Last Updated : 30 Jan, 2015 09:03 AM

Published : 30 Jan 2015 09:03 AM
Last Updated : 30 Jan 2015 09:03 AM

காந்தி: இந்தியாவின் வை-ஃபை

இன்றைய உலகத்தில் காந்தி ஏன் மீண்டும் மீண்டும் தேவைப்படுகிறார்?

உலகின் முதுகெலும்பு அறம்தான். அந்த அறம்தான் அன்பை உருவாக்குகிறது. இதை வேறு வழியிலும் சொல்லலாம். அன்புதான் அறத்தை உருவாக்குகிறது. ஒட்டுமொத்த உலகமும் முதுகெலும்பு இல்லாமல் ஒடிந்துவிழும்போல்தான் இருக்கிறது. அறம் இல்லாதது, அன்பு இல்லாதது வீழும். இதைத்தான் மிகச் சரியாக வள்ளுவர் சொல்கிறார், ‘என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்’.

இயற்கை என்பது அறம், நீதி, அநீதி எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது. இந்தக் கோட்பாடுகளெல்லாம் மனிதர்கள் தங்கள் வாழ்வின் தேவைகளுக்காக உருவாக்கிக்கொண்டவை. இயற்கையின் படைப்புகளில் தனியொரு இனமாக நாம் விரிவடைந்துவிட்டோம் எனும்போது, நமது ஒட்டுமொத்த வாழ்க்கைக்கென்று ஓர் ஒழுங்கு தேவைப்படுகிறது.

ஒற்றையடிப் பாதைக்கென்று போக்குவரத்துக் காவலரோ சிக்னலோ தேவையில்லை. ஆனால், வாகன நெரிசல் மிகுந்திருக்கும் அண்ணா சாலையில் போக்குவரத்துக் காவலரோ சிக்னலோ இல்லையென்றால் என்னவாகும் என்று நம்மால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதல்லவா? இப்படியொரு கட்டத்துக்கு மனித குலம் வந்துவிட்டபின் அன்பும் அறமும் மிகமிக இன்றியமையாத தேவைகளாகிவிட்டன. அவைதான் நமது வாழ்க்கையின் மையம். அவற்றிலிருந்து எவ்வளவு விலகிச் செல்கிறோமோ அவ்வளவு அழிவுகளை நாம் சந்திக்கிறோம். அறம் வீழ்ந்து கிடக்கும் சமுதாயத்துக்கு அறத்தின் அவசியத்தை எடுத்துக்காட்ட காலந்தோறும் ஓர் உதாரணம் தேவைப்படுகிறது. நம் காலத்தின் மகத்தான உதாரணம் காந்தி.

அறத்துக்கும் சமரசம் சார்பென்ப…

காந்தி காலத்திலும் சரி, அதற்குப் பின்பும் சரி, தங்கள் துறைகளில் மட்டும் அல்லது தனிப்பட்ட வாழ்வில் அறத்தைக் கடைப்பிடித்தவர்கள் / கடைப்பிடிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு பெரிய களத்துக்கு வரும்போது ஏகப்பட்ட சமரசங்கள் செய்துகொண்டு ‘அறத்துக்கும் சமரசம் சார்பென்ப’ என்ற இலக்கணத்தை வகுத்துக்கொண்டு வாழ்பவர்கள்தான் ஏராளம். மிகப் பெரிய அளவுக்கு அறத்தைக் கடைப்பிடிப்பது, பரிசோதிப்பது மிகவும் கடினம். சுயநலம், உயிர் பயம், அடுத்தவர் நலன்கள், முரண் கருத்துகள், தன்னைப் பற்றித் தவறான அபிப்பிராயம் ஏற்பட்டுவிடலாம் என்ற அச்சம், பெரும்பான்மையினரின் ஆதரவை இழந்துவிடும் நிலை, அதனால் தனது நலனும் தன்னைச் சார்ந்திருப்பவர்களின் நலனும் பாதிக்கப்பட்டுவிடக் கூடும் என்ற அச்சம் இப்படி ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. இந்தக் காரணங்களில் சிலவற்றுக்குத் தற்காலிக நியாயமும் இருக்கிறது.

தனிமனித வாழ்விலும், தொடக்க கால சமூக/அரசியல் வாழ்விலும் அறத்தைக் கடைப்பிடித்தவர்கள் பெரிய களத்தில் இறங்கும்போது என்னவாகிறார்கள்? அவர்கள் அறத்திலிருந்து பிறழ்ந்து சரிவதன் குறியீடுதான் நம்முடைய தலைவர்களின் வீழ்ச்சி. இதில் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சமூக சேவகர்கள், போராளிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் என்று பலருமே அடங்குவார்கள். நல்ல காரியங்கள் செய்பவர்கள்கூட சமரசம் செய்துகொண்டால் மேலும் நன்மை கிடைக்கலாம் என்பதற்காக அறத்திலிருந்து பிறழ்வது நிதர்சனம். அதாவது, நன்மைக்காக அறம் பிறழ்தல். இதுதான் அறத்தின் இடத்தை மேலும் கேள்விக்குறியாக்குகிறது. அதாவது, நன்மைக்கும் அறத்துக்கும் தொடர்பில்லை என்ற பெரும்பாலானோரின் எண்ணத்தை இது உறுதிப்படுத்துகிறது.

அறத்தைக் கடைப்பிடிப்பதில் இவ்வளவு சவால்கள் இருக்கின்றன. ஆனால், தான் நம்பிய அறத்துக்காகவே வாழ்ந்து, அந்த அறத்துக்காகவே கொல்லப்பட்ட ஒருவர்தான் காந்தி. அறத்துக்கு ஒவ்வொருவரும் ஒரு பெயர் வைத்திருப்பார்கள். காந்தி வைத்த பெயர் சத்தியம். அதைத்தான் இறுதி வரை கடவுளாக நினைத்து வழிபட்டார். அவரது ‘ராமன்’கூட ‘ராமாயண ராமன்’அல்ல. சத்தியத்தின் அவதாரமாக அவரே வரித்துக்கொண்டவர்தான் அந்த ராமன். அதேபோல் சத்தியத்தின், அறத்தின் போரில் தனக்குக் கிடைத்த மகத்தான முன்னுதாரணம் என்பதால், ஏசுவின் மீது அவ்வளவு வாஞ்சையாக இருந்தார் காந்தி. அதனால்தான் புனித பீட்டர் ஆலயத்தில் ஏசுவின் சொரூபத்துக்கு முன்பு கண்ணீர் மல்க நின்றார் காந்தி. இறுதியில் ஏசு சந்தித்த முடிவையே காந்தியும் சந்தித்ததில் ஆச்சரியப்படுவதற்கென்று ஏதுமில்லை.

காந்தியின் அளவுக்கோ அல்லது காந்தியை விடப் பெரிய அளவிலோ களத்தில் இறங்கியவர்கள் வரலாறு நெடுக ஏராளமாக இருக்கிறார்கள். ஆனால், காந்தி அளவுக்கு அறத்தை ஆயுதமாகக் கொண்டு, பெரிய பரிசோதனைக் களத்தில் இறங்கியவர்கள் வெகு சிலரே. தன் உடலை, தன் வாழ்க்கையை, தன் குடும்பத்தை, இன்னும் விரிவாகச் சொல்லப்போனால் ‘நான்’, ‘தான்’ என்ற சொற்கள் எவற்றையெல்லாம் உள்ளடக்குகின்றனவோ அவற்றையெல்லாம் பலிகொடுக்கத் தயாராகத்தான் அவர் களமிறங்கினார். பலிகொடுக்கவும் செய்தார். இவ்வளவு பெரிய பலியைக் கொடுத்ததால்தான் அவர் எல்லோருக்கும் மேல் உயர்ந்து நிற்கிறார். இந்தத் தியாகங்களால் கிடைக்கும் உன்னத ஸ்தானத்தைச் சற்றும் பொருட்படுத்தாமல் அதை இழக்கத் தயாராக இருந்ததும், அந்த ஸ்தானத்தைப் பலிகடாவாக ஆக்கியதும்தான் எல்லாவற்றிலும் பெரிய காரியம். தன் வாழ்நாள் முழுவதும் கர்ணன் செய்திருந்த தானங்களின் மொத்தப் பலனையும் வரமாகக் கேட்ட கிருஷ்ணனுக்குச் சற்றும் யோசிக்காமல் அதைத் தானமாக அளித்து, மேலும் உயர்ந்த ஸ்தானத்தை அடைந்த கர்ணனின் செயலுக்கு ஒப்பாக இதைக் கூறலாம்.

சமரசம் இல்லாத சத்தியம்

இந்தியாவின் சுதந்திரம் என்ற ஒரு நல்ல காரியத்துக்காக அறம் என்ற விஷயத்தைச் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்று காந்தி நினைத்தார். அதன் விளைவுதான், முன்னுதாரணமே இல்லாத ஒரு பாதையை இந்திய சுதந்திரப் போராட்டம் தேர்ந்தெடுத்தது. அதன் விளைவுதான், உலகமே இந்தியாவையும் காந்தியையும் தங்களுக்கான முன்னுதாரணங்களாகத் தேடிவருவது. அறத்தின் உச்சபட்ச வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் அமெரிக்காவின் பிரதிநிதியான ஒபாமாவின் இந்திய வருகையைக்கூட நாம் இப்படி அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.

சமரசம் இல்லாமல் சத்தியத்தை இடைவிடாது பரிசோதித்து அடைந்த வெற்றிதான் காந்தியம். தனிமனிதராகத் தான் மட்டும் ஈடுபடாமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதில் ஈடுபடுத்தினார். நவீனக் கண்டுபிடிப்பான வை-ஃபைக்கு காந்திதான் முன்னோடி (wi-Fi: கம்பியில்லா முறையில் ஒரு பகுதியில் உள்ள கணினிகளையோ கைபேசிகளையோ இணைக்கும் அமைப்பு). இந்தியாவின் ‘வை-ஃபை’யாக காந்தி இருந்தார். தனது பரிசோதனையில் ஒட்டுமொத்த இந்தியாவையும் இணைத்துக்கொண்டார். இந்தியர்கள் தங்களின் நிறை குறைகளோடு அந்தப் பரிசோதனையில் கலந்துகொண்டார்கள். மக்களின் குறைகளைப் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதில்லை. தானே நிறைய குறைகளைக் கொண்ட ஒருவர்தான் என்ற எண்ணம் அவருக்கு இறுதிவரை இருந்தது. பிறருடைய குறைகளுக்காகவும், தன்னிடம் இருப்பதாக அவர் நம்பிய குறைகளுக்காகவும்தான் அவர் தன் வாழ்க்கையைப் பலிகொடுக்கத் தயாரானார். அறத்தின், சத்தியத்தின் போரில் தன்னைப் பலிகொடுக்கத் தயாராக எப்போதும் இருப்பது மிகவும் அத்தியாவசியமானது. அவருடைய படுகொலைக்கு முன்னால் ஐந்து முறை அவரைக் கொல்வதற்கான முயற்சிகள் நடந்தும்கூடத் தனக்கென்று எந்தப் பாதுகாப்பையும் அவர் ஏற்றுக்கொள்ளாதது இதற்கு உதாரணம். எந்த எளிய மனிதரும் அவரைச் சந்தித்துவிட முடியும். இந்த ஒரே ஒரு அளவுகோலை நமது உள்ளூர், இந்திய, உலகத் தலைவர் களுக்கு வைத்துப்பார்த்தாலே போதும் காந்தியின் இடம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பது நமக்குப் புரிந்துவிடும்.

காந்தியோடு உரையாடுவோம்

காந்தியை நேசிப்பவர்கள் ஏராளமாக இருப்பதைப் போல் அவரை வெறுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். காந்தியைக் கடவுளாக வழிபடுவது ஆபத்தானது என்றால், அவரை முற்றிலுமாகத் தூக்கியெறிவது அதைவிடப் பல மடங்கு ஆபத்தானது. அவரே சொன்னதுபோல் அவரை நாம் மகாத்மாவாக ஆக்க வேண்டாம்; நமது தாத்தாவாக உணர்ந்தாலே போதும். நம் தாத்தாவுடன் எதையும் நாம் உரையாட முடியும். அவரை மறுத்தும் அவருடன் உரையாட முடியும். அந்த உரையாடலின் இறுதியில், ஒன்று, நாம் அவரை அதிக அளவுக்கு நேசிப்பவர்களாக மாறிவிடுவோம். அல்லது, அவரை எதிர்ப்பதற்கான வலுவை அவரிடமிருந்தே நாம் பெறுவோம். எனவே, காந்தியை வழிபடுவதைவிட, தூக்கியெறிவதைவிட அவருடன் தொடர்ந்து உரையாடுவோம்.

இதற்காகத்தான் ஆஷிஸ் நந்தி இப்படிச் சொல்கிறார்: “காந்தியைவிடச் சத்தியம் மகத்தானது. நீங்கள் காந்தியை மறந்தால், அவர் வலியுறுத்திய கருத்துகள் உலகின் வேறு பாகங்களில், வேறு வடிவங்களில் எழவே செய்யும். அவை ஒருபோதும் நம்மை காந்தியை மறக்க விடாது. அவரது போதாமைகள், தவறுகளைக் கூறி அவரை நாம் கீழிறக்கிவிட முடியாது. ஏனெனில், மனித குலத்தின் அடிப்படையான அகத் தேவைகள் சிலவற்றோடு பிணைக்கப்பட்டவை அவரது எண்ணங்கள்.”

- ஆசை,

தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x