

கே.என். ராமசந்திரன், எழுத்தாளர்.
இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதியிருக்கிறார் கே.என். ராமசந்திரன். 45 நூல்கள் வெளியாகியிருக்கின்றன. “எழுதுறது மாதிரி பல நூறு மடங்கு படிப்பேன்” என்று சிரிக்கிறார்.
“தமிழ்ல இலக்கியப் புத்தகங்கள் வர்ற அளவுக்கு அறிவியல் புத்தகங்கள் அதிகம் வர்றதில்லை. ஏன்னா, தமிழ்ல அறிவியல் எழுத்தாளர்கள் ரொம்பக் குறைவு. சுஜாதாவோட அறிவியல் புனைகதைகளை விரும்பிப் படிப்பேன். அறிவியல் கட்டுரைகளை எழுதுறப்ப அனைவரும் விரும்பிப் படிக்கிற ஒரு மொழி நடையில எழுதுறது ரொம்பவும் அவசியம். யானைக்கால் நோய்க்கு மருந்து கண்டுபிடிச்ச டாக்டர் சுப்பா ராவ் இந்தியாவோட முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள்ல ஒருத்தர். உலக அளவுலயும் ரொம்ப முக்கியமானவர் அவர். ஆனா, வாழ்நாள் முழுக்க அவருக்குப் புறக்கணிப்புதான் பரிசா கிடைச்சுது. அவர் போன்ற மேதைகளோட புத்தகங்கள் தொகுக்கப்பட்டு, இதுமாதிரி புத்தகக் காட்சிகள்ல பரவலா கிடைக்கணும்கறதுதான் என்னோட ஆசை.
எனக்கு ராஜாஜி, கல்கியின் எழுத்துக்கள் ரொம்பப் பிடிக்கும். ராஜாஜியோட ‘வியாசர் விருந்து’, மணியன் செல்வன் ஓவியங்களோட வெளிவந்திருக்கிற கல்கியோட ‘பொன்னியின் செல்வன்’னு முக்கியமான புத்தகங்களை வாங்கியிருக்கேன்” என்கிறார் கே.என்.ஆர். சந்தோஷமாக.
மகிழ் திருமேனி, இயக்குநர்.
இயக்குநர் மகிழ் திருமேனி! தன் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இந்த இளைஞர், அதிரடியான மூன்றாவது படத்தில் அழுத்தமான வெற்றி முத்திரையைப் பதித்துவிட்டார். ஆர்யா நடிப்பில் இவர் இயக்கிய ‘மீகாமன்’ திரைப்படம், வணிகப் படங்களின் தடத்திலேயே புதிய அனுபவத்தைக் கொடுத்தது. ரசிகர்கள், விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டைப் பெற்றிருக்கும் மகிழ் திருமேனி புத்தகக் காட்சியில் அரங்கங்களுக்குள் புகுந்து விளையாடிக்கொண்டிருந்தார்.
“ஒரு வாசகனா, ரசிகனா இல்லாம கலைஞனா உருவாக முடியாது. புத்தகங்கள் மூலமாகத்தான் உலகத்தை நான் தெரிஞ்சுக்கிட்டேன். திரைத் துறையை நோக்கிய என்னோட பயணத்துல, சக பயணிகளாக இருக்குறதும் புத்தகங்கள்தான்” என்கிறார். “சாகித்ய அகாடமி விருது வாங்கிய பூமணியோட ‘அஞ்ஞாடி…’, ஹெச்.ஜி. ரசூலோட ‘தலித் முஸ்லிம்’ (பாரதி புத்தகாலயம்), ராஜ் கௌதமனோட ‘கலித்தொகை - பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு’ இதுபோல நிறைய வாங்கினேன். தி. ஜானகிராமனோட ‘அம்மா வந்தாள்’ பத்தி நண்பர்கள் நிறைய சொல்லியிருக்காங்க. இந்த முறை அந்தப் புத்தகத்தை வாங்கினதில கூடுதல் சந்தோஷம்” என்று மகிழ்ச்சியுடன் விடைபெறுகிறார் மகிழ் திருமேனி!
ஜோ டி குருஸ், எழுத்தாளர்.
தனது ‘கொற்கை’ நாவலின் மூலம், 2013-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்ற ஜோ டி குருஸ், ஒவ்வொரு அரங்காகப் புத்தக வேட்டையாடிக்கொண்டிருந்தார். “கண்மணி குணசேகரன் எழுதிய ‘வந்தாரங்குடி’, தேவிபாரதி எழுதிய ‘நிழலின் தனிமை’, ஜெயமோகனோட ‘கொற்றவை’, லா.ச.ர. எழுதிய ‘புத்ர’, பிரான்சிஸ் கிருபா எழுதிய ‘கன்னி’, கார்த்திக் புகழேந்தி எழுதிய ‘வற்றாநதி’ன்னு முக்கியமான புத்தகங்களை வாங்கினேன். மன உறவுகளைப் பத்திப் பேசுற குறுநாவலான ‘ஆட்டம்’ (சு. வேணுகோபால்), குழந்தைகளோட உலகத்துக்குள்ள நம்ம கையப் பிடிச்சி கூட்டிட்டுப்போற ‘ஆதிரையின் கதைசாமி’ (கவை பழனிச்சாமி) மாதிரியான புத்தகங்களை வாங்குனதில மனசுக்குத் திருப்தி” என்றவாறு அடுத்த அரங்கை நோக்கி நகர்கிறார் ஜோ டி குருஸ்.