Last Updated : 19 Jan, 2015 09:05 AM

 

Published : 19 Jan 2015 09:05 AM
Last Updated : 19 Jan 2015 09:05 AM

அப்போதே விமானம் விட்டவர்களின் வரலாறு!

தொன்மையான மற்ற கலாச்சாரங்களிலும் விமானங்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.

ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னால் விமானம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறியது பலருக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது. நமது முன்னோர்கள் எழுதி வைத்ததை ஏற்றுக்கொள்ளாமல் எப்படி இருக்க முடியும் என்ற பேச்சும்வருகிறது. ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்பைச் சார்ந்தது. ஆனால், தற்கால அறிவி யலின் அடிப்படையே முன்னோர்கள் சொன்னதை ஆராயாமல் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே.

கலீலியோ இன்று கொண்டாடப்படுவதன் காரணங் களில் ஒன்று, அவர் அரிஸ்டாட்டிலின் கூற்று ஒன்று தவறு என்று நிரூபித்ததால்தான். இரு பொருட்களை உயரத்திலிருந்து கீழே போட்டால், பருமனான பொருள் முதலில் தரையில் விழும் என்று அரிஸ்டாட்டில் சொல்லியிருந்தார். இதைச் சரி என்று - அரிஸ்டாட்டில் போன்ற மாமேதை சொன்னதால் - இரண்டாயிரம் ஆண்டுகள் நம்பிக்கொண்டிருந்தார்கள். கலீலியோ அரிஸ்டாட்டில் சொன்னது தவறு என்று நிரூபித்தார்.

நம்மிடம் விமானம்பற்றிய தொழில்நுட்பம் இருந்திருக்கலாம், ஆனால் அழிக்கப்பட்டுவிட்டது என்றும் சொல்லப்படுகிறது. யார் அழித்தார்கள் என்ற கேள்விக்குப் பதில் கிடைக்காது. இந்தியாவில் முதல் அந்நியப் படையெடுப்பு நிகழ்ந்தது அலெக்சாண்டர் காலத்தில். அவர் விமானத்தைப் பார்த்திருந்தால் நிச்சயம் பதிவு பெற்றிருக்கும். அவரும் அன்றைய இந்தியாவின் மேற்குப் பகுதியைத் தாண்டி வரவில்லை. இங்கிருந்ததாகக் கூறப்படும் விமானம் எங்கே போனது?

சரி, நமக்கு விமானம் செய்யும் திறமை இருந்தது என்றே வைத்துக்கொள்வோம். நம்முடைய எதிரி நம்மை வென்றவுடன் அந்தத் திறமையைத் தனதாக்கிக்கொள்ள முயல்வானா அல்லது அழிக்கப் பார்ப்பானா?

மேலும், விமானம் என்பது நாம் நினைப்பதுபோல இந்தியக் கலாச்சாரத்தின் தனிச் சொத்து அல்ல. நம்மைப் போன்ற பல புராதனக் கலாச்சாரங்களில் அதைப் பற்றி பேசப்பட்டிருக்கிறது. நம்மில் சிலர் சொல்வதுபோல உலகத்தின் மற்ற இடங்களிலும் விமானம் எங்கள் சொத்து என்று சொல்லிக்கொள்கிறவர்கள் இருக் கிறார்கள்.

எகிப்தியக் கலாச்சாரம்

எகிப்தில் அபிடோஸ் என்ற இடத்தில் இன்றைக்கு 3,200 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த முதலாம் சேதி மன்னரின் கல்லறை இருக்கிறது. இந்த கல்லறையில் இருக்கும் சுவர் ஒன்றில், விமானம், ஹெலிகாப்டர், நீர்மூழ்கிக் கப்பல் போன்றவற்றின் வடிவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்லப்பட்டது. படத்தைப் பார்த்தால் நமக்கும் அப்படித்தான் தோன்றும் (http://en.wikipedia.org/wiki/Abydos,_Egypt#mediaviewer/File:Hieroglif_z_Abydos.jpg). எகிப்தில் அந்தக் காலத்திலேயே விமானம் மட்டுமல்ல, ஹெலிகாப்டர், நீர் சப்மரைன் போன்றவையும் இருந்தன என்பதற்கு இதைவிடச் சிறந்த ஆதாரம் இருக்க முடியாது என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஆராய்ச்சியாளர்கள் இது இயற்கையால் நேர்ந்த அரிப்பாலும் சுவர் செப்பனிடப்பட்டதாலும், பட எழுத்துக்கள் உருமாறியதால் நேர்ந்தது என்று நிரூபணம் செய்துவிட்டார்கள். மேலும், அவர்கள் கேட்கும் கேள்விகள் இவை: விமானம் முதலியவை எகிப்தியரிடம் உண்மையாகவே இருந்திருந்தால், அவற்றின் வடிவங்கள் எங்கோ ஒரு ஓரத்தில் இருக்கும் கல்லறையில் மட்டும் காணப்படுவது ஏன்? பல கல்லறைகளில் அவற்றின் வடிவங்கள் பதிவு பெற்றிருக்க வேண்டுமல்லவா? இருந்திருந்தால் எப்படி மாயமாக மறைந்துபோயின?

கிரேக்கக் கலாச்சாரம்

கிரேக்கப் புராணங்களில் இகரஸ் என்பவரின் கதை மிகவும் புகழ் பெற்றது. இகரஸின் தந்தை டெடலஸ் மிகப் பெரிய பொறியாளராக அறியப்பட்டவர். அவர் மெழுகினால் இறக்கைகளை அமைத்துப் பறக்கும் திறமையைப் பெற்றார். இகரஸ் கேட்டதால், அவருக்கு இறக்கைகளைச் செய்துகொடுத்தார். சூரியனுக்கு அருகே பறக்காதே என்று மகனிடம் தெளிவாகச் சொல்லியிருந்தார். ஆனால், மகன் உயர உயரப் பறக்கும் ஆர்வத்தில் சூரியனுக்கு அருகே சென்றுவிட்டார். மெழுகு உருகி கடலில் விழுந்து முழுகிப்போனார். இது கதை. ஆனால், டெடலஸ் செய்தது இப்போது இருக்கும் கிளைடர்களுக்கு முன்னோடி என்றும், அவரும் அவரது மகனும் கிரீட்டியிலிருந்து கிரேக்க பூமிக்கு 70 மைல்களுக்கும் மேல் பறந்துசென்றார்கள் என்றும் சத்தியம் செய்பவர்கள் இன்றும் மேற்கத்திய நாடுகளில் இருக்கிறார்கள். அதே மாதிரி மாடல் செய்து பறக்கலாமா என்று முயன்றுகொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்.

சீனக் கலாச்சாரம்

இன்றைக்கு 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே சீனாவில் பறக்கும் இயந்திரத்தைப் படைக்கும் முயற்சிகள் நடந்திருக்கின்றன என மோ லூ கேள்விகள் என்ற புத்தகம் சொல்லுகிறது. கோங்ஷூ என்பவர் மரத்தையும் மூங்கிலையும் கூர்மையாக்கி ஒரு மரப் பறவையைத் தயாரித்து, அதை வானில் பறக்கவிட்டதாகவும் அது மூன்று நாட்கள் வானத்தில் பறந்த பிறகு தரை சேர்ந்ததாகவும் அந்தப் புத்தகம் கூறுகிறது. இது நடந்து சுமார் 1,000 ஆண்டுகளுக்குப் பிறகு, சீனச் சக்ரவர்த்தி ஒருவர் மனிதர்களைப் பட்டங்களில் கட்டிப் பறக்க விட்டாராம். 60-க்கும் மேற்பட்டவர்கள் கீழே விழுந்து உயிரிழந்தார்கள். ஒருவர் மட்டும் சிறிது தூரம் பறந்து சென்று பத்திரமாகத் தரையிறங்கினார்.

சீன ராக்கெட்டைப் பற்றிய கதை சுவாரசியமானது. 16-ம் நூற்றாண்டில் வான் என்பவர் நாற்காலி ஒன்றில் 47 ராக்கெட்டுகளை இணைத்து, அதன் மீது அமர்ந்து, 47 ராக்கெட்டுகளை ஒரே சமயத்தில் பற்ற வைக்கும்படி வேலைக்காரர்களிடம் சொன்னார். அவர்கள் பற்ற வைத்துவிட்டுத் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி ஒளிந்துகொண்டார்கள். சிறிது நேரத்தில் ஒரு பெரிய வெடிச் சத்தம். எங்கும் புகை. புகை விலகியதும் நாற்காலியையும் காணோம். அதில் அமர்ந்திருந்த வரையும் காணோம்! இன்றுவரை திரும்பவில்லை.

குவிம்பாயா கலாச்சாரம்

தென்அமெரிக்காவில் இருக்கும் கொலம்பியாவின் குவிம்பாயா கலாச்சாரம் மிகுந்த புகழ் பெற்றது. தங்கத்தில் அமைந்த இதன் பொம்மைகள் மிகவும் அழகானவை. அவற்றில் ஒன்றுதான் ‘குவிம்பாயா விமானம்’ என்று அழைக்கப்படும் பொம்மை. அதன் படத்தைப் பார்த்தால், உண்மையிலேயே இன்றைய விமானம் போலவே இருக்கிறது (http://en.wikipedia.org/wiki/Quimbaya_artifacts#mediaviewer/File:Avion_quimbaya.jpg).

குவிம்பாயா விமானம் 1,000 ஆண்டுகள் புராதன மானது. விமானமல்ல, மீனைப் பார்த்து வடிவமைக்கப்பட்ட பொம்மை இது என்று அறிஞர்கள் சொன்னாலும், அதை நம்பாதவர்கள் பலர் இருக்கிறார்கள். 1994-ம் ஆண்டு இரண்டு ஜெர்மன் பொறியியல் வல்லுநர்கள் குவிம்பாயா பொம்மை போன்ற மாடல் ஒன்றைச் செய்து, அதில் இன்ஜின் ஒன்றைப் பொருத்தி அதைப் பறக்க வைப்பதில் வெற்றியும் கண்டார்கள். இதனால், குவிம்பாயா கலாச்சாரத்தில் விமானம் இருந்தது என்று சொல்ல முடியுமா? சொல்ல முடியாது என்பதற்குப் பல ஆதாரங்கள் இருக்கின்றன.

குவிம்பாயா மக்கள் பழங்குடி மக்கள். நரமாமிசம் சாப்பிடுபவர்கள். எதிரிகள் அகப்பட்டால், அவர்களைப் பெரிய பானைகளில் வேக வைத்து உண்பார்கள் என்று வரலாற்றுப் புத்தகங்கள் சொல்கின்றன. ஆண்கள் ஆடை இல்லாமல் திரிந்தார்கள். தங்கத்தை உப்போடு பண்டமாற்று செய்துகொண்டார்கள். ஒருவர் இறந்தால், அவரோடு மூன்று அல்லது நான்கு பெண்கள் உயிரோடு புதைக்கப்பட்டார்கள். இவர்கள் விமானத்தில் ஏறி எங்கு சென்றிருக்க முடியும்?

எனவே, ஆகாய விமானத்தைப் பழங்காலத்தில் தேடுவதை விடுவதுதான் அறிவார்ந்த செயலாக இருக்கும். இல்லை, புராதனப் புத்தகங்களில் அதைப் பற்றிச் செய்திகள் இருக்கலாம், தேடத்தான் வேண்டும் என்று சிலர் புறப்பட்டால், அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

- பி.ஏ. கிருஷ்ணன்,

‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x