

வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையோடும் பெரிய புத்தகப் பையோடும் புத்தகக் காட்சியில் தென்பட்ட எழுத்தாளர் இமையத்தை வழிமறித்தோம். இமையத்தைப் பலரும் எழுத்தாளராகத்தான் அறிவார்கள். அவருக்கு இன்னொரு முகமும் உண்டு. அவர் ஒரு ஆங்கில ஆசிரியர்.
படைப்பாளி, ஆசிரியர் ஆகிய பொறுப்பு களையும் வெற்றிகரமாகச் செய்வதற்கு அடிப்படை என்ன என்று கேட்டால் இப்படிச் சொல்கிறார்: “வாசிப்பைத் தவிர வேறென்ன காரணத்தைச் சொல்ல முடியும்? நான் படைப்பாளியாக மாறியதற்கு வாசிப்புதான் முக்கியக் காரணம். வாழ்க்கையை அப்படியே மாற்றிவிடக் கூடிய சக்தி புத்தகத்துக்கு உண்டு என்பதை சார்த்தரின் ‘மீள முடியுமா?’ படித்த பிறகுதான் தெரிந்துகொண்டேன். எழுத்தின் சக்தி என்ன, எழுத்தாளரின் சக்தி என்ன என்பதை அந்தப் புத்தகம்தான் எனக்கு உணர்த்தியது.”
“ஆசிரியராக நான் பொறுப்பாகச் செயல்படுவதற்கு வாசிப்புதான் அடிப்படை. சொல்லப்போனால், நான் பாடம் நடத்துவதே பெரும்பாலும் கதைகளின் வழியாகத்தான். அப்படிப் பாடம் நடத்தும்போது மாணவர்கள் ஆசிரியர்களை நெருக்கமாக உணர் கிறார்கள். கற்றல் செயல்பாட்டின் நோக்கமும் நிறை வேறுகிறது. இப்படிச் செய்ய வேண்டுமென்றால் ஆசிரியர்கள் தொடர்ந்து வாசிக்க வேண்டும்.
ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள் வேலைக்கு வந்த நாளுடன் வாசிப்புக்கு முழுக்குப் போட்டுவிடுகிறார்கள். அல்லது, ஆசிரியர்களுக்கு வாசிப்பு தேவையற்றது என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்” என்றார்.
தான் வாங்கிய புத்தகங்களை நம்மிடம் காட்டினார். ஷோபாசக்தியின் ‘கண்டி வீரன்’ சிறுகதைத் தொகுப்பு, மனுஷ்ய புத்திரனின் ‘அந்நிய நிலத்தின் பெண்’ கவிதைத் தொகுப்பு, சட்டநாதனின் ‘ ஒரு சூத்திரனின் கதை’, கோ. ரகுபதி எழுதிய ‘தலித் பொது உரிமை’, ஆல்பெர் காம்யுவின் ‘முதல் மனிதன், அ. ராமசாமியின் ‘ தமிழ் சினிமா காட்டுவதும் காட்டப்பட வேண்டியதும்’ என்று பட்டியல் நீண்டுகொண்டே போனது. “இந்தப் புத்தகங்களெல்லாம் எனக்காக மட்டுமல்ல.
நான் வாசித்துவிட்டு அந்தப் புத்தகங்களைப் பற்றி என் மாணவர்களுக்குக் கதைபோலச் சொல்வேன். இந்தப் புத்தகங்களை அவர்களாகப் படிக்காவிட்டாலும் புத்தகங்களில் உள்ள விஷயங்கள் அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் போய்ச்சேர்வது முக்கியம். ஒவ்வொரு ஆண்டும் எனது வகுப்பைத் தாண்டிச் செல்லும் மாணவர்கள் கிட்டத்தட்ட வாழ்க்கையிலும் அடுத்த கட்டத்தைத் தாண்டிச் செல்ல வேண்டும். அது நடந்தாலே ஆசிரியராக எனது கடமை நிறைவேறிவிடுகிறது என்று கருதுகிறேன்” என்று முடித்த இமையம், தன் வாசகர் ஒருவரை அடையாளம் கண்டுகொண்டு நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.