Last Updated : 25 Feb, 2015 09:13 AM

Published : 25 Feb 2015 09:13 AM
Last Updated : 25 Feb 2015 09:13 AM

அழகான மீனும் சள்ளையான பெயரும்

சள்ளையின் செயல்கள் எதிர்மறையான பெயரை உருவாக்கிவிட்டாலும் கண்ணுக்கினிய கவர்ச்சியான மீன் அது

மக்களின் சொல்லாடல்களில் சில நேரங்களில் உவமைகளும் உவமானங்களும் தென்படும். இவை எதேச்சையாக உருவாகியவை என்று எடுத்துக் கொள்ள முடியாது. காலம்காலமாக ஏற்பட்ட அனுபவங் களிலிருந்தே இந்த உவமைகளும் உவமானங்களும் உருவாகியுள்ளன.

ஊரில் ஒருவர் வீடு கட்டினார். “ஏன் இவ்வளவு சிறிய வீடாகக் கட்டுகிறார்?” என்று கேள்வி எழுப்பினேன். எதற்கெடுத்தாலும் சொலவடைகளை உதிர்த்தே பேசும் என் தாயார்,

‘‘எறும்புக்கு சிரட்டை (கொட்டாங்கச்சி) தண்ணீர் சமுத்திரம்’’ என்றார். அவருடைய நிதிநிலைக்கு இவ்வளவுதான் கட்ட முடியும் என்பதை நாசூக்காகக் கூறினார்.

அதேபோல் பொருளாதார வசதியற்றவர்கள் தேவையில்லாமல் செலவுசெய்து விழாக்களையோ சடங்குகளையோ செய்யும்போது, ‘‘ஆனை தூறுகிறது என்பதற்காக ஆட்டுக்குட்டி தூறலாமா? அண்டம் கீறிப்போகும்’’ என்று சொல்வார்.

எத்தனையோ வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரு உவமை கச்சிதமாக வெளி்ப்படுத்தும். நிலையாமையை விளக்க ஆற்றங்கரை மரத்தை ஔவையாரும் திருமங்கையாழ்வாரும் முன்நிறுத்து கின்றனர். கிளைகள் பரப்பி சலசலக்கும் அரசமரம். ஆனால், பெருக்கெடுத்தோடும் வெள்ளம் அதன் ஆற்றங்கரையை அரிக்கும்போது மரம் வேரோடு சாயும்.

இடையன் எறிந்த மரம் என்பது இன்னொரு உவமை. ‘இடையன் வெட்டு அறாவெட்டு’ என்று சொல்வார்கள். இந்தச் சொற்றொடர்குறித்து தமிழ்த் தாத்தா உ.வே.சா. விளக்கமாக எழுதியுள்ளார். இடையர் குலத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்து உரையாடி, அதன் அடிப்படையில் அவர் அந்தக் கட்டுரையை எழுதினார். உயர்ந்த கிளைகளில் இருக்கும் இலைகளை ஆட்டுமந்தையால் உண்ண முடியாது என்பதால், கிளையை வளைத்து ஒரு வெட்டு வெட்டிவிடுவார்கள் ஆடுமேய்ப்பவர்கள். இந்த வெட்டு, கிளையை மரத்திலிருந்து முற்றிலும் பிரிக்காது. தரையைத் தொட்டுக்கொண்டு நிரந்தரமாக உயிர் ஊசலாடும் நிலைமை இது. கிளை தொடர்ந்து தளிர்க்கும். சில நாட்களுக்கு முன்னால் உ.வே.சா. முன்னுரைகள் அடங்கிய ‘சாமிநாதம்’ தொகுப்பை அதன் பதிப்பாசிரியர் ப. சரவணன் கொண்டுவந்து கொடுத்தார்.

அவன் சரியான சள்ளை

“உ.வே.சா-வுக்குப் பல நிலைகளில் உதவிய பெயர்களின் பெயர்ப் பட்டியலைத் தொகுத்துத் தந்த சள்ளைபிடித்த வேலையைச் செய்தவர் எனது சாலை ஆசிரியர் த. கவிதா” என்று சரவணன் தெரிவித்துள்ளார்.

தொந்தரவு, சிரமம், பிரச்சினை ஆகியவற்றைக் குறிக்க சள்ளை என்ற வார்த்தையைப் பலரும் பயன்படுத்துகிறார்கள். “அவன் சரியான சள்ளை”, “இது சள்ளைபிடித்த விவகாரம்” “பெரிய சள்ளையாப் போயிடும் போலிருக்கே” என்று பேசுவதைக் கேள்விப் படுகிறோம்.

‘சள்ளை’ என்பது ஒரு வகை மீன். குளங்களிலும் ஆறுகளிலும், நதிமுகத்துவாரங்களிலும் வசிக்கும் மீன். வெளிறிய மஞ்சள் நிற உடம்பு முழுவதும் தங்க நிறத்தில் புள்ளிகள் உடைய கவர்ச்சியான மீன் இது. தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படும். ஆணின் கண்களைச் சுற்றி ஒளிரும் நீல நிற வளையம் உண்டு. கண்ணாடித் தொட்டிகளில் இதை வளர்ப்பவர்களும் உண்டு.

லேய், சள்ளை வந்தாச்சு!

சள்ளை உண்மையிலேயே சள்ளைபிடித்த மீன்தான். சிறு வயதில் தூண்டில் போடும்போது, சில நேரங்களில் மிதக்கும் கட்டை சர்ரென்று தண்ணீருக்குள் போகும். “ஆஹா! கிடைத்தது பார், பெரிய மீன்” என்று இழுத்தால் மீனும் இருக்காது; தூண்டிலில் பேருக்குக்கூடப் புழு இருக்காது.

“லேய், சள்ளை வந்தாச்சு. இனி இடத்தை மாற்ற வேண்டியதுதான்” என்று முடிவு செய்வோம். இருந்தாலும் ஆசை விடாது. மறுபடியும் இதே போல் ஒரு நாடகம் நடக்கும். தூண்டில் மட்டும் வெயிலில் மினுங்கும். சள்ளையின் வாய் சிறியது என்பதால், அதனால் தூண்டில் முள்ளை விழுங்க முடியாது. ஆகவே, புழுவைக் கரம்பிக் கரம்பி மெதுவாக உருவி, ஒரே இழுப்பாக இழுக்கும். அப்போதுதான் கட்டை சர்ரென்று தண்ணீரில் மூழ்கும். தூண்டில் முள் மிகவும் சிறியதாக இருந்தால் சில சமயம் மாட்டிக்கொள்ளும். தூண்டில் போடுபவர்கள் கோபத்தில் தண்ணீரில் தூண்டிலோடு மீனையும் சேர்த்து அறைவார்கள். அது செத்து மிதப்பதைப் பார்த்துவிட்டு, வேறு இடத்துக்கு நகர்ந்துவிடுவார்கள்.

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. பெரிய மீன்கள் தூண்டில் போடும் இடத்தில் இருந்தாலும், சள்ளை வெகு வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் மற்ற மீன்களை முந்திக்கொண்டு புழுவைக் கடிக்கும். ஆகவே, சள்ளை நீந்தும் இடத்தில் தூண்டில் போட்டால் புழுவை இழக்க வேண்டிதான் வருமே தவிர, மீன் கிடைக்காது. பெருவிரலை விடவும் சற்றுப் பெரிய மீனை யார்தான் பிடித்துச் சாப்பிட விரும்புவார்கள். வலை வீசி மீன்பிடிப்பவர்கள்கூட, பெரிய மீன்களை எடுத்துக்கொண்டு, சள்ளையை அப்படியே போட்டுவிட்டுப் போவார்கள். அவற்றை எடுத்துக் குளத்தில் மீண்டும் விடுவோம். சில நேரங்களில் வீட்டுக்கு வளர்க்க எடுத்துச் செல்வோம். சள்ளையின் செயல்கள் எதிர்மறையான பெயரை உருவாக்கிவிட்டாலும், கண்ணுக்கினிய கவர்ச்சியான மீன் அது என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

- ப. கோலப்பன், தொடர்புக்கு: kolappan.b@thehindu.co.inSign up to receive our newsletter in your inbox every day!

 
x