Published : 11 Feb 2015 08:35 AM
Last Updated : 11 Feb 2015 08:35 AM

மீண்டும் ஆஆக!

மக்களவைப் பொதுத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அடுத்தடுத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வெற்றியைக் குவித்துவந்ததற்காக பாஜக கடந்த மாதம் தன்னைத்தானே பாராட்டிக்கொண்டு புளகாங்கித மடைந்தது. இவ்வெற்றிகளால் பெரும்பான்மையின வாதத்தை அக்கட்சி முன்னெடுத்துச் செல்லும் என்று அரசியல் விமர்சகர்கள் அச்சப்பட்டனர். ஆனால், அது ஏற்கெனவே அப்பணியைத் தொடங்கிவிட்டது. தான் ஏற்படுத்திய பிம்பத்தைக் கண்டு எல்லோரும் பிரமிப்பதை, ஒரு கொள்கை வகுப்பாளர் என்ற முறையில் அது வெகுவாக ரசித்தது. உலகத் தலைவர்களும் வெளிநாடுவாழ் இந்தியர்களும் அளித்த பரிந்துரைகள் அதற்குப் பெருமகிழ்ச்சியை ஊட்டின. இருந்தாலும், டெல்லியில் அரசியல் சூழல் இடம் மாறுகிறது என்று அதற்குத் தெரிந்தது.

ஆஆக தன்னைத்தானே கரைத்துக்கொண்டு காணாமல் போய்விடும் என்று அதன் விமர்சகர்கள் நினைத்ததற்கு மாறாக அது புதிய வலுவுடன் தன்னை மீண்டும் களத்தில் நிறுத்திக்கொண்டது. டெல்லி அரசியல் களத்தில் முதலிடத்தில் இப்போது அதுதான் நிற்கிறது. அரசியல் சதுரங்கத்தில் விற்பன்னர் என்று பெயர் வாங்கிய அமித் ஷாவை அது மிஞ்சிவிட்டது. இது தொடர்பாக ஒரு பழங்கதை இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அரசியல் களம் வற்றிவிடவில்லை

இந்திய அரசியலில் எல்லாவிதமான பரிசோதனைகளும் இப்போதிருக்கும் இந்தியக் கட்சிகளால் முழுக்கச் செய்துபார்க்கப்படவில்லை. காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எல்லாம் பழமைக் கட்டுமானங்களைக் கொண்ட, புதிய சிந்தனை, புதிய செயல்முறை, புதிய பரிசோதனை முயற்சிகள் இல்லாத கட்சிகள். ஆஆக உருவானபோது அது புதிய வகையில் அர்த்தமுள்ள அரசியல் சிந்தனைகளை முன்வைத்தது. மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும் மக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஆதரவாகவும் கிளர்ச்சிகளைச் செய்து இயக்கங்களை நடத்தியதுடன் அரசியல் கட்சியாகவும் நிலைத்து நின்றது. அதனுடைய வெற்றி அபாரமானதாக இருந்ததால், அது திடீரென்று உற்சாக மிகுதியில் அப்போதைக்கு மட்டும் செயல்பட்ட துடுக்கான கட்சியா, மக்களுடைய மனங்களில் இடம்பிடித்த அற்புதத் திரைக்காவியமா என்று யாராலும் தீர்மானிக்க முடியவில்லை. அடுத்த சில மாதங்களுக்கு நாடு முழுக்க மக்களுடைய மனங்களில் நம்பிக்கையை விதைத்துவிட்டு, விமர்சகர்கள் எதிர்பார்த்தபடியே தன்னைத்தானே சுருட்டிக்கொண்டது.

அந்தக் கட்சியை உயிர்ப்புடன் தக்கவைத்தது அதன் தொண்டர்களும் ஆதரவாளர்களும்தான். அவர்களுக்கு அரசியல் என்பது பொழுதுபோக்காக இல்லாமல், ஒரு கடமையாக மாறிவிட்டது. இந்தக் குழுக்கள் அரசியலின் அடியாழத்தில் உள்ள சில அம்சங்களைப் பிரதிபலித்தன. இப்போதைய வெறுக்கத்தக்க அரசியலின் வெற்றுக்கூச்சலுக்கு அப்பாற்பட்ட ஆழ்ந்த அமைதியை நோக்கிச் செல்லக்கூடிய வித்தியாசமான அரசியலைத்தான் அவர்கள் ஆதரிக்கின்றனர்.

புதிய அரசியலுக்கான சாத்தியங்கள்

அரசியல் களத்தில் தான் நிகழ்த்திய முதல், திடீர் தாக்குதல் மூலம் ஒரு புதுவகை அரசியலுக்கு ஆஆக வித்திட்டது. அரசியலில் நடப்பதைக் கவனிக்க வேண்டும், பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை அது முதலில் ஊட்டியது. அரசியல் மூலம் அதிகாரத்தைப் பெறுவது வேறு; அரசியலையே ஒரு கடமையாகக் கருதி அதில் ஈடுபடுவது வேறு. முதலாவது, சுய லாபத்துக்காக அரசியலில் ஆர்வம் காட்டுவது. அடுத்தது, பொது நன்மை கருதி ஆக்கபூர்வமாகச் செயல்படுவது.

ஆஆகவின் முக்கிய அம்சமே ஆர்வமுள்ள ஏராளமான இளைஞர்கள் அரசியலால் ஈர்க்கப்பட்டும் அதன் மூலம் மக்களுக்குச் செய்யக்கூடிய நன்மைகளைக் கருதியும் அதில் பங்கேற்றதுதான். அடுத்ததாக, வழக்கமான அரசியல்வாதிகளின் மொழியில் அது பேசவில்லை. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உள்ள உரிமைகள்குறித்தோ, சட்டப்பேரவையின் முன்னுரிமைகள் குறித்தோ அது பேசவில்லை. மக்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கான புதிய மொழியை உருவாக்குவதுகுறித்துப் பேசியது. அரசியல்வாதிகளே மக்களுக்கான திட்டங்களை முன்மொழிந்து, பிறகு அதை முடித்துவைக்கும் பாணியை அது கையாளவில்லை. மக்கள் தங்களுடைய பிரச்சினைகள் என்னவென்று விவரித்து அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளை உருவாக்கும் புதிய அரசியல் நெறியை ஏற்படுத்தியது. இந்த அணுகுமுறையைத்தான் அராஜகவாதம் என்று பலர் தவறாகப் புரிந்துகொண்டனர். இத்தகைய பாணி அரசியலில் தங்களுக்கு முக்கியத்துவம் குறைவு என்பதால், அரசியல்வாதிகள் முதலிலேயே இதன் போக்கைக் கவனித்து, அராஜகவாதம் என்று கண்டித்தனர். அரசுக்கு அதிகாரம் அளிப்பதற்குப் பதிலாக, மக்களுக்கு அதிகாரம் வழங்க ஆஆக விரும்பியது. இதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி ஆஆகவின் செயலை நக்ஸல்களின் செயலுடன் ஒப்பிட்டு அரசுக்கு அச்சுறுத்தல் என்று எச்சரித்தார்.

ஒருவர் தவறுகள் செய்து அந்தத் தவறுகள் தொடர் வினைகளை ஏற்படுத்தி அது சோகமான நகைச்சுவையாக முடிவதுண்டு. ஆஆகவின் சிறப்பம்சமே நெருக்கடியான நேரங்களில், நுனிக்காலை ஊன்றியாவது தன்னை நிலைநிறுத்திக்கொண்டதுதான். தங்களுடைய எதிர்கால முயற்சிகளுக்கு டெல்லி மிகவும் அவசியமான இடம் என்பதால், முழு பதவிக் காலமும் இல்லாமல் ஆட்சியைவிட்டு ஓடியதற்காக அது மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

பாஜக பிரச்சினைகளைத் தீர்க்காது

பாஜக தன்னுடைய 8 மாத ஆட்சிக்காலத்தில் மக்களுடைய பிரச்சினைகளை அப்படியொன்றும் மாயாஜாலம் செய்து தீர்த்துவிடவில்லை என்பதையும் மக்கள் உணர்ந்துவிட்டார்கள். அதுவரை ஆஆகவின் சாதனை என்று குறிப்பிட எதுவும் இல்லாவிட்டாலும், அதன் மீதான நம்பகத்தன்மை மக்களிடையே அதிகரித்தது. அந்தக் கட்சிக்கு மற்றொரு வாய்ப்பைத் தர வேண்டும் என்று டெல்லி மாநகர நடுத்தர மக்களும் ஏழைகளும் தீர்மானித்துவிட்டார்கள்.

காங்கிரஸ் அல்ல; உண்மையான எதிரி ஆஆக என்று பாஜக அடையாளம் கண்டுகொண்டது. அது அரசியலுக்கே ஒரு விறுவிறுப்பை ஊட்டியது. வலுவான கட்சியை, வலு குறைந்த கட்சி பலமாக எதிர்ப்பதுதான் ஜனநாயகத்தின் அழகு.

ஆஆகவின் அரசியல் நடவடிக்கையை பாஜக அப்படியே காப்பியடித்தது. முதல்வர் பதவி வேட்பாளருக்கு கட்சியைச் சாராத கிரண் பேடியைத் திடீரெனக் களம் இறக்கியது. சாவி கொடுத்த இயந்திரம்போல பேடி பேசினார், செயல்பட்டார். அவருடைய வருகையைக் கட்சியின் நீண்ட நாள் தொண்டர்கள், தலைவர்கள் பலர் விரும்பவில்லை. அர்விந்த் கேஜ்ரிவால் மக்களுடைய ஆதரவு தந்த உற்சாகத்தில் கொப்பளித்துக்கொண்டிருந்தபோது, கிரண் பேடி உணர்ச்சி ஏதும் காட்டாமல் பொம்மைபோல் அமைதியாகச் செயல் பட்டார். ஒருவரிடம் பேசி, தன்னுடைய கருத்தை அவர் ஏற்பதை வலியுறுத்துவதைவிட, தடியால் நாலு தட்டுத் தட்டி வழிக்குக் கொண்டுவருவதே அவருக்கு மிகவும் பிடித்தமானது. கேஜ்ரிவாலுக்கு நிகரான ஆளுமையுள்ள தலைவர் டெல்லி பாஜகவில் இல்லை என்பதையே பேடியின் தேர்வு பறைசாற்றிக்கொண்டிருந்தது.

ஆஆகவின் எதிர்காலம்

ஆஆக மீண்டும் அரசியல் களத்துக்கு வந்துவிட்டது என்பது தெளிவு. இப்போதைய கேள்வி அந்தக் கட்சி எதிர்காலத்தில் எப்படிச் செயல்படும், அதன் உத்திகள் என்னவாக இருக்கும் என்பதுதான். ஒரு விமர்சகனாக நான் சொல்ல விரும்புவதெல்லாம் அக்கட்சி தொடர்ந்து புதுப்புது கொள்கைகளையும் வழிமுறைகளையும் கண்டு பிடித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதைத்தான்.

ஆஆக தன்னுடைய கட்சிச் செயல்பாட்டைக் கண்காணித்து வழிநடத்த ஒரு ‘ஆம்புட்ஸ்மேன்’ தேவை என்று உணர்ந்து, ஒருவரை அப்பதவியில் நியமித்திருப்பது ஆக்கபூர்வமான சிந்தனை. ஊழல், போதைப்பொருள் நடமாட்டம் என்ற இரண்டு முக்கிய பிரச்சினைகளை மிகத் திறமையாக மக்கள் மனதில் ஆஆக பதியவைத்தது. கல்வி, தண்ணீர், மின்சாரம் போன்றவை பொதுமக்களுக்கான பண்டங்களாகவே திகழ வேண்டும் என்ற உணர்வை அது ஊட்டியது. ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களால் சுத்திகரிக்கப்படும் கச்சா எண்ணெய் போன்றவை பொதுமக்களுக்குச் சொந்தமான சொத்து என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு அது வலியுறுத்தியது. இவையெல்லாம் இதுவரை எந்தப் பெரிய அரசியல் கட்சியாலும் செய்யப்படாதது. நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புள்ளது.

மக்களுடைய வாழ்வாதாரப் பிரச்சினைகளைக்கூடப் பொருளாதார நிர்வாகிகளும் தொழில்நுட்ப நிபுணர்களும் அவர்களுடைய நோக்கில் மட்டுமே பார்க்கின்றனர். ஆஆக இவற்றையும் மீட்டு அதற்கு மக்களுடைய நலன் சார்ந்த கண்ணோட்டத்தையும் அணுகுமுறைகளையும் அளிக்க வேண்டும். வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதைவிடச் சிக்கலானது, மக்களுடைய வாழ்வாதாரங்கள் கெடாமல் பாதுகாப்பது. ஒரு பிரச்சினையை அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் பார்க்கும் பார்வை, சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கும் மனிதருடைய நிலையை உணர்ந்த பார்வையாக இருப்பதில்லை. எல்லாவற்றையும் தொழில்நுட்பக் கண்ணோட் டத்தில் பார்த்து, தொழில்நுட்பரீதியாகத் தீர்வுகண்டு, தொழில்நுட்பத்துடன் தீர்த்துவிடுவதால் பெரும்பான்மை மக்களுடைய வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டுவிடாது.

அணுசக்திப் பயன்பாடு தொடர்பான விவாதங்களில் இதை நாம் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்சினையைத் தேசிய நிலைக்குக் கொண்டுசென்றதன் மூலம், ஒரு ஊரில் பேசப்படும் பிரச்சினை உள்ளூர்ப் பிரச்சினை அல்ல, அது இந்த சமுதாயத்தின், நாட்டின் பிரச்சினை என்பதை அது உலகுக்குக் காட்டியது. அணு மின் நிலையம் எங்கே அமைய வேண்டும் என்று சொல்லும் உரிமை, அந்தப் பகுதியில் மீன்பிடிக்கும் கடல் மீனவர்களுக்கு நிச்சயம் இருக்கிறது என்று அது தெரிவித்தது. ஆஆகவின் ஆம்புட்ஸ்மேனாகச் செயல்படுகிறவர் ஓய்வுபெற்ற கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் எல். ராமதாஸ். நாட்டின் (ராணுவ) பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைக்கு மக்களுடைய வாழ்வாதாரம், தொடர்ந்து செயல்படல், ஜனநாயகம் ஆகிய கோணங்களும் இருப்பதை அவர் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். இவையெல்லாம் இப்படியே தொடர வேண்டும்.

கட்சி அரசியலைப் பிற கட்சிகளைப் போலக் கட்டி எழுப்புவது ஆஆகவுக்கு முக்கியமில்லை. டெல்லி மாநகரைப் புதிதாகக் கட்டமைக்க வேண்டும். டெல்லி மாநகர நிர்வாகம் நகருக்கு வேலைதேடி வரும் புதிய தொழிலாளர்கள், விளிம்புநிலை மக்கள் போன்றோரின் தேவைகளை அறிந்து செயல்பட வழிவகுக்க வேண்டும். டெல்லி என்பது எல்லோருக்குமான நகரம் என்ற உணர்வு அரசு நிர்வாகத்துக்கும் மக்களுக்கும் ஏற்பட வேண்டும். அரசியலுக்குப் புதுவிளக்கம் தருவதிலும் ஜனநாயகத்துக்கு புதிய வடிவத்தைத் தருவதிலும்தான் ஆஆகவின் எதிர்காலம் இருக்கிறது!

- ஷிவ். விஸ்வநாதன்

(அரசு, பொதுக் கொள்கை தொடர்பான ஜிண்டால் உயர்கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.)

©'தி இந்து' (ஆங்கிலம்) தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x