:23 AM
Last Updated : 12 Feb 2015 09:23 AM

ஓர் அழித்தொழிப்பு, ஓர் எச்சரிக்கை!

இந்திய அரசியலுக்கு ஒரு மாற்றாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ஆஆக.

டெல்லி சட்டசபைத் தேர்தலில் நரேந்திர மோடி-அமித் ஷா இருவர் கூட்டணி சந்தித்திருப்பதைக் குறிப்பிட தோல்வி என்ற வார்த்தை போதுமானதல்ல. பொதுவாக, இந்திய அரசியலில் ஒரு கட்சியின் தேர்தல் வெற்றியை நிர்ணயிப்பதில் அந்தக் கட்சியைப் பற்றிய தோற்றம் வகிக்கும் பங்கைவிட, அந்தக் கட்சிக்கு எதிராகக் களத்தில் இருக்கும் கட்சியைப் பற்றிய தோற்றமே அதிகப் பங்கு வகிக்கிறது. மோடி-ஷா விஷயத்திலும் இதுவே உண்மை என்பதே டெல்லி தேர்தல் முடிவுகள் சுட்டும் முதன்மையான பாடம்.

மிடாஸ் தொட்டதெல்லாம் பொன்னாகுமா?

2014 மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற பெரும் வெற்றியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் உதவியுடன் மோடி தன்னைப் பற்றி வெற்றிகரமாக உருவாக்கிக்கொண்ட ‘வளர்ச்சிக்கான மனிதர்’ என்ற பிம்பத்துக்கு மிக முக்கியமான பங்கு உண்டு என்றபோதிலும், முதன்மையான காரணம் ஐ.மு.கூ-வின் மிக மோசமான ஆட்சியே. மிடாஸ் தொட்டதெல்லாம் பொன்னாகும் என்பதைப் போல மோடி-ஷா தொடுவதெல்லாம் வெற்றியே என்கிற பிம்பம் உருவாக்கப்பட்டது. ஏதோ யாருக்கும் தெரியாத தேர்தல் உத்திகளைக் கரைத்துக்குடித்த நேர்நிகரற்ற மாமேதை ஷா என்பதைப் போன்ற சித்திரமும் உருவாக் கப்பட்டிருந்தது.

உத்தரப் பிரதேசத்தில் வரலாறு காணாத வகையில் மிகப் பெரும்பான்மையான மக்களவைத் தொகுதிகளை பாஜக கைப்பற்ற முடிந்ததற்குக்கான காரணங்கள் இரண்டு: 1.சீர்கேடுகளின் உச்சமாக இருக்கும் அகிலேஷ் யாதவின் அரசாங்கம். 2.இந்து ஜாட் சமூக மக்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பிப் பெரும் கலவரத்தை சங் பரிவாரம் உருவாக்கியதும், அதில் தங்களுக்கும் அரசியல் ஆதாயம் இருக்கிறது என்றெண்ணி அதற்குத் துணைபோன அகிலேஷ் அரசாங்கம். மகாராஷ்டிரம், ஹரியாணா, ஜார்கண்ட் என சமீபத்தில் மோடி-ஷா இருவர் அணி பெற்ற பெரும் வெற்றிக்குப் பின்னணியில் இருந்ததும் ஆளும் கட்சிகள் மீது மக்களுக்கு இருந்த பெரும் அதிருப்தியே.

மத்திய பாஜக அரசின் மீது மக்களுக்கு அத்தகைய அதிருப்தி ஏதும் இல்லாத நிலையிலும், ஆஆக பெற்றுள்ள மகத்தான வெற்றி வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்டுவரும் ஒரு முக்கியமான மாற்றத்தைக் காட்டு கிறது. நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை, கொள்கை முடிவுகளில் மக்களுக்கும் பங்கிருக்கக் கூடிய ஓர் அரசாங்கத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்பதே அந்த முக்கியமான மாற்றம்.

முடிவுகள் சொல்லும் பாடங்கள்

டெல்லியில் காங்கிரஸின் அழித்தொழிப்பு முழுமை அடைந்திருப்பதை இந்த முடிவுகள் காட்டும் அதே நேரத்தில், மோடியின் ஆட்சிக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டிருக்கிறது. 2013 சட்டசபைத் தேர்தலில் தாங்கள் பெற்ற வாக்குகளோடு ஒப்பிடுகிற போது, இப்போது எந்த வாக்கிழப்பும் ஏற்படவில்லை என்று பாஜக வெளியில் சொல்லித் தன்னைத் தேற்றிக்கொண்டாலும், 2014 மக்களவைத் தேர்தலில் டெல்லியில் தாங்கள் பெற்ற வாக்குகளைவிட 14% வாக்குகள் இப்போது குறைவு என்பதும், அப்போது ஆஆக பெற்ற வாக்குகளைவிட, இப்போது அந்தக் கட்சி 35% வாக்குகள் அதிகம் பெற்றிருப்பதும் மோடி-ஷா வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. இதன் பாதிப்புகள் அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் நன்றாகவே பிரதிபலிக்கும் என்பதும், பிஹாரில் ஓரளவு எதிரொலிக்கும் என்பதும் இருவர் அணியின் அச்சத்தை அதிகரித்திருக்கிறது.

டெல்லியில் பாஜக சந்தித்திருக்கும் பிரம்மாண்டமான தோல்விக்கு முக்கியமான காரணங்கள் மூன்று: 1.முடிவுகளை எடுப்பதில் மோடி-ஷா தவிர, வேறு யாருக்கும் இடமில்லை என்ற நிலை பாஜகவில் உருவாகியிருப்பது. அதன் காரணமாக, சாந்தமானவர், நல்லவர் என்ற பிம்பம்கொண்ட டாக்டர் ஹர்ஷவர்தன் உட்பட டெல்லி பாஜக தலைவர்கள் அனைவரும் முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டு, தேர்தலுக்கு 15 நாட்களுக்கு முன்னர் முதல்வர் வேட்பாளராக கிரண் பேடி கொண்டுவரப்பட்டது. 2. ‘வளர்ச்சிக்கான மனிதராக’ தன்னைக் காட்டிக்கொண்ட மோடி, கடந்த 8 மாதங்களில் எந்த வளர்ச்சியையும் காட்டாதது மட்டுமல்ல; இந்துத்துவா செயல்திட்டங்களை நிறைவேற்றுவதில் அவர் காட்டிவரும் முனைப்பு மோடியின் பிம்பத்தை நம்பி 2014-ல் வாக்களித்த டெல்லி நடுத்தர வர்க்க மக்களில் கணிசமானவர்களை அவரிடமிருந்து விலக வைத்திருக்கிறது. 3. தனது எதிரி ஊழலின் வடிவமாக இருக்கும் காங்கிரஸாக இருந்த வரை வெற்றி பெறுவது பாஜகவுக்கு எளிதாக இருந்தது. இருவர் அணியின் அதிகார போதையை இந்தத் தோல்வி கொஞ்சமேனும் குறைக்கும் என்றால், அது பாஜகவுக்கு நல்லது. நல்ல மாற்று கிடைக்குமெனில், அதை ஆதரிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதையே டெல்லி தேர்தல் முடிவுகள் காட்டும் அதி முக்கியமான பாடம்.

ஆஆக முன்னுள்ள சவால்கள்

யோகேந்திர யாதவ் குறிப்பிட்டதைப் போல ஆஆக வினரே கனவிலும் நினைத்திராத வெற்றி இது. இந்த வெற்றியிலிருந்து ஆஆக கற்க வேண்டிய முக்கியமான பாடம் என்ன என்பதை அதன் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது முதல் பேச்சிலேயே தெளிவுபடுத்திவிட்டார். ‘இந்த வெற்றி எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இது நமக்கு அகங்காரத்தைத் தந்து விடக் கூடாது’ என்று அவர் சொல்லியிருப்பதை நடை முறையில் கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதல்ல.

இன்றைய இந்திய அரசியலுக்கு ஒரு மாற்றாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ஆஆக, வெகு விரைவில் இன்றைக்கிருக்கும் கட்சிகளுள் ஒன்றாக மாறினால் அதில் அதிர்ச்சியடைவதற்கோ, ஆச்சரியப்படுவதற்கோ ஏதுமில்லை என்பதற்கான அறிகுறிகள் இப்போதே ஆஆகவில் தென்படுகின்றன. நேற்று வரை எந்த மனத்தடையும் இல்லாமல் காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளில் உற்சாகமாக இருந்துவிட்டு, இப்போது ஆஆவில் சேர்ந்த பலரை வெற்றிவாய்ப்பு அதிகமிருக்கிறது என்பதற்காக தேர்தலில் நிறுத்தியது ஆஆக தலைமை. எல்லாக் கட்சிகளும் பின்பற்றும் இந்த வழக்கமான அணுகுமுறையை ஆஆக பின்பற்றியதன் காரணமாகவே, அற அரசியலை முன்னிறுத்தும் பிரசாந்த் பூஷண் ஆஆகவிலிருந்து இப்போது விலகி நிற்கிறார். கேஜ்ரிவால் எந்த அளவுக்கு நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கப்போகிறார், தான் அளித்த எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றா விட்டாலும், அவற்றை நிறைவேற்றுவதில் எந்த அளவுக்கு உண்மையான முனைப்பைக் காட்டப்போகிறார் என்பதுவுமே ஆஆகவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

‘வர்க்க அரசியலை நாங்கள் நிராகரிக்கவில்லை. ஆனால், எங்களுடையது வர்க்கப் போராட்ட அரசியல் அல்ல’ என்றும்... தாங்கள் ‘சித்தாந்த அரசியலுக்குள் அடைபட மறுப்பவர்கள், அதற்கு அப்பாற்பட்டவர்கள்’ என்றும் யோகேந்திர யாதவ் தொடர்ந்து கூறிவருவகிறார். இது யதார்த்தத்தில் சாத்தியமற்ற நிலை. இந்த போலியான நிலைப்பாடு அந்தக் கட்சியின் நீண்ட கால அரசியலுக்கு ஆபத்தாகவே முடியும். ஒரு கட்சிக்கு சித்தாந்தம் அல்லது கோட்பாடுகள் என்பது வரைபடம் போன்றதல்ல, கைவிளக்கு போன்றது. ஆஆக கற்க வேண்டிய முக்கிய பாடங்களுள் ஒன்று இது.

க. திருநாவுக்கரசு, அரசியல் விமர்சகர், கட்டுரையாளர்

தொடர்புக்கு: kthiru1968@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x