

தொழில்நுட்பப் புரட்சியால் உலகம் வேகமாக மட்டுமல்ல, வேறுவிதமாகவும் மாறிக்கொண்டிருக்கிறது.
வட கொரியத் தலைவரும் சர்வாதிகாரியுமான கிம் ஜோங் உன் என்பவரைப் பேட்டி காணச் செல்வதுபோலச் சென்று, கொலை செய்து விடுவதாக ‘சோனி பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்த ‘தி இன்டர்வியூ’ என்ற அமெரிக்கத் திரைப்படம் தொடர்பாக நடந்த சம்பவங்களைப் புத்தகமாகவோ அல்லது இன்னொரு திரைப்படமாகவோகூடத் தயாரித்துவிடலாம்.
தகவல் தொழில்நுட்பப் புரட்சி காரணமாக, இன்றைக்கு நடக்கும் பல சம்பவங்கள் குட்டையைக் குழப்புவதாகவே இருக்கின்றன. இவற்றுக்கிடையே சலனமில்லாமல் வாழ நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
2013 நவம்பரில் ஒரு அமைப்பு திரட்டி வைத்திருந்த நான்கு கோடி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு எண்களை யாரோ திருடிவிட்டார்கள். ஆப்பிள் நிறுவனத்தின் ‘ஐகிளவுட்’ என்ற பிரிவில் பல பிரபலங்கள் தங்களுடைய ‘சொந்தப் பார்வைக்காக’ திரட்டி வைத்திருந்த பல நிர்வாணப் படங்கள் யாரோ சிலரால் திருடப்பட்டு, தெரு வோரக் கடைகளுக்கு விற்பனைக்கே வந்துவிட்டன. சோனி நிறுவனம் தயாரித்திருந்த - திரைக்கே வராத - திரைப்படங்கள் திருடப்பட்டன. ‘டைம்ஸ்’ பத்திரிகை எழுதியதைப் போல, ‘எதையும் திருடுகிறார்கள், எல்லாவற்றையும் திருடுகிறார்கள்!’ நிறுவனங்கள் செய்து கொள்ளும் வர்த்தக ஒப்பந்த விவரங்கள், ஊழியர்களின் சம்பளப் பட்டியல், திரைப்படங்களின் தயாரிப்புச் செலவு விவரங்கள், நோயாளிகள் பற்றிய மருத்துவ ஆவணங்கள், சமூகப் பாதுகாப்பு உதவிகளைப் பெறுவோரின் எண்கள், தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகள், வெள்ளித்திரைக்கு வரக் காத்திருக்கும் முழு நீளத் திரைப்படங்கள் என்று எல்லாவற்றையும் திருடியிருக்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று சோனி நிறுவனத்தின் ‘ப்ளே ஸ்டேஷன்’, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ‘எக்ஸ்பாக்ஸ்’ கேளிக்கை வலைதளங்கள், இத்தகைய திருடர்களால் முடக்கப்பட்டன. சைபர்கிரைம் எனப்படும் இத்தகைய குற்றச் செயல்கள் என்பது இப்போதைய நிகழ்வுகளில் ஒரு பகுதிதான். அன்றாடம் யாராவது ஒரு பிரபலம், பிறர் மனதைப் புண்படுத்தும்படி பேசியதற் காகவோ, பேட்டி தந்ததற்காகவோ, யாருடனோ தொலைபேசியில் பேசியபோது வசவு வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காகவோ, இணையதளத்தில் எதையோ எழுதியதற்காகவோ, வலைதளத்தில் கருத்து தெரிவித்ததற்காகவோ, தெரிவித்த கருத்தை ஆதரித்த தற்காகவோ மன்னிப்பு கோருகிறார்.
எவ்வளவு தகவல்கள்!
என்ன நடக்கிறது இப்போது? தகவல்கள் இப்போது லட்சக் கணக்கில் திரட்டப்படுகின்றன, சேகரிக்கப் படுகின்றன, பகிர்ந்துகொள்ளப்படுகின்றன, பரப்பப் படுகின்றன. யாரோ யாரிடமோ சொல்வது சட்டென்று மின்னல் வேகத்தில் பரவிவிடுகிறது. நான் இந்தப் பின்னணியில் இதைச் சொன்னேன் என்ற விளக்கமெல்லாம் எடுபடுவதில்லை. அப்படிச் சொல்லவே இல்லை என்று மறுக்கவும் முடிவதில்லை. கேட்பவர்களுக்கு அது என்ன பின்னணி, யாரிடம், எப்படிச் சொன்னார் என்பதில் எல்லாம் அக்கறையில்லை. இதைச் சொன்னது நீங்கள், சொல்லப்பட்டது இது என்று நறுக்கென்று முடித்துவிட்டு, அத்துடன் தங்களுடைய கருத்துகளையும் கண்டனங்களையும் கேலிகளையும் சேர்த்து மேலும் பரப்பிவிடுகின்றனர்.
அரசாங்கம், பெரிய நிறுவனங்கள் போன்ற வற்றைவிட சில தனிநபர்கள் ஒரே நாளில் சக்திவாய்ந்தவர்களாகி விடுகின்றனர். தகவல் தொடர்புக்கு உதவும் சில சாதனங்களும் சேவைகளும் முன்பின் தெரியாத இருவரை இணைத்துவிடுகின்றன. இந்த இணைப்பு வீட்டிலோ காரிலோ அல்லது ஒருவருடைய மனதில் இன்னொருவர் என்றோ நடக்கிறது. இந்த இணைப்பு நல்லதற்கும் நடக்கிறது, கெட்டதற்கும் நடக்கிறது. இணையதளங்கள், ஸ்மார்ட்போன்கள், வங்கிகள், சந்தைகள் என்று எல்லாவற்றாலும் எல்லா இடங்களும் இணைக்கப்படுகின்றன. கண்ணுக்குத் தெரியாத கயிற்றால் அல்ல மின்சார வயரால் நாம் இழுத்துக் கட்டப்படுகிறோம். ‘எங்களை (அங்கே) தொலைத் தோம், எங்களை (அங்கே) உணர்ந்தோம்’ என்று சொல்கிறார்களே அதைப் போல நடக்கிறது. எங்கோ முணுமுணுத்தால், எங்கோ பெரிதாக ஒலிபரப்பாகிறது. இவையெல்லாம் இனி மாற்றவே முடியாத ஒரு புதுநிலைக்கு இட்டுச்செல்கின்றன.
தனித் தீவாகிவிடலாமா?
“உலகம் வேகமாக மாறுவது மட்டுமல்ல, வேறு விதமாகவும் மாறிக்கொண்டிருக்கிறது” என்கிறார் டோவ் சீட்மேன். நிர்வாக மேலாண்மைகுறித்துப் புத்தகங்களை எழுதிவரும் தலைமை நிர்வாகி அவர்.
“ஒரு நிகழ்வை எதிர்கொள்வதற்கான நடை முறைகளை, நடத்தைகளை, சட்டங்களை உருவாக்கி, நாம் அதற்கேற்பப் பயிற்சி எடுக்கும் முன்னரே சில நிகழ்வுகள் நடந்து முடிந்துவிடுகின்றன. தலைமை தாங்குவதன் மூலமும் செயல்படுவதன் மூலமும் மிகப் பெரிய தாக்கத்தை இப்போதைய தகவல் தொழில்நுட்ப உலகில் நிகழ்த்திவிட முடியும். நம்மைச் சுற்றி நாம் அமைத்துக்கொண்டுள்ள அந்தரங்கச் சுவர்களை, நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் புதியவர்களால் எளிதில் கடந்துவர முடிகிறது. மற்றவர்களுடைய நடத்தை எப்படி என்று பார்ப்பதுடன் நில்லாமல், நம்மை வழிநடத்தும் அரசியல் தலைவர்கள், நிறுவனத் தலை வர்கள், சமுதாயத் தலைவர்கள் ஆகியோரின் அந்தப் புரங்களைக்கூட ஊடுருவிப் பார்க்க முடிகிறது. யார் மனதில் என்ன இருக்கிறது என்றுகூடப் படித்துவிட முடிகிறது.
இதற்கேற்ப எப்படி நம்மைத் தகவமைத்துக்கொள்வது? பாதிக்கப்படாமல் இருக்க அனைவரிடமிருந்தும் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு தனித் தீவாக இருந்துவிடலாமா, இருந்துவிட முடியுமா? மற்றவர்கள் எதிரில் அம்பலப்படாமல் இருக்க, எல்லோருடனான தொடர்புகளையும் துண்டித்துக்கொண்டுவிட நினைப்பது மிகவும் தவறான உத்தி என்று எச்சரிக்கிறார் சீட்மேன். அப்படிச் செய்தால், உங்களுக்கென்று ஒரு மதிப்பை எப்படிப் பெறுவீர்கள், மற்றவர்களுடன் எப்படி இணைந்து செயல்படுவீர்கள் என்றும் கேட்கிறார். இதற்குச் சரியான மாற்றுவழி, இந்தத் தொடர்புகளையெல்லாம் ஆழப்படுத்துவதும் வலுப்படுத்துவதும்தான் என்கிறார்.
எப்படி?
ஒருவரையொருவர் சார்ந்து வாழும் உலகில் நாம் வாழ்வதானால் - நாடாக இருந்தாலும் நிறுவனமாக இருந்தாலும் தனி நபராக இருந்தாலும் - பரஸ்பர சார்புத் தன்மையை ஆரோக்கியமாக வலுப்படுத்திக் கொள்வதுதான். அப்படிச் செய்தால் நாம் ஒன்றாக வீழ்வதற்குப் பதிலாக உயர்வது நிச்சயம் என்கிறார். “இது நம்முடைய நடத்தையிலிருந்து தொடங்கப்பட வேண்டும். முதலில் நமக்குப் பணிவு தேவை. நம்மிடம் அடக்கம், நேர்மை, பிறரை மதிக்கும் பக்குவம் போன்ற குணங்கள் இருந்தால், அது மற்றவர்களிடமும் எதிரொலிக்கும். அதன்மூலம் பரஸ்பர சார்தல் சாத்தியமாகும். சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மட்டும் செயல்படுதல் என்ற போக்கு மறையும். எந்தவித சந்தர்ப்பமானாலும் நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்துகொள்ளும் நடைமுறை சாத்தியப்படும் என்கிறார்.
அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவு சுகாதாரமான பரஸ்பர சார்தல் அடிப்படையிலானது. அமெரிக்காவில் போலீஸ் படைக்கும் கருப்பின இளைஞர்களுக்கும் இடையே இன்றைக்கு நிலவுவது, வேண்டத்தகாத பரஸ்பர சார்தல் அடிப்படையிலானது.
‘‘நாம் பார்க்கும் காட்சியை வைத்து உடனே ஒரு முடிவுக்கு வந்துவிடாமல், சிறிது அவகாசம் கொடுத்து பிறகு முடிவுக்கு வர வேண்டும்’’ என்கிறார் சீட்மேன்.
‘‘மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயோ அதை நீ மற்றவர்களுக்குச் செய்’’ என்ற பொன்மொழிக்கு ஏற்ப வாழ இதைவிட வேறு உரிய தருணம் இல்லை.
© ‘தி நியூயார்க் டைம்ஸ்’, தமிழில்: சாரி