

இந்தியாவை இணைப்பதில் இலக்கியத்தின் சேவை மகத்தானது. சாகித்ய அகாடமி வெளியிட்டிருக்கும் இந்திய இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகள் குறிப்பிடத் தகுந்தவை என்பதுடன், மலிவான விலையில் அவை கிடைக்கின்றன என்பது வாசகர்களுக்கு முக்கியமான சேதி! புத்தகக் காட்சியில் சாகித்ய அகாடமி அரங்குக்குள் இலக்கியம், சமூகம் தொடர்பான மொழிபெயர்ப்புப் புத்தகங்கள், நேரடித் தமிழ்ப் புத்தகங்கள் என்று 300-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் வாசகர்களை அழைக்கின்றன.
மலையாள எழுத்தாளர் பால் சக்காரியா எழுதிய சிறுகதைகளின் தொகுப்பாக வெளியாகியுள்ள ‘சக்காரியாவின் கதைகள்’(தமிழில்: கே.வி. ஜெய, விலை: ரூ. 190), மலையாளக் கவிஞர் அய்யப்ப பணிக்கர் தொகுத்த ‘தற்கால இந்தியக் கவிதைகள்’ (தமிழில்: ராம் முகுந்தன், விலை: ரூ.100), மலையாள எழுத்தாளர் முகுந்தன் எழுதிய ‘தாய்ப்பால்’(தமிழில்: டி.சு. சதாசிவம், ரூ. 185) போன்ற புத்தகங்கள் முக்கியமானவை. சிற்பி. பாலசுப்ரமணியம், நீல. பத்மநாபன் தொகுத்திருக்கும் ‘புதிய தமிழ் இலக்கிய வரலாறு’(3 தொகுதிகள்) மிக முக்கியமான தொகுப்பு. சென்ற ஆண்டு நடந்த கண்காட்சியிலும் இடம்பெற்ற இந்தத் தொகுப்பின் விலை ரூ. 1,800. இந்த நூல் சலுகை விலையில் ரூ. 1200-க்குக் கிடைக்கிறது.