Published : 04 Jan 2015 11:31 AM
Last Updated : 04 Jan 2015 11:31 AM

கண்ணில் தெரியும் இரு முகடுகள்

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிக்கொண்டிருக்கும் அதே சமயம், ஏழைகள் நிலையில் மாற்றமில்லை

வளர்ந்த நாடுகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வு வெகுவாக அதிகரித்துவருவது 2014-ல்தான் உரிய கவனத்தைப் பெற்றது. தாமஸ் பிக்கட்டி எழுதிய ‘இருபத்து ஓராவது நூற்றாண்டில் மூலதனம்’ என்ற நூல் அந்த அதிசயத்தை நிகழ்த்தியதுடன் விற்பனையிலும் சாதனை படைத்தது. இந்த நூல் கூறும் உண்மைகளையும் சந்தேகப் பிராணிகள் வழக்கம்போல நம்ப மறுத்தாலும், வருமானமும் செல்வமும் ஒரு சிலருடைய கைகளில்தான் போய்ச் சேருகின்றன என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலை இப்போதைக்கு மாறும் என்ற அறிகுறியும் ஏற்படவில்லை.

வருமானமும் செல்வமும் ஒரு சிலர் கைகளுக்கே மீண்டும் போய்ச் சேருவது என்பது, நாடுகளுக்குள் நடைபெறும் நிகழ்வுகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. ஆனால், பிக்கட்டியின் அலசல்களை ஆராய்ந்தால், நாம் வாழும் உலகு ஒரே மாதிரியானது அல்ல என்று புரிகிறது. அதில் நல்லது, மோசமானது, சகிக்க முடியாதது என்று மூன்று வகைகள் இருக்கின்றன.

சீனா, இந்தியாவில்…

நியூயார்க் பட்டதாரிகள் மையத்தைச் சேர்ந்த சிட்டி யுனிவர்சிட்டியைச் சேர்ந்த பிராங்கோ மிலனோவிக் தயாரித்துள்ள உலக வருமான வரைபடத்தை ஆய்வு செய்துபாருங்கள். ஜெர்மனியைப் பிரித்த பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது முதல் - உலகின் வருமானம் உயர் பணக்காரர்களிடமே தொடர்ந்து சேர்ந்துவருகிறது. அதாவது, பணக்காரர்கள் மேலும் பெரும் பணக்காரர்களாகிக்கொண்டு வருகின்றனர். அதே சமயம், சீனாவிலும் இந்தியாவிலும் நடுத்தர வர்க்கம் வருமான உயர்வால் பலனடைந்துவருகிறது.

வளரும் நாடுகளில் வருமானம் உயர்வதால் ஏராளமானவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழேயிருந்து மீண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கைத் தரம் மேம்பட்டிருக்கிறது.

துயரமான செய்தி

உலக வருமானம் உயருகிறது, அது பெரும் பணக்காரர்களிடம் மட்டுமே சேர்கிறது என்பதுடன் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் நடுத்தர வர்க்கமும் பயனடைந்துவருகிறது என்பதுடன் இன்னொரு துயரச் செய்தியும் சேர்ந்தே வருகிறது. அதுதான், இவ்விரு உதாரணங்களுக்கு இடையே வாழும் ‘பிற மக்களுக்கு’வருமான உயர்வு என்பது மிகமிக மந்தமாகத்தான் இருந்துவருகிறது. யார் இவர்கள்? வளர்ந்த நாடுகளின் உழைக்கும் வர்க்கத்தினர்தான்.

மிலனோவிக்கின் புத்தகம் 2008 வரையிலான வருமான உயர்வை மட்டும்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்றாலும், அதற்குப் பிறகும் வளர்ந்த நாடுகளின் உழைக்கும் வர்க்கத்தவரின் ஊதியம் பெரிதாக உயர்ந்துவிடவில்லை என்பதே உண்மை. அதுமட்டுமல்ல, வேலையில்லாத் திண்டாட்ட அதிகரிப்பு, முடங்கிவிட்ட ஊதியம், அரசின் பொருளாதார சிக்கன நடவடிக்கைகள் காரணமாக இவர்களுடைய நிலைமை மேலும் மோசமாகிவிட்டது.

வளரும் நாடுகளின் தொழிலாளர்களுடைய துயரம் என்பது அவர்களைவிட அதிக ஊதியம் பெறுவோருக்கும் குறைந்த ஊதியம் பெறுவோருக்கும் கிடைக்கும் சில சலுகைகள், உயர்வுகளைக்கூடப் பெற முடியாத இக்கட்டான சூழலாகும். வளரும் நாடுகள் தங்களுடைய ஏற்றுமதிகளைப் பெருக்கிக்கொள்ளக் கடுமையாக முயற்சிப்பதால் வளர்ந்த நாடுகளில் ஊதியத்தை மேலும் உயர்த்த முடியவில்லை. கீழே இருக்கும் பலருடைய ஊதியங்களை வெட்டித்தான் மேலே இருக்கும் நிர்வாகிகளுக்கு ஊதியங்களை உயர்த்தித் தருகின்றனர். ஊதியங்களை மட்டும் வெட்டுவதில்லை, சலுகைகளைப் பறிக்கின்றனர், தொழிற்சங்கங்களை நசுக்குகின்றனர், கிடைக்கும் மூலதனத்தை நாட்டின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தாமல் வேறு முதலீடுகளுக்கும் லாபங்களுக்கும் திருப்பிவிடுகின்றனர்.

பணக்காரர்கள் ஆதிக்கம்

பெரும் பணக்காரர்களும் தொழிலதிபர்களும்தான் அரசின் கொள்கைகளுக்குத் திசைவழி காட்டுகின்றனர். தங்களுக்கு வேண்டிய சலுகைகளைத் தாராளமாகக் கேட்டுப் பெறுகின்றனர். மற்றவர்களுக்குக் கிடைக்க வேண்டியதைத் தடுக்கின்றனர். அரசின் முக்கிய கடமை பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வதுதான் என்று கூறி, அரசின் செலவைக் கட்டுப்படுத்துகின்றனர். இதனால் சமூக நலத் திட்டங்களுக்கும் மக்களுடைய நல்வாழ்வுக்கும் அரசுகளால் அதிகம் செலவழிக்க முடியாமல் போய்க்கொண்டிருக்கிறது. இதனாலும், வருவாயிலும் செல்வத்திலும் ஏற்றத்தாழ்வு அதிகரித்துக்கொண்டே போகிறது.

​பெரும் பணக்காரர்களுக்கும் நவீன நடுத்தரவர்க்கத்துக்கும் இடையில் சிக்கித்தவிக்கும் பெரும்பாலான உழைக்கும் மக்க

ளுக்காகப் பரிந்துபேச யார் இருக்கிறார்கள்? வழக்கமான இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களைத்தானே எதிர்பார்க்கிறீர் கள்? ஆனால், பிரான்ஸின் அதிபர் பிராங்குவா ஹொலாண் டேவும் பிரிட்டனின் எட் மிலிபேண்டும் குரல் கொடுக்கிறார்கள். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஆதரவுக் குரல் மிகச் சன்னமாக ஒலிக்கிறது. அமெரிக்க உழைக்கும் வர்க்கத்தினருக்கு ஆதரவாக ஒபாமா செயல்பட்டிருந்தாலும் அவருடைய நிலைமையே இப்போது பரிதாபகரமாக இருக்கிறது.

தலைவர்களின் பிரச்சினை

உழைக்கும் வர்க்கத்துக்காகக் குரல் கொடுக்கும் இந்தத் தலைவர்கள், பணக்காரர்கள் முன்னிலைப்படுத்தும் விஷயங்களைக் கண்டிப்பதற்குத் தயங்குகிறார்கள். பட்ஜெட் பற்றாக்குறையை மையமாகக் கொண்டு அரசின் செலவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதைக் கண்டித்தால், பொறுப்பற்றவர்கள் என்று தங்களைக் கூறிவிடுவார்களோ என்று அஞ்சுகிறார்கள். எனவேதான் உழைக்கும் மக்களுக்காகக் குரல் கொடுக்க, இதுவரை தலைமை தாங்கியிராத புதுமுகங்கள் முன்வரத் தொடங்கியிருக்கிறார்கள். சாதாரண மக்களுடைய கவலை, கோபம் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முற்படும் அவர்களைப் பார்த்தால் சிறிது அச்சம்கூட ஏற்படுகிறது.

கிரேக்க நாட்டில் இம்மாத இறுதியில் இடதுசாரிகள்தான் ஆட்சிக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர்கள் கடன் நிவாரணத்தையும் அரசின் சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதையும்தான் முன்னிலைப்படுத்துகிறார்கள். பிற நாடுகளில் தேசியவாதிகள், குடியேறிகளுக்கு எதிரானவர்கள்தான் தலைதூக்குவார்கள் என்று தெரிகிறது. பிரான்ஸில் தேசிய முன்னணியினர், பிரிட்டனில் இண்டிபெண்டன்ஸ் கட்சியினர் போலப் பலர் காத்திருக்கின்றனர். இவையெல்லாம் வரலாற்றுரீதியிலான சில சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன.

பொருளாதார மந்தநிலை இத்தனை ஆண்டுகள் நீடிப்பதும் அதன் பிறகு நிதி நெருக்கடி ஏற்படுவதும் உலக அளவில் இப்போதுதான் இரண்டாவது முறையாக நிகழ்ந்துள்ளது. அப்போதும்கூட இப்போதிருப்பதைப்போலத்தான், அரசின் வருவாயும் செலவும் சமமாக இருக்க வேண்டும், செலாவணியின் மாற்று மதிப்பு சரியக் கூடாது என்றெல்லாம் அரசுகளுக்கு ஆலோசனைகள் கூறிக்கொண்டிருந்தனர். கடைசியில் என்ன ஆனது, மக்களுடைய கைகளுக்கு அதிகாரம் சென்றது; அப்படி நேரடியாகச் செல்வது நல்லதில்லை அல்லவா?

1930-களில் ஏற்பட்ட மாபெரும் பொருளாதார வீழ்ச்சி இப்போது ஏற்பட்டுவிட்டது என்று நான் கூறவில்லை. அரசியல் தலைவர்களும் மக்களுடைய எண்ணங்களை மதிக்கிறவர்களும் உண்மை நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். இப்போது நாம் ஏற்படுத்தியிருக்கும் உலகப் பொருளாதார முறைமை எல்லோருக்கும் ஏற்றதாக இல்லை. பெரும் பணக்காரர்களுக்குச் சாதகமாக இருக்கிறது, வளரும் சில நாடுகளுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. ஆனால், இந்த எல்லைக்கு அப்பாலிருக்கும் மக்களுடைய எண்ணிக்கை மிகமிக அதிகம். அவர்களுடைய நிலைமையைக் கவனித்து நாம் பரிகார நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் நிலைமை மிக மோசமாகிவிடும்.

- ‘தி நியூயார்க் டைம்ஸ்’, தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x