புதிய ‘பார்வை’, புதிய நம்பிக்கை

புதிய ‘பார்வை’, புதிய நம்பிக்கை
Updated on
1 min read

பார்வைத்திறன் அற்றவர்கள், குறிப்பாக மாணவர்கள், இந்த முறை புத்தகக் காட்சிக்கு நம்பிக்கையுடன் வரலாம். அவர்கள் வாசிக்க ஆசைப்படும் புத்தகங்களை பிரெய்ல் முறையில் மாற்றித்தரக் காத்திருக்கிறது கர்ண வித்யா டெக்னாலஜி சென்டர் எனும் அமைப்பு வைத்திருக்கும் அரங்கம். புத்தகக் காட்சி வளாகத்தின் வேலு நாச்சியார் வீதியில் அமைந்திருக்கிறது இந்த அரங்கம்.

“பிரெய்ல் முறையில தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட சில புத்தகங்கள்தான் பார்வையற்ற மாணவர்களுக்கு வழக்கமாகக் கிடைக்கும். மத்த புத்தகங்களை மாதிரி பிரெய்ல் புத்தகங்களை விற்பனைப் பொருளாவும் பார்க்க முடியாது. அதனாலதான், பொதுவா எல்லாரும் வாசிக்கிற புத்தகங்கள் எல்லாமே பார்வையற்றோருக்குக் கிடைக்கிறது இல்லை. அதனால, அவங்க படிக்க விரும்புற எந்தப் புத்தகத்தையும் பிரெய்ல் முறையில மாத்தித்தரணும்ங்கிற எண்ணத்தோட இந்தப்பணிய நாங்க செய்யறோம். ஒரு புத்தகத்தை பிரெய்ல் முறையில மாத்தித்தர்றதுக்கு 5 அல்லது 6 நாள் ஆகும். இது முற்றிலும் இலவச சேவை” என்கிறார் இந்த அமைப்பைச் சேர்ந்த கே. ரகுராமன்.

தனது 10 வயதில் பார்வையை இழந்தவர் இவர். நந்தனம் கலைக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். பிரெய்ல் முறையைத் தவிர, புத்தகங்களை வாசித்து ஒலிப்பதிவு செய்து குறுந்தகடாகவும் செய்துதருகிறார்கள் இந்த அமைப்பினர். புத்தகக் காட்சிகளால் எப்படியெல்லாம் சமூகப் பங்களிப்பு செய்ய முடியும் என்பதற்கு இந்த அரங்கம் ஓர் உதாரணம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in