

மக்களவைத் தேர்தலில் யார் கை ஓங்கும் என்பது ஒருபுறமிருக்கட்டும், பிப்ரவரி 7-ல் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலால் காங்கிரஸ் மேலும் பலவீன மடையும்; பா.ஜ.க-வின் கை அதிகமாக ஓங்கும்.
மாநிலங்களவையில் கட்சி ரீதியாகத் தற்போதைய பலம்
மொத்த உறுப்பினர்கள 245
காங்கிரஸ் 72
பா.ஜ.க. 47
பகுஜன்சமாஜ் 15
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 11
ஐக்கிய ஜனதா தளம் 9
திரிணமூல் காங்கிரஸ் 9
சமாஜவாதி 9
அ.இ.அ.தி.மு.க. 7
தெலுங்குதேசம் 4
சிவசேனா 4
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2
இத்துடன் வேறு சில தேசிய, பிராந்திய மற்றும் மாநிலக் கட்சிகளுக்கும் ஒரு சில இடங்கள் உள்ளன. இதில், சமூக சேவகர்கள், கலைஞர்கள், அறிஞர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றவர்களில் நியமன உறுப்பினர்கள் ஏழு. இதில் ஒன்று இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது.
இதனால், மத்தியில் ஆளும் கூட்டணியின் முக்கியக் கட்சியாக காங்கிரஸ் இருந்தும், அந்தக் கட்சியால் எந்த ஒரு மசோதாவையும் தன்னிச்சையாக நிறைவேற்ற முடியாத நிலைதான் இருந்தது. மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க் கட்சிகள் உட்பட கூட்டணியில் அல்லாத மற்ற கட்சிகளின் ஆதரவும் தேவைப்பட்டது. இத்தனைக்கும் மத்திய அரசின் நியமன உறுப்பினர்களும் காங்கிரஸுக்குச் சாதகமாகவே வாக்களிப்பது வழக்கம்.
இதன் காரணமாகத்தான் பெண்களுக்கான ஒதுக்கீடு, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு போன்ற பல முக்கியமான மசோதாக்களையும் குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்ற முடியாமல் போனது. சில சமயங்களில், இதுபோன்ற மசோதாக்களில் எதிர்க் கட்சிகளின் விருப்பங்களையும் கருத்துக்களையும் மாற்றங்களாக வேறுவழியின்றிச் சேர்க்க வேண்டியுள்ளது.
வரும் ஏப்ரலில் 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடியவிருக்கும் சூழலில், மேலவையில் காங்கிரஸ் மேலும் வலுவிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸில் காலியாகும் சீட்டுகளைக்கூடத் திரும்பப் பெற முடியாத நிலை அந்தக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கு, டிசம்பரில் நடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் ஒரு முக்கியக் காரணம். இதில், ராஜஸ்தான், டெல்லியில் ஆட்சி இழந்ததும், சத்தீஸ்கரிலும் மத்தியப் பிரதேசத்திலும் குறைந்துபோன சீட்டுகளும்கூடக் காரணமே. இதனால், அடுத்து ஆட்சிக்கு வந்தாலும் காங்கிரஸால் தான் நினைக்கும் மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாது என்று கருதப்படுகிறது.
சரியாக நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சற்று முன்னதாக வந்திருக்கும் இந்த மாநிலங்களவைத் தேர்தல், கூட்டணிகள் உருவாகவும் ஒரு காரணமாக இருக்கிறது. கட்சிக்கு மிகவும் வேண்டியவர் அல்லது அதன் தலைவர்கள் சொந்தபந்தங்களை மாநிலங்களவையில் நுழைக்க முயற்சிகள் நடப்பது வழக்கம். இதற்காக முழு பலம் இல்லாத கட்சிகள், ஆதரவு கேட்டு மற்ற கட்சிகளை அணுகுவதும் வழக்கமே.
அதுபோல் ஆதரவு தேடும்போது, புதிய கூட்டணிகள் உருவாகவும், பழைய கூட்டணிகள் வலுவடையவும் வாய்ப்புகள் உருவாகிவிடுகின்றன. இந்த வகையில், பிப்ரவரி
7-ல் நடக்கவுள்ள மாநிலங்களவைத் தேர்தல், மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
காலியாகவிருக்கும் இடங்கள், கட்சிவாரியாக
மொத்தம் 55
காங்கிரஸ் 18
பா.ஜ.க. 14
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4
ஐக்கிய ஜனதா தளம் 3
தேசியவாத காங்கிரஸ் 2
சிவசேனா 2
பிஜு ஜனதா தளம் 2
தி.மு.க. 2
சுயேச்சைகள் 2
ராஷ்டிரீய ஜனதா தளம் 1
அ.இ.அ.தி.மு.க. 1
ஃபார்வர்டு பிளாக் 1
போடோலாண்ட் பி.எப் 1
அசோம் கண பரிஷத் 1
தெலுங்குதேசம் 1
மாநிலவாரியாகப் பட்டியல்
தமிழகம் 6
மகாராஷ்டிரம் 7
ஒடிஷா 4
மேற்கு வங்கம் 5
ஆந்திரம் 6
பிஹார் 5
குஜராத் 4
அசாம் 3
ராஜஸ்தான் 3
மத்தியப் பிரதேசம் 3
சத்தீஸ்கர் 2
ஹரியாணா 2
ஜார்க்கண்ட் 2
இமாச்சலப் பிரதேசம் 1
மேகாலயா 1
மணிப்பூர் 1