வரலாற்று நாயகர் மாயாண்டி பாரதி

வரலாற்று நாயகர் மாயாண்டி பாரதி
Updated on
3 min read

பள்ளித் தேர்வில் தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் தோல்வியுற்றதால் குளத்தில் குதித்துத் தற்கொலை செய்துகொள்ளச் சென்ற அந்தச் சிறுவனை அவனது வீட்டாரும் நண்பர்களும் தடுத்து வீட்டுக்கு அழைத்துவந்தார்கள். வீட்டுக்கு வந்தவுடன் அனைவரும் அந்தச் சிறுவனைப் பார்த்துக் கதறி அழ ஆரம்பித்தார்கள். அப்பா இருளப்பர் காங்கிரஸுக்கு எதிரானவர், நீதிக்கட்சி ஆதரவாளர். “கவலைப்படாதே, உனக்கு பி.டி. ராஜனிடம் சொல்லி சர்க்கார் வேலை வாங்கித்தருகிறேன்” என்றார்.

மகனோ, அதற்கு முன்பே விடுதலை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, அதனோடு நடக்கத் தொடங்கியிருந்தார். 10-வது படிக்கும்போதே வாலிபர் சங்கத்தை அமைக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் அவர். சௌராஷ்டிரா பள்ளிக்கு அருகில் உள்ள மீனாட்சிபுரத்தில் ‘இந்திய சுதந்திர வாலிபர் சங்கம்’ அமைப்பதில் தீவிரமாகப் பங்கெடுத்தார். விடுதலைப் பாடல்கள், பேச்சுக்கள் என்று முழுக்க முழுக்க நாட்டுப்பற்றே அவரை ஆக்கிரமித்திருந்தது. தற்கொலையிலிருந்து தடுக்கப்பட்ட மாயாண்டிதான், 24.2.2015 அன்று மரணமடைந்த முதுபெரும் இந்தியர் ‘ஐ.மா.பா.’ என்றும் ‘அப்பா’ என்றும் அன்போடு எல்லோராலும் அழைக்கப்பட்ட ஐ. மாயாண்டி பாரதி.

ரத்தமும் சதையுமாக…

மாயாண்டி பாரதிக்குள் ஒரு நூற்றாண்டு இந்தியச் சரித்திரம் எப்போதும் ரத்தமும் சதையுமாகத் தளும்பிக்கொண்டிருந்தது. சிறு வயதில் பற்றிய சுதந்திரத் தீ அவருள் எப்போதும் சுடர்ந்தது. தேச விடுதலையின் சுடரை அவர் எப்போதும் ஏந்திக்கொண்டிருந்தார். தன் காலத்தின் வரலாற்று நாயகர்களுள் ஒருவராக மிளிர்ந்தார்.

அதுமட்டுமல்லாமல், மாயாண்டி பாரதிக்குள் எப்போதும் ஒரு கலகக்காரர் இருந்தார். அவர் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தபோதும் சரி, காந்தியோடு மாறுபட்டுச் சில காலம் இந்து மகாசபையின் ஆதரவாளராக இருந்தபோதும் சரி, கம்யூனிஸ்ட்டாக மாறிய பின்பும் சரி, எப்போதும் குன்றாத தீவிரத்தைக் கொண்டிருந்தார்.

97 வயதிலும் விடுதலைப் போராட்டத்தின் கதைகளை இசையோடும், வேகத்தோடும், உறுதியோடும், தேசம்பற்றிய லட்சியக் கனவோடும், சொல்ல முடிந்தது. கள்ளுக்கடை மறியல், கோயில் நுழைவுப் போராட்டம், கப்பற்படை எழுச்சி, காந்தி, நேரு, நேதாஜி, கக்கன், முத்துராமலிங்கத் தேவர், சாவர்க்கர், பொதுவுடமை இயக்கம் என்று அத்தனை வரலாறுகளும் அவருள் எப்போதும் வாமடை பெருகியோடும் நிறைந்த கண்மாயாய்த் தளும்பின.

இம் என்றால் சிறைவாசம்

தன் எழுத்துக்காக இவரளவுக்குச் சிறை சென்ற எழுத்தாளர்கள் அரிது. பாரதியார் சொல்வதுபோல ‘இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம்’ என்கிற வாசகத்தை முழுப் பொருளோடு அனுபவித்தவர் ஐ. மாயாண்டி பாரதி. “ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில்” என்று அவர் சொல்வது வெறும் சந்தத்துக்கான வெற்றுப் பேச்சல்ல. அவரது வாழ்வின் துடிப்பான பக்கங்களின் சாரம்.

பள்ளிக்காலம் முடிந்தவுடன், எழுத்தில் ஆர்வம் கொண்டிருந்த ஐ.மா.பா., சென்னைக்குச் சென்று திரு.வி.க. நடத்திய ‘நவசக்தி’ இதழிலும், பாரதியாரின் சீடர் பரலி சு. நெல்லையப்பர் நடத்திவந்த ‘லோகோபகாரி’ இதழிலும் பணியாற்றினார். 1939 செப்டம்பரில் தொடங்கிய இரண்டாம் உலகப் போர் குறித்து, ஐ.மா.பா. பல கட்டுரைகள் எழுதினார். தேசபக்த ஆவேசத்தைத் தூண்டும் ‘படுகளத்தில் பாரத தேவி’ என்ற சிறிய நூலை எழுதினார். இது தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதை எழுதி வெளியிட்டதற்காக ஆங்கிலேய அரசு அவர்மீது பாய்ந்தது. அவரைக் கைதுசெய்து ஓரிரு மாதங்கள் சிறையில் அடைத்தது. அவர் எழுதிவந்த ‘லோகசக்தி’ பத்திரிகைக்கு 2 ஆயிரம் ரூபாய் ஜாமீன் கேட்கப்பட்டதால் அது நிறுத்தப்பட்டது. விடுதலையான பின் மதுரைக்கு வந்த ஐ.மா.பா. யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார். சாத்தூர் அருகே, கன்னிச்சேரியில் 1940-ல் “பட்டாளத்தில் சேராதே, பணம் காசு கொடுக்காதே” என்று பேசியதற்காக ஐ.மா.பா-வுக்கு 6 மாதக் கடுங்காவல் தண்டனையும் ரூ. 250 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த மறுத்ததால் அவருக்கு 7 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட தமிழகத்தின் அத்தனை சிறைகளிலும் வாசம் செய்தவர் ஐ.மா.பா. ஒரு மாமாங்கத்துக்கும் மேல் தன் வாழ்வின் கதைகளைச் சிறைகளில் எழுதியவர். வேலூர், கோவை சிறைகளில் அவர் இருந்தபோது, கம்யூனிஸ்ட் தலைவர் வி.பி. சிந்தன், மார்க்சிய அறிஞர் ஜமதக்னி ஆகியோர் நடத்திய மார்க்சிய அரசியல் வகுப்புகளில் கலந்துகொண்டு கம்யூனிஸ்ட் ஆனார். தண்டனை முடிந்து வெளியே வந்த அவர், 1941 மே மாதம் மறுபடியும் கைதுசெய்யப்பட்டுப் பாதுகாப்புக் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே, காமராஜர், சஞ்சீவ ரெட்டி, ஏ.கே. கோபாலன், என்.ஜி. ரங்கா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், என். சங்கரய்யா, பட்டாபி சீதாராமய்யா ஆகியோருடன் ஐ.மா.பா-வுக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.

1942-ம் ஆண்டு ஜூன் மாதம் விடுதலையான ஐ.மா.பா., ஆகஸ்ட் மாதத்தில் பாதுகாப்புச் சட்டப்படி கைதுசெய்யப் பட்டு, பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டார். 1944 இறுதியில்தான் விடுதலையானார். பின்னர் சென்னைக்குச் சென்று, ‘ஜனசக்தி’யின் ஆசிரியர் குழு உறுப்பினரானார். 1948-ல் மீண்டும் கைது. 1949-ல் விடுதலை. கட்சியின் உத்தரவுப்படி நெல்லையில் தலைமறைவு வாழ்க்கை. அங்கே செயல்பட்டுவரும்போது, மீளவிட்டான் அருகே கூட்ஸ் ரயிலைக் கவிழ்த்தாக ஐ.மா.பா. மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலப்பாளையம் அருகே மீண்டும் கைது. மிகக் கொடூரமான சித்ரவதை. அவரது குறுக்கு எலும்பு, கைவிரல்கள் ஒடிக்கப்பட்டன. நெல்லை சதிவழக்கில் 9-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ஐ.மா.பா-வுக்கு, ஆர். நல்லகண்ணு, பி.மாணிக்கம் ஆகியோருடன் சேர்த்து இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. விடுதலைக்குப் பின் 1954-ல் மதுரையில் ஐ.மா.பா. - பொன்னம்மாள் திருமணம். அதே ஆண்டில் அவர் ‘ஜனசக்தி’ ஆசிரியர் குழுவில் துணை ஆசிரியரானார்.

இதழியல் பணியின் இறுதிக் காலம்

1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றியபோது ஐ.மா.பா-வும் தன்னை அதில் இணைத்துக்கொண்டார். 1969-ல் ‘தீக்கதிர்’ நாளேடு மதுரைக்கு மாற்றப்பட்ட பின், ஐ.மா.பா. அதில் இணைந்து சுமார் 20 ஆண்டுகள் பணியாற்றினார். ‘செம்மலர்’ இதழிலும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையாளர் தூதுக் குழு சோவியத் ஒன்றியத்துக்கு அனுப்பப்பட்டபோது ‘தீக்கதிர்’ சார்பில் ஐ.மா.பா-வும் சென்றார்.

பின்னர், உடல்நிலை காரணமாக ஓய்வு பெற்ற ஐ.மா.பா., மதுரை மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர் சமிதியைப் பராமரிப்பதிலும், முதிய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உதவிகள் செய்வதிலும் முழுக்க முழுக்கத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

தேச விடுதலை நெருப்பையும், விடுதலை பெற்ற தேசத்துக்காகப் பொதுவுடைமை எனும் நெருப்பையும் என்றும் அணைய விடாமல் காத்தவர் மாயாண்டி பாரதி. அவரது எழுத்துக்கள் அனைத்தையும் ஒன்றாகத் தொகுத்து அவரது நூறாவது பிறந்த நாளில் வெளியிட வேண்டும். மகத்தான போராளி ஒருவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாக அது அமையும்.

- ஸ்ரீரசா, த.மு.எ.க.ச-வின் மாநிலத் துணைச் செயலாளர், கவிஞர், ஓவியர், தொடர்புக்கு: kalkalra@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in