

“சரியான தீர்வு இதுதான், எல்லோருக்கும் பலன் அளிக்கக் கூடிய தீர்வு - இந்த நாடுகளை மீண்டும் காலனி நாடுகளாக்கிவிடலாம்”- பிரிட்டிஷ் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான சோகோ இண்டர்நேஷனல் நிறுவனத்தின் களச் செயல்பாட்டு மேற்பார்வையாளர் ஜூலியன் லிச்சினால்ட் கூறியிருக்கும் வார்த்தைகள் இவை. மீண்டும் காலனி ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிடும் நாடுகளில் காங்கோ குடியரசும் ஒன்று. 1960-ல் விடுதலை அடைவதற்கு முன்னர், பெல்ஜியத்தின் குரூரமான காலனி ஆட்சியின்கீழ் இருந்த நாடு காங்கோ!
ஜூலியன் லிச்சினால்டைப் பொறுத்தவரை, ஆப்பிரிக்கர்கள், ‘தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளத் தெரியாதவர்கள்’அல்லது ‘குழந்தைகளைப் போன்றவர்கள்’!
இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஆவணப்படமான ‘விருங்கா’வில் இதுபோன்ற பல கருத்துகள் இடம்பெற்றிருக்கின்றன. உலகில் எஞ்சியிருக்கும் மலை கொரில்லா குரங்குகளுக்கான புகலிடமான, ஆப்பிரிக்காவின் பழமையான தேசியப் பூங்காவான, காங்கோவில் உள்ள விருங்கா தேசியப் பூங்காவின் நிலையைப் பற்றிப் பேசும் படம் இது.
உலகின் முக்கியமான பல்லுயிர்ப் பிரதேசங்களில் ஒன்றான விருங்கா தேசியப் பூங்காவின் தாவரங்கள் மற்றும் விலங்குகள், கடந்த சில ஆண்டுகளாக வேட்டைக்காரர்கள், போராளிக் குழுக்கள் போன்ற பல காரணங்களால் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.
1996 முதல் இதுவரை விருங்கா தேசியப் பூங்காவின் வனக் காவலர்கள் 130 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். விருங்காவின் வளத்தைச் சூறையாடுவதைத் தடுக்க முற்பட்டவர்கள் இவர்கள்.
விருங்கா தேசியப் பூங்காவின் ஏராளமான மரங்கள், நிலக்கரித் தொழிலுக்குப் பெரிய ஆதாரமாக இருக்கின்றன. இப்பூங்காவின் எண்ணெய் வளம் சோகோ போன்ற நிறுவனங்கள் செழிக்க உதவுகிறது. சட்டம் பற்றிய கவலை இல்லாத காங்கோ அரசு, இந்தப் பூங்காவிலிருந்து எண்ணெய் வளங்களை எடுக்க அனுமதி அளித்திருக்கிறது. இந்த நடவடிக்கை, காங்கோ சட்டங்களை மட்டுமல்ல, உலகப் பாரம்பரிய இடங்களில் ஒன்றான விருங்கா தேசியப் பூங்காவுக்கான பாதுகாப்பு விதிகளையும் மீறும் செயலே!
விருங்கா தேசியப் பூங்காவில், தங்கள் செயல்பாடுகள் இனி நிறுத்திவைக்கப்படுவதாக சோகோ நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்தாலும், அதன் பின்னணி நம்பகமானது அல்ல என்கிறது இந்த ஆவணப்படம்.
அந்நிறுவனத்தில் பணியாற்றியபோது, ‘மறுகாலனியாக்கம்’ தொடர்பாக ஜூலியன் லிச்சினால்ட் பேசியதை பிரெஞ்சு பத்திரிகையாளர் மெலேனி கூபி ரகசியமாகப் படமெடுத்திருந்தார்.
உண்மையில், ‘நிர்வாகம்’ என்ற சொல்லுக்கு இங்கே பொருத்தமான அர்த்தம் வேறு. முழுவீச்சிலான கொள்ளை என்பதன் மறுபெயர்தான் ‘நிர்வாகம்’! எல்லாம் சரி, ஜூலியன் லிச்சினால்ட் சொல்வதுபோல் ஆப்பிரிக்காவை ‘நிர்வகிப்பது’ பற்றி ஐரோப்பியர்கள் தெளிவான பார்வையுடன் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. காலனி ஆதிக்கத்தின்கீழ் ரத்த ஆறு ஓடிய பிரதேசமாகவும், இன்னும் பல முறைகேடுகளுக்கும் இடமாக இருந்தது காங்கோ.
பெல்ஜிய அரசர் இரண்டாம் லியோபோல்டின் காலகட்டத்தில் பெல்ஜியத்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த காங்கோவின் வளங்கள் எப்படிச் சூறையாடப்பட்டன என்பதை இந்த ஆவணப்படம் பதிவுசெய்கிறது.
தேனும் தேனீக்களும் என்பதுபோல், பரந்த இயற்கை வளம் இருந்தால் அங்கே மோதல்களும் சகஜம் என்பது எல்லோரும் அறிந்த உண்மைதான்.
விருங்கா தேசியப் பூங்காதான் அந்தப் பகுதியின் ஒரே நம்பிக்கை என்று பிரெஞ்சு பத்திரிகையாளர் மெலேனி கூபி குறிப்பிடுகிறார். இதற்கிடையே, ‘அமைதி மற்றும் வளத்தின் வடிவமாக’ சுற்றுலாவை முன்னிறுத்துவது தொடர்பாக விருங்கா தேசியப் பூங்காவின் இயக்குநரும் பெல்ஜிய இளவரசருமான இம்மானுவேல் டி மெரோடு உலகப் பொருளாதார அரங்கில் கடந்த மாதம் பேசியிருந்தார்.
சிஎன்பிசி-க்கு அளித்திருந்த நேர்காணலில், “சுற்றுலாத் துறை தொடர்பான வேலைவாய்ப்புகளை உருவாக்கினால், இந்தப் பகுதியில் உள்நாட்டுப் போர்களைக் குறைக்கலாம்” என்று கூறியிருக்கிறார் இம்மானுவேல் டி மெரோடு.
ஆனால், உள்நாட்டுக் கலவரங்களுக்குச் சுற்றுலாதான் தீர்வு என்று கூறுவது பிரச்சினையை அதிகரிக்கும் ஒன்றுதான். அதுவும், ஊழல் புரையோடிப்போயிருக்கும் காங்கோவின் சாதாரண குடிமகனின் வாழ்க்கைத் தரம், சுற்றுலாவின் மூலம் மேம்படும் என்று சொல்வது எப்படிச் சாத்தியம் என்றுதான் தெரியவில்லை.
- தமிழில்: வெ. சந்திரமோகன்