

காரணமும் காரியமும் ஒரு சுழற்சி என்று நம்பும் மரபு நமது. அது ஒரு சங்கிலித் தொடர். சரித்திரம் திரும்புகிறது என்று சொல்வதும் இந்த அர்த்தத்தில்தான். உலகில் நடப்பது எதுவுமே புதியதில்லை. நடப்பதே திரும்பத் திரும்ப நடக்கிறது. ஏனெனில், அதன் சூத்ரதாரி மனிதனே. பல சமயங்களில், அநேகமாக எல்லாச் சமயங்களிலும், காரணங்களை ஆராயாமல் இருப்பது நிம்மதி. தர்க்கத்துக்குப் புறம்பாக நடைபெறும் மனிதச் செயல்களுக்கு விஞ்ஞான விளக்கங்கள் கிடைக்கப்போவதில்லை. மனோதத்துவ விளக்கங்கள் அயர்வைத் தருபவை.
இதயமற்ற அரக்கர்கள்
சமீபத்தில் அடுத்தடுத்து நடந்திருக்கும் இரண்டு மிகப் பெரிய அதிர்வைத் தரும் சம்பவங்கள் அறிவார்த்தமான தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவை. முதலில் நடந்த அந்த ரத்தத்தை உறைய வைத்த பெஷாவர் படுகொலைகள். பச்சிளம் சிறுவர், சிறுமியரைப் பலிகடாக்கள் ஆக்கிய குரூரத்தனமான, அரக்கத்தனமான பயங்கரவாதம். உலகமே ஸ்தம்பித்து வெகுண்டது. அந்தச் செயலுக்கும் பல அரசியல் வல்லுநர்கள் ரிஷி மூலம் நதி மூலம் ஆய்ந்து விளக்கம் தர முயன்றார்கள். பாகிஸ்தான் ராணுவத்தின் மேல் இருந்த கோபத்தை அவர்களது சந்ததியினர் படிக்கும் பள்ளியை நிர்மூலமாக்கித் தீர்த்துக்கொண்டார்களாம். இறைவனின் பெயரில் அத்தகைய கிராதகத்தைச் செய்யும் மனங்களில் இறைவன் எப்படி இருக்க முடியும்? அவர்கள் எந்த மதத்தையும் சேர்ந்தவர்கள் இல்லை. மத அடிப்படைவாதிகள்கூட இல்லை. வெறும் இதயமற்ற அரக்கர்கள் மட்டுமே. அவர்களை இஸ்லாமியர் என்று தயவுசெய்து சொல்லாதீர்கள்.
கோர தாண்டவம்
ஜனநாயக உலகத்தை உலுக்கிய மற்றுமொரு நிகழ்வு, சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகை அலுவலகத்தில் பட்டப் பகலில் நடந்த படுகொலை. கொலையாளிகள் அலுவலகத்தினுள் நுழைந்து, அங்கு அமர்ந்திருந்த பத்திரிகையாளர்களைப் பெயர் சொல்லி விளித்து, நீயா… நீயா என்று கேட்டு, ஒரு முஸ்லிமையும் சேர்த்து 12 பேரைச் சுட்டுக் கொன்று, அல்லாஹு அக்பர், அல்லாவின் புகழ் காப்பாற்றப்பட்டது என்று கத்தியபடி தப்பியவர்களின் கோர தாண்டவம்.
அப்பத்திரிகையின் கார்ட்டூன்கள் மிகவும் உணர்வு பூர்வமான விஷயங்களைப் பரிகசிப்பதற்குப் ‘பேர்’ போனவை. தொடர்ந்து இஸ்லாமிய மதத்தையும் நபிகள் நாயகத்தையும் பரிகசித்தவை. பிரான்ஸ் நாடு ஜனநாயக நாடு. கருத்துச் சுதந்திரத்துக்கு அங்கே எந்த விதத் தடைகளும் கிடையாது.
சிரிக்க வையுங்கள்
பிரான்ஸின் இத்தகைய கட்டுப்பாடற்ற கருத்து / பேச்சு சுதந்திரத்துக்கான சட்ட அமைப்பு விவாதத்துக்குரியதா என்பது ஒருபக்கம் இருக்கட்டும்... அந்த இதழ் அத்துமீறிச் சென்றதா, மற்ற இனத்தவரை அநாவசியமாகக் கோபத்துக்குள்ளாக்கிற்றா என்கிற விவாதமும் இருக்கட்டும். எழுத்தோ கேலிச்சித்திரமோ எப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்தியிருந்தாலும், அதை உருவாக்கியவர்களுடைய உயிரைப் பறிப்பதற்கு எவருக்கும், எந்தக் காரணத்துக்காகவும், உரிமை இல்லை. ‘‘நீங்கள் மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அவர்களைச் சிரிக்க வையுங்கள், இல்லாவிட்டால் அவர்கள் உங்களைக் கொன்று விடுவார்கள்’’ என்றார் நக்கலுக்குப் பெயர்போன எழுத்தாளர் ஆஸ்கர் வைல்டு.
சிரிக்க வைக்க முடியாத தொலைவுக்குத் தள்ளப்பட்டவர்கள் அவர்கள் என்று பொருள்படும்படி ‘கார்டியன்’ பத்திரிகையில் ஜோ ஸாக்கோ என்கிற கார்ட்டூனிஸ்ட் எழுதியிருக்கிறார். ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகையில் யூதர்களைப் பற்றிப் பரிகாசமாக ஏதும் கார்ட்டூன் வராது என்கிறார். அந்தப் பத்திரிகை இனவெறி மிகுந்தது என்கிற வாதம் இப்போது தலையெடுக்கிறது.
கொலை வெறியர்கள்
இப்படியெல்லாம் காரணம் தேடுவது, கொலை களுக்கு நியாயம் கற்பிப்பதாக இல்லையோ? காரணம் நமக்குத் தேவையில்லை. என்ன காரணம் இருந்தால் என்ன? உடனே, துப்பாக்கி ஏந்தி உயிரைப் பறிக்க யார் உனக்கு அதிகாரம் கொடுத்தது? எண்ணங்களைப் பொசுக்கிவிடலாம் என்கிற மூர்க்கத்தை நீ எங்கிருந்து என்ன காரணத்துக்காகக் கற்றிருந்தால் என்ன? அந்தக் கொலை வெறியர்களைத் தயவுசெய்து இஸ்லாமியர்கள் என்று சொல்லாதீர்கள். அவர்கள் கடவுளை மறுப்பவர்கள். அல்லாவின் பெயரைச் சொல்லி தினம் தினம் அவரது படைப்பை அழிப்பவர்கள்.
தங்களால் துன்பப்படுபவர்கள், அவமானப்படு பவர்கள், மாறாத களங்கத்தைச் சுமப்பவர்கள் அப்பாவி இஸ்லாமியர்களே என்று அந்த மூர்க்கர்கள் அறிய மாட்டார்கள். அவர்களது அட்டூழியம் உலகின் எந்த மூலையில் நடந்தாலும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஆபத்து.
அந்த மூர்க்கர்களை இஸ்லாமியர் என்று சொல்லாதீர்கள், தயவுசெய்து.
- வாஸந்தி, எழுத்தாளர், முன்னாள் ஆசிரியர் - இந்தியா டுடே, தொடர்புக்கு: vaasanthi.sundaram@gmail.com