

தமிழகம் முழுவதும் உள்ள இலக்கிய வட்டத்தினரிடம் சு.வெங்கடேசன் என்ற பெயர் எப்படி அறிமுகம் என்று கேட்டால், முதலில் அவர்கள் சொல்லும் பதில் தேர்ந்த வாசகர் என்பதாகவே இருக்கும். சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்தக் ‘காவல் கோட்டம்’ எழுத்தாளர் முதல் நாள் அன்றே சென்னைப் புத்தகக் காட்சிக்காக மதுரையிலிருந்து வந்துவிட்டார்.
“தமிழ்ல நல்ல புத்தகங்கள் வர்றது நாளுக்கு நாள் அதிகமாயிட்டிருக்கு. ஒரு வாசகனா நாமளும் நாளுக்கு நாள் நம்மளை மேம்படுத்திக்க வேண்டியிருக்கு.
எப்போதுமே சென்னைப் புத்தகக் காட்சிக்கு வரும்போது கையில ஒரு பட்டியலோடதான் வருவேன். இந்த முறையும் பட்டியலோடதான் வந்தேன்.
தேனி சீருடையான் எழுதின ‘நிறங்களின் மொழி’. இந்தப் புத்தகத்தோட சிறப்பு மனோகர் தேவதாஸின் அற்புதமான ஓவியங்கள் (விகடன் பிரசுரம்). அருணன் எழுதின ‘கடவுளின் கதை’ (வசந்தம் வெளியீட்டகம்), ஆதவன் தீட்சண்யாவோட ‘மீசை என்பது வெறும் மயிர்’, பெருமாள் முருகன் எழுதின ‘அர்த்தநாரி’ (காலச்சுவடு), கலாநிதி எஸ்.சிவநேசன் எழுதின ‘இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன்’ (குமரன் புத்தக இல்லம்) இதெல்லாம் பட்டியல்ல உள்ள புத்தகங்கள்ல வாங்கினது. தவிர, நிறைய இங்கே கண்டுபிடிச்ச புத்தகங்களையும் வாங்கியிருக்கேன். அப்புறம் பார்க்கலாம், நிறைய வாங்க வேண்டியிருக்கு!”
மூட்டையும் கையுமாக அடுத்தடுத்த அரங்குகளை நோக்கி நகர்கிறார் வெங்கடேசன்!