

எனக்குத் தெரிந்து ஒரு முறையான புத்தகக் காட்சி சென்னையில் முதலில் 1985-ல் நடந்தது. அப்போது எழும்பூரில் நடந்ததாக ஞாபகம். அதையொட்டி புத்தகத் தயாரிப்புபற்றி ஒரு வாரம் வகுப்புகள் நடத்தப்பட்டன. ஒரு முக்கியக் காரணம், புத்தகக் காட்சி நிர்வாகம் ஆங்கில நூல்கள் வெளியிடும் நிறுவனங்களிடம் இருந்தது.
ஹிக்கின்பாதம்ஸ் கடை பெரியதாக இருக்கும். அதேபோல ஆக்ஸ்ஃபோர்டு, ஓரியண்ட் லாங்மன், மாக்மில்லன் கடைகளும் இருக்கும். முக்கியமான தமிழ்ப் பதிப்பாளர்கள் பலர் எங்கோ ஒரு சிறு மூலையில் இருப்பார்கள். அப்போது புத்தகக் காட்சியே ஓர் எழுத்தாளருக்குப் பரிசு தரும். அநேகமாக சேம்பர்ஸின் பெரிய அகராதியாக இருக்கும். பரிசு பெற்றவர் அதைத் தூக்க முடியாதபடி வீட்டுக்கு எடுத்துச் செல்வார். அது பாதி மேஜையை அடைத்துவிடும். எனக்குத் தெரிந்து வீ.எஸ். சீனிவாச சாஸ்திரியார் அகராதிதான் தன்னுடைய வேதம் என்றார். எந்த மொழியானாலும் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இல்லாமல் எழுத, பேச அகராதி முக்கியம். ஒருகட்டத்தில் என்னிடம் 20 அகராதிகள் இருந்தன. அதில் ஒன்று 19-ம் நூற்றாண்டில் வெளியானது. எல்லாவற்றையும் கொடுத்துவிட்டேன்.
இன்று புத்தகக் காட்சி, தமிழ்ப் பதிப்பாளர்களுக்கு முக்கியமான சாளரமாக விளங்குகிறது. தமிழ்ப் பதிப்பாளர்களும்தான் எவ்வளவு மாறிவிட்டார்கள்! புத்தகத் தயாரிப்பில் வெளிநாட்டுப் பதிப்பாளர்களைவிடச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். ஒரு காலத்தில் சிறுகதை, மொழிபெயர்ப்பு ‘போகாது’ என்பார்கள். இன்று தாஸ்தாயெவ்ஸ்கி தமிழில் கிடைக்கிறார். ஐநூறு, அறுநூறு, ஆயிரம் ரூபாய்க்குக்கூடத் தைரியமாகப் போடுகிறார்கள். முக்கியமான எழுத்தாளர் ஒருவர் இப்போதே அறிவித்துவிட்டார்: தற்போது அவர் எழுதி வரும் நூல் 40,000 பக்கங்கள் கொண்டதாக இருக்கும்.
நான் இதர நகரங்களிலும் புத்தகக் காட்சி பார்த்திருக்கிறேன். சென்னைபோல நீண்ட கால நண்பர்கள் சந்திக்கும் இடமாக இதர நகரங்களில் புத்தகக் காட்சிகள் இல்லை. ஆங்கிலம் தவிர, வேறு இந்திய மொழிப் பதிப்பாளர்களைப் ‘போனால் போகிறது போ’ என்பது போலத்தான் நடத்துவதாகத் தோன்றியது. ஒருமுறை சில இந்திய மொழி எழுத்தாளர்களையும் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களையும் ஜெர்மனி அழைத்துச் சென்றார்கள். ஆங்கிலத்தில் எழுதுபவர்களுக்கு ஊர் நடுவில் 40 மாடி ஹோட்டலில் தங்க ஏற்பாடு. இதரர்களுக்கு வேறொரு பகுதியில். அந்தப் பகுதிக்கு அவ்வளவு நல்ல பெயர் இல்லை. எங்களுக்கென்று எந்த விசேஷப் பங்கும் கிடையாது. நல்ல வேளையாக எனக்கும் நிஸ்ஸிம் எஸெக்கியல் என்ற ஆங்கில எழுத்தாளருக்கும் ஜெர்மனியிலேயே பல இடங்களில் மக்கள் சந்திப்புகள் ஏற்பாடு ஆயிற்று. இதற்கு முக்கியமான காரணம், சென்னையில் என்றோ ஒரு நாள் என்னைச் சந்தித்த ஜெர்மன் பேராசிரியர்தான். அவர் என் நாவல் ஒன்றின் முதல் அத்தியாயத்தை மொழிபெயர்த்திருந்தார். அதே நேரத்தில் எனக்குச் சுத்தமாகப் பிடிக்காத இந்தி எழுத்தாளரின் நாவலின் முதல் அத்தியாயத்தையும் மொழிபெயர்த்திருந்தார். என்ன செய்வது? வாழ்க்கையே ஏராளமான சமரசங் களுடன்தான் வாழ வைத்துவிடுகிறது.
இந்த ஆண்டு என்னால் புத்தகக் காட்சிக்குப் போக முடியவில்லை. உடல் நிலை. இன்றும் புத்தகக் காட்சிக்குள் பாதைகள் சீராக இல்லை. இதையும் மீறி உண்மைத்தனமே பெயராகக் கொண்ட பதிப்பாளர் போயிருக்கிறார். ஏனென்றால், அவர் தள்ளு வண்டியில்தான் போக வேண்டும். என் மகன் அவர்பட்ட பாட்டைக் கண்டு மிகவும் வருத்தப்பட்டான்.
எனக்கு நாளுக்கு நாள் நண்பர் அழகியசிங்கர் ஒரு சுருக்கமான முறையில் புத்தகக் காட்சியில் நடந்ததை விவரித்து விடுவார். புத்தகக் காட்சியில் மிகக் குறைவான பார்வையாளர்கள் வரும் அரங்குகளில் இவருடையது இரண்டாம் இடம். முதல் இடம் சாகித்ய அகாடமி அரங்கு!
அசோகமித்திரன், மூத்த எழுத்தாளர்.