

திரை விமர்சகர் அம்ஷன்குமாரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு விஷயம் சொன்னார், ‘சென்னைப் புத்தகக் காட்சியின் ஆரம்ப வருடங்களில் முழுக்க ஆங்கிலப் பதிப்பாளர்களும் விற்பனையாளர்களுமே இருந்தார்கள். தமிழ்ப் புத்தகங்கள் அரிதினும் அரிதாக இருந்தன. ஆனால், இப்போது நிலைமை தலைகீழ்.’ அது முற்றிலும் உண்மை. கடந்த 25 ஆண்டுகளில் தமிழ்ப் பதிப்புலகின் வளர்ச்சியை சென்னைப் புத்தகக் காட்சியின் வளர்ச்சியைக் கொண்டே அளவிட்டுவிட முடியும்.
சென்னைப் புத்தகக் காட்சி முழுக்க முழுக்க ஊடகங் களின் துணையால் முன்னெடுக்கப்படும் ஒரு நிகழ்வு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பல தினசரிகள் தினமும் சிறப்புப் பக்கத்தை ஒதுக்கி, கண்காட்சிக்கும் புத்தகங்களுக்கும் பெரும் முக்கியத்துவம் அளித்தன. தமிழ்த் தொலைக்காட்சிகள் இதை ஒரு மாபெரும் நிகழ்வாக மாற்றின. ஆனால், எல்லாவற்றையும்விட புத்தகக் காட்சியில் சமூக வலைதளங்களின் பங்கு மிகவும் பிரதானமாகிவிட்டது. சமூக வலைதளங்களில் பேசப்பட்ட, விவாதிக்கப்பட்ட பல இளம் எழுத்தாளர்களுடைய நூல்கள் பிரபல எழுத்தாளர்களின் நூல்களுக்கு இணையாக விற்கப்படும் அதிசயத்தைக் கண்டேன். அத்தகைய சில இளம் எழுத்தாளர்களின் முதல் புத்தகத்தின் முதல் பதிப்பு புத்தகக் காட்சியிலேயே விற்றுத் தீர்ந்த பேரதிசயமும் நிகழ்ந்திருக்கிறது.
இந்தப் புத்தகக் கொண்டாட்டங்கள் சென்னை புத்தகக் காட்சியுடன் முடிந்துபோக வேண்டுமா? தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டத் தலைநகரங்களில் ஆண்டு முழுக்க புத்தகக் காட்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் ஈரோடு, மதுரை புத்தக் காட்சிகள் தவிர, மற்றவை இன்னும் வளர்ச்சி பெறாதவை. பெரும்பாலும் அவை நஷ்டத்தையே பதிப்பாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் ஏற்படுத்து கின்றன. பல ஊர்களில் நடக்கும் புத்தகக் காட்சிகளை மக்களிடம் கொண்டுசெல்வதற்கு அதை ஏற்பாடு செய்பவர்கள் போதுமான முயற்சிகள் எடுப்பதில்லை என்பதுதான் உண்மை.
பெரம்பலூர் போன்ற சிறிய ஊரில் மாவட்ட ஆட்சியரின் முன்முயற்சியால் வெற்றிகரமாகக் கண்காட்சியை நடத்த முடிகிறது. ஆனால், பல ஊர்களில் அத்தகைய ஆதரவு கிட்டுவதில்லை. முக்கிய மாக, உள்ளூர் ஊடகங்கள் அவற்றை அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை. அங்கெல்லாம் கண்காட்சி ஏற் பாட்டாளர்களும் அரங்குகளை அமைப்பதோடு தங்கள் கடமையை முடித்துக்கொள்கிறார்கள்.
உள்ளூர் பண்பாட்டு அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகளின் ஆதரவு கண் காட்சிக்கு மிகவும் அவசியம். ஈரோடில் ஸ்டாலின் குணசேகரன் ஒரு சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பிற ஊர்களில் கண்காட்சிகள் நடத்துபவர்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. கோவை, திருச்சி போன்ற நகரங்களில் இன்னும் பெரிய அளவிலான புத்தகக் காட்சிகள் இல்லை. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் - மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இதை உடனடியாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இணையத்தில் புத்தகங்களை வாங்கக் கூடிய வசதிகள் அதிகரித்துவிட்டன. 20-க்கும் மேற்பட்ட தளங்களில் இப்போது ஆன்லைனில் நேரடியாகத் தமிழ்ப் புத்தகங்களை வாங்க முடிகிறது. புத்தகக் காட்சிக்கு வந்தால்தான் புத்தகங்களை மொத்தமாகப் பார்த்து வாங்க முடியும் என்ற நிலை மெல்ல மாறிவருகிறது. அப்படி வாங்கக் கூடியவர்கள் இந்த ஆண்டில் கணிசமாகக் குறைந்துவிட்டதுபோல உணர்கிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் புத்தக விற்பனையில் பெரும்பகுதியை இணையதளங்கள் எடுத்துக்கொள்ளும் என்று நம்புகிறேன். அப்படியெனில், புத்தக் காட்சிகள் என்னவாகும்? மனிதனின் திருவிழா மனநிலை இருக்கும் வரை புத்தகக் காட்சிகளும் இருக்கும். அதை நாம் ஒரு புத்தகம் விற்கும் இடமாக மட்டும் இல்லாமல் பண்பாட்டு நிகழ்வாகவும் மாற்றும்போதுதான் புத்தகக் காட்சிகள் தனது இருப்புக்கான புதிய நியாயங்களைத் தேடிக்கொள்ளும்!
மனுஷ்யபுத்திரன் - கவிஞர், பதிப்பாளர், அரசியல் விமர்சகர்