Published : 24 Jan 2015 09:22 AM
Last Updated : 24 Jan 2015 09:22 AM

மொழிப்போர்: வரலாறு வரிசையிலும் இருக்கிறது

முதல் மொழிப்போரில் உயிர்நீத்த நடராசனின் பெயர் வரலாற்றில் பின்னுக்குத் தள்ளப்படுவது ஏன்?

இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழகத்தில் நடந்த 1965-ம் ஆண்டு போராட்டத்தின் 50-ம் ஆண்டு இது. பெரும் போராட்டங்கள் அதற்கு எதிரான அரசின் அடக்கு முறைகள் உயிர்ப் பலிகள் என்று 1965-ம் ஆண்டில் நடந்த போராட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. 1965 போராட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டே ஜனவரி 25-ம் நாளை மொழிப்போர் தியாகிகள் தினம் என்று திராவிடக் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் கடைப்பிடிக்கின்றன. ஆனால், இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் 1965-ல் தொடங்கியவை அல்ல. 1937-ம் ஆண்டு தொடங்கி வெவ்வேறு தருணங்களில் இதற்கான போராட்டங்கள் நடந்துவந்திருக்கின்றன.

இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு ஒன்றை எழுத வேண்டுமானால் 1937-ல் தொடங்கி எல்லாப் போராட்டங்களையும் முறைப்படி வரிசைப்படுத்துவதோடு அவற்றில் காலந்தோறும் ஏற்பட்டுவந்த மாற்றங்கள், புதிய போக்குகள், விளைவுகள் என்றெல்லாம் வெவ்வேறு கோணங் களில் தொகுக்க இடமிருக்கிறது. ஆனால், அவ்வாறான ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வரைமுறைப்படுத் தப்பட்ட முழுத் தகவல்களைக் கொண்ட வரலாற்று நூல் ஏதும் நம்மிடம் இல்லை. அதனாலேயே இப்போராட்டம் பற்றிய வரலாற்றுத் தகவல்களில் விடுபடல்களும் முன்னுக் குப் பின் முரணான தகவல்களும் மிகுந்திருக்கின்றன.

தாளமுத்து, நடராசன் என்கிற பெயர் வரிசையை மொழிப்போர்த் தியாகிகள் என்று வழமையாகக் கூறுவதுண்டு. இப்பெயர் சென்னையில் இருக்கும் அரசுக் கட்டடம் ஒன்றுக்கும் சூட்டப்பட்டுள்ளது. இந்த வகையில் இப்பெயர்களும் பெயர் வரிசையும் அதிகாரபூர்வ அந்தஸ்தைப் பெற்றிருக்கின்றன. அதே வேளையில், இப்பெயர் பற்றிய குழப்பங்களும் நிலவுகின்றன. இரண்டையும் ஒரே பெயரென்று கருதுவோரும் உள்ளார்கள். இரண்டும் தனித்தனிப் பெயர்கள் என்று அறிந்தவர்கள் தாளமுத்து முதலில் இறந்தவரென்றும் நடராசன் அடுத்து இறந்தவர் என்றும் கருதுகிறார்கள். ஆனால், முதலில் இறந்தவர் நடராசன். அடுத்து இறந்தவர் தாளமுத்து. எனவே, இந்த வரிசை நடராசன், தாளமுத்து என்றே இருக்க வேண்டும். ஆனால், மேற்கண்ட பெயர் வரிசை முன்பின்னாக மாறி அதுவே வரலாறாக நிலைத்துவிட்டது.

1937-ல் நடந்த மொழிப்போர்

1965-ம் ஆண்டின் மொழிப் போராட்டம் திமுக ஆட்சிக்கு வர முதன்மைக் காரணமாய் விளங்கியது என்றால், பிரச்சாரச் செயல்முறையில் வளர்ந்துவந்த பெரியாரின் சுயமரியாதை இயக்கம் அதுவரை பேசிவந்த பார்ப்பனர் எதிர்ப்புக் கருத்தியலைப் பலரும் ஏற்பதற்கான நியாயத்தையும் அதற்கான வெகு மக்கள் திரட்சியையும் சாத்தியப்படுத்த 1937-ல் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நடந்த மொழிப் போராட்டம் உதவியது. தமிழ் உணர்ச்சிபூர்வமான விஷயமாக மாற்றப்பட்டதும், அதன் பேரில் உணர்வுபூர்வமாக வெகுமக்கள் ஈர்க்கப்பட்டதும் இக்காலத்தில் நடந்தேறின. போராட்டம், அதற்கான உணர்ச்சி என்பதெல்லாம் வெகுமக்களை நோக்கியதாகவே எப்போதும் இருந்துவருகின்றன. இதன் அடிப்படையில், அடித்தட்டு மக்கள்தான் பெருமளவு பங்களிக்கிறார்கள் என்பது சமூக வரலாறு.

1937-ம் ஆண்டு முதல் தமிழகமெங்கும் தமிழறிஞர்களால் கருத்தியல் அளவில் பரப்பப்பட்டுவந்த இந்தி எதிர்ப்பு, மக்கள் பங்கேற்கும் போராட்டமாக மாறியபோது சென்னைதான் அதன் மையமானது. சென்னையிலேயே அதிக அளவிலான போராட்டங்கள் நடந்தன. இதில் பங்கேற்ற வெகுமக்கள் திரட்சி என்கிற அளவில் சென்னைவாழ் அடித்தள மக்களுக்குக் கணிசமான பங்கு இருந்தது. ஒடுக்கப்பட்டோர் தலைவர்களும் போராட்டத் தலைமையில் இடம்பெற்றிருந்தார்கள். இந்த வகையில் மீனாம்பாள், என். சிவராஜ் ஆகியோரைக் குறிப்பிட முடியும். சென்னையை மையம் கொண்ட போராட்டங்களில் இவர்களின் தொடர்பே பெருமளவு செயல்பட்டது. முரண்பாடு ஒன்றின் காரணமாக மீனாம்பாள் சில நாட்கள் போராட்டத்திலிருந்து விலகியிருந்தார். போராட்டத்தில் அவர் விலகியிருந்தபோது பின்னடைவு ஏற்பட்டிருந்ததாக அரசாங்க அறிக்கை ஒன்றை ஆதாரமாகக் கொண்டு வரலாற்று அறிஞர் நம்பியாரூரன் கூறுகிறார். அந்த அளவுக்கு மீனாம்பாளின் தலைமைக்கு அந்தப் போராட்டத்தில் செல்வாக்கு இருந்தது. இந்த காலகட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்தான் நடராசன். இவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்தான்.

வேறெந்தத் தகவல்களும் இல்லை

லட்சுமணன் - குப்பம்மாள் என்போரின் மகன் நடராசன். சென்னை ஜார்ஜ் டவுன் போர்த்துக்கீசு தெருவில் அவரின் வீடு இருந்தது. அவரைப் பற்றிய பிற தகவல்கள் ஏதுமில்லை. மொழிப்போர் பற்றி இன்றைக்குக் கிடைக்கும் எந்த நூலிலும் அவரைப் பற்றி இந்தத் தகவல்கள்கூட இல்லை.

05.12.1938 அன்று சென்னை சௌகார்பேட்டையில் இருந்த இந்து தியாலஜிகல் உயர்நிலைப் பள்ளி முன்பு இந்தித் திணிப்புக்கு எதிராக நடந்த மறியலில் ஈடுபட்ட பலரில் ஒருவராக நடராசனும் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட மற்றவர்களைப் போல் இவருக்கும் ஏழரை மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்தபோது ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக டிசம்பர் 30 அன்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு உடல் நிலை மோசமாகி, தண்டனைக் கைதியாகவே 1939, ஜனவரி 15-ல் காலமானார். மொழிக்கான போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுக் கைதியாக இருந்தபோதே ஒருவர் இறந்தது அதுதான் முதன்முறை. அந்த வகையில் மொழிப் போராட்டத்தின் முதல் தியாகி நடராசன்தான். நடராசனின் மரணம் சூழலை உணர்ச்சிபூர்வமாக்கிவிட்டது. போராட்டத்தை மேலெடுத்துச் செல்ல இம்மரணம் அடிக்கல்லானது. இதே போன்று போராட்டத்தில் கைதுசெய்யப்பட்டு வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தாளமுத்து, 11.03.1939-ம் நாளில் இரண்டாவதாக மரணமடைந்தார்.

அண்ணா உருக்கம்!

நடராசனின் இறுதி ஊர்வலத்தில் அறிஞர் அண்ணா இப்படி உரையாற்றினார்: “...அதோ அங்கே படுத்திருக்கிறார் நடராசன். அவருடைய இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டது. அவருடைய ரத்தம் ஓடுவதை நிறுத்திவிட்டது. அவருடைய கேசம் சிலிர்த்து நிற்கிறது. ஆனால், அவருடைய முகத்தையே பாருங்கள். தன்னுடைய கலாச்சாரத்துக்காகவும் விடுதலைக்காகவும் போராடி அப்போரில் தன் இன்னுயிர் ஈந்த ஒரு போராளியின் முகமல்லவா அந்த முகம்? பல்லாயிரக் கணக்கில் கூடிய நீங்கள், ஓர் உறுதிமொழியினைத் தருவீர்களா? நாம் விரும்பாத ஒரு மொழியை எதிர்த்துப் போரிட்டு, ஐயகோ நம்மிடம் இல்லாது மறைந்துபோன நடராசனின் வீரவாழ்வை, நாங்களும் பின்பற்றுவோம் என்று உறுதிகொள்வீர்களா?”

இதே போன்று தாளமுத்து சுடுகாட்டில் அவர் ஆற்றிய உரையும் பிரசித்திபெற்றது. அரசியலில் பிரபலமாகிவந்த அண்ணாவுக்குப் பெரிய அளவில் கவனத்தைத் தந்தவையாக இந்த உரைகள் அமைந்தன. போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டுசெல்லவும், வெகுமக்களை உணர்வுபூர்வமாகத் திரட்டவும் இந்த இரு மரணங்களும் வாய்ப்பளித்தன.

இருவரையும் அடக்கம் செய்த சென்னை மூலக்கொத்தளம் சுடுகாட்டில்கூட அப்போது பெயர் வரிசை சரியாகவே இருந்தது. ஆனால், அடுத்தடுத்த காலங்களில் இவர்களின் தியாகம் உரிய அளவில் கவனத்தில் கொள்ளப்படவில்லை. 1937-ம் ஆண்டில் தொடங்கிய முதல் மொழிப் போராட்டம் முடிவதற்குள்ளாகவே போராட்டத் தலைமைகளுக்கிடையே பல்வேறு முரண்பாடுகள் எழுந்துவிட்டன. பின்னாளிலும்கூட மொழிப் போராட்டங்கள் நடந்தபோது அதையொட்டிய எதிர்கால அரசியல் நலன்கள் போராட்ட சக்திகளின் கண்களுக்குத் தெரிந்துவிட்டன. மக்களை உணர்ச்சிபூர்வமாகத் திரட்டுவதற்கான கருவியாகத் தமிழ் பயன்படும் என்கிற அம்சம் பெரிய அளவில் வளர்த்தெடுக்கப்பட்டபோது, சமூகத்தின் குறிப்பான பிரச்சினைகள் மறைந்துபோயின. நடராசன், தாளமுத்து என்கிற பெயர் வரிசையும் அவர்களுக்கான வரலாறும்கூடத் துண்டிக்கப்பட்டுவிட்டன.

இவ்வாறு வரிசை மாறிப்போவதன் பின்னால் அன்றைய போராட்டச் செயல்பாட்டின் சமூகரீதியான பங்களிப்புகளும் இல்லாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது என்பதே பெயர் வரிசையைச் சரிசெய்ய வேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது. தமிழ் அடையாளம் மொழிப் பிரச்சினையாக மட்டுமே சுருங்கிப்போய்விட்ட இன்றைய நிலையில், கடந்த கால வரலாற்றுத் தருணங்களை இன்றைக்கு நினைவுகூர்வது தமிழ் அடையாளத்தை ஜனநாயகப்படுத்த உதவும்.

- ஸ்டாலின் ராஜாங்கம், சமூக-அரசியல் விமர்சகர், stalinrajangam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x