

சென்னை புத்தக் காட்சி என்பது என்னப் பொறுத்தவரை பதிப்புத் தொழில் செய்வதற்கான ஒரு இடம் மட்டுமல்ல; அது எழுத்தாளனாக என்னை நானே புதுப்பித்துக்கொள்கிற இடம். 2003 ஆண்டில் முதன்முதலாக ஒரு பதிப்பாளனாக இந்தப் புத்தகக் காட்சிக்குள் நுழைந்தேன். ஆயிரம் ஆயிரம் முகங்களின் எல்லையற்ற அன்பை இங்கே நீந்திக் கடந்திருக்கிறேன். ஒவ்வொரு புத்தகக் காட்சிக்காகவும் இரண்டு மாதங்கள் தூக்கமற்ற இரவுகளோடு வேலை செய்துவிட்டுப் புத்தகக் காட்சியில் வந்து உயிர்மையைத் தேடி வரும் வாசகர்களின் கைகளை இறுகப் பற்றிக் குலுக்கும்போது அத்தனை களைப்பும் ஒரு கணத்தில் நீங்கிவிடுகிறது. சொல் எத்தனை மகத்தானது!
சென்னை புத்தகக் காட்சியை மக்களிடம் கொண்டுசெல்வதற்காகப் பல்வேறு முயற்சிகளை ஊடகங்களின் வழியே செய்துவந்திருக்கிறேன். நான் என்ன செய்தேன் என்று வெளிப்படையாக உரிமை கோர விரும்பவில்லை. ஆனால் இது ஒரு கலாச்சாரச் செயல்பாடு. மேலும், புத்தகக் காட்சியில் எழுத்தாளர்-வாசககர் சந்திப்பு ஒன்றை தினமும் ஏற்பாடு செய்துவருகிறேன். தினமும் மாலை 3.30-க்கு சங்கப்பலகை சிற்றரங்கில் நடைபெறும் இந்தச் சந்திப்பில் நவீன எழுத்தாளர்களோடு வாசகர்கள் உற்சாகமாக உரையாடுகிறார்கள்.
ஒரு கவிஞனாக இந்த ஆண்டு புத்தக் காட்சி எனக்கு முக்கியமான ஒன்று. என் வாழ்நாளின் மிகப் பெரிய கவிதைத் தொகுப்பான ‘அந்நிய நிலத்தின் பெண்’ இந்தப் புத்தகக் காட்சியில்தான் வெளிவந்தது. இதுபோன்ற ஒரு தொகுப்பை இன்னொரு முறை எழுதுவேனா என்று தெரியாது. என் காலத்தின், என் மனதின் கொந்தளிக்கும் கடல்களை அந்தத் தொகுப்பில் கொண்டுவந்திருக்கிறேன். வாசகர்களிடம் அதற்குக் கிடைக்கும் உற்சாகமான வரவேற்பு பெரிதும் என்னை உற்சாகமூட்டுகிறது.
இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் கே. சந்துருவின் ‘அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்’, சீதாராம் யெச்சூரியின் ‘மோடி அரசாங்கம்: வகுப்புவாதத்தின் புதிய அலை’, வால்டர் ஐசாக்ஸன் எழுதிய ‘ஸ்டீவ் ஜாப்ஸ்’, ஞானக் கூத்தனின் ‘என் உளம் நிற்றி நீ’, கெயில் ஓம்வெத்தின் ‘அம்பேத்கர்: ஒரு புதிய இந்தியாவுக்காக’, டி.ஆர். நாகராஜின் ‘தீப்பற்றிய பாதங்கள்’, மனோகர் மல்கோங்கரின் ‘காந்தியைக் கொன்றவர்கள்’ எனப் பல நூல்களை வாங்கினேன்.
ஜனவரி 21 வரை நடக்கும் இந்தப் பண்பாட்டுத் திருவிழாவின் முடிவில் ஏற்படும் வெறுமையை நினைத்து இப்போதே பயப்படுகிறேன்.