Published : 08 Jan 2015 10:09 AM
Last Updated : 08 Jan 2015 10:09 AM

இந்திய முஸ்லிம்களுக்கு ஒரு திறந்த மடல்

தங்கள் சகமதத்தவர் செய்யும் அநீதிகளைக் கண்டு இந்திய முஸ்லிம்கள் மவுனமாக இருக்கக் கூடாது.

என் சக குடிமக்களாகிய இஸ்லாமிய நண்பர்களே,

‘இந்திய முஸ்லிம்கள்’ என்ற சொற்றொடரை நான் ஒருபோதும் விரும்பியதில்லை. ஏதோ பிரித்து வைத்துப் பேசுவதைப் போன்ற உணர்வை அந்தச் சொற்றொடர் தருவதால்தான் அந்த அசௌகரியம் எனக்கு. நீங்களெல்லாம் இந்திய முஸ்லிம்கள் மட்டும்தான், உங்களுக்கு வேறெந்த அடையாளமும் இல்லை என்பதுபோல் அந்தச் சொற்றொடர் அர்த்தம் தருகிறது. ஆனால், அதன் உள்ளர்த்தம் உங்கள் அடையாளத்தை இரண்டாகப் பிளவுபடுத்துகிறது. அதில் ‘என்’ கவனம் ‘முஸ்லிம்’ என்ற சொல்லின் மேல் விழுகிறது, ‘இந்திய’ என்ற சொல்லின் மீது அல்ல. யோசித்துப்பாருங்கள், ‘இந்திய இந்துக்கள்’ என்ற சொற்றொடரை நாம் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறோமா?

நமது மனதின் தொன்மையான, பிடிவாதமான ஒரு பழக்கம் அதில்தான் அடங்கியிருக்கிறது. அந்தப் பழக்கம் நமது சமூகத்தின் பிளவுகளை, அதாவது நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு மனநிலைகளில் இருக்கும் ஆழமான பிளவுகளைப் பிரதிபலிக்கிறது.

உண்மையிலேயே நமது தேசம் ஒரு பிளவுபட்ட தேசமே. இங்கே இந்த இரண்டு சமூகங்களையும் பிணைப்பது நீங்கள் இந்தச் சமூகத்துக்கு அளிக்கும் பொருளாதாரச் சேவைகள் மட்டும்தான். வாழ்க்கையின் மற்ற அம்சங்களைப் பொறுத்தவரை நீங்களெல்லாம் ‘அறியப்படாதவர்கள்’; பலரின் பார்வையில் நீங்களெல்லாம் சந்தேகத்துக்குரியவர்கள். ஆனால், இதுபோன்று முத்திரை குத்துவது என்னுடைய இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. வரலாற்றின் முக்கியமான கட்டத்தில் நாம் இருப்பதாக நான் கருதுவதால் உங்களிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளேன்.

இது இப்படித்தான் இவர் இப்படித்தான் என்று ஒரேயடியாக முத்திரை குத்துவது மிகவும் அருவருப்பானது; அந்தச் செயலில் ஈடுபட எனக்கு விருப்பமில்லை. பொதுப்படையான பரந்த தளத்தில் எனது கருத்துக்களை நான் உருவாக்க விரும்புகிறேன். விதிவிலக்கான சிலரைத் தவிர, ‘இந்திய முஸ்லிம்கள்’ தங்கள் மீது குத்தப்பட்ட முத்திரையை அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் எதிர்ப்பேதும் காட்டவில்லை என்ற அர்த்தத்தில் இதை நான் சொல்லவில்லை. அந்த முத்திரை உங்களுக்குள் ஊறிப்போவதற்கு நீங்கள் அனுமதித்துவிட்டீர்கள். சமூகத்தில் தொடர்ந்து நீங்கள் ஒதுக்கப்படுவதற்கு நீங்களும் உடந்தையாகும் அளவுக்கு நீங்கள் அந்த முத்திரை குத்தும் செயலை அனுமதித்துவிட்டீர்கள்.

இதற்கான சான்றுகள் நிறைய இருக்கின்றன. பொருளாதாரப் பிரச்சினைகள், போர்கள், சமூகப் பிரச்சினைகள் என்று உலகம் முழுவதும் நிகழும் நடப்புகளுக்கும், இன்னும் சொல்லப்போனால் உங்கள் வீட்டுக்கருகே நடக்கும் சம்பவங்களுக்கும் நீங்கள் எதிர்வினையாற்றும் விதத்திலேயே அந்தச் சான்றுகளை நன்றாக அறிந்துகொள்ள முடிகிறது. ‘பெரும்பான்மை’ சமூகத்திடமிருந்து உங்களைக் காத்துக்கொள்வதற்காக ஒரு மந்தை உள்ளுணர்வு அவசியம் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். அந்த உள்ளுணர்வுடன் உங்களில் பெரும்பாலானோர் ஒரு ‘சமூக’மாகவோ ‘இன’மாகவோ மட்டுமே தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு பேசவோ நடந்துகொள்ளவோ சிந்திக்கவோ செய்கிறார்கள். இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா?

உங்களைச் சீண்டும் இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக நீங்கள் நிச்சயமாக விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருந்தாக வேண்டுமென்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால், உங்கள் சக-மதத்தவர் தீய செயல்களில் ஈடுபடும்போது – உங்களில் விதிவிலக்கான சிலரைத் தவிர- பெரும்பாலானோர் கடுமையாக மவுனம் காப்பது ஏன்?

தவறுகள் யார் செய்தாலும் தவறுகள்தான். பொறுப்பான மனிதர்கள் அநியாயங்களைக் கண்டு கண்ணை மூடிக்கொண்டிருக்க முடியாது.

பெஷாவர் பள்ளியில் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டபோது உங்களில் சில நல்ல உள்ளங்கள், துணிச்சலான சில நபர்களைத் தவிர உங்களின் பெரும்பான்மையான தலைவர்கள் மவுனம் காத்ததைக் கண்டு நான் பெரிதும் அவநம்பிக்கை அடைந்தேன். அந்தப் பாதகச் செயலைக் கடுமையாகக் கண்டிக்கக்கூடிய வலுமிக்க முஸ்லிம் இந்தியர்களின் குரலை எதிர்பார்த்தேன், எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். அந்தச் செயலின் மீதான வெறுப்பையும் ஆவேசத்தையும் எல்லோரும் ஒருங்கிணைந்து ஏன் வெளிப்படுத்தவில்லை? தற்போதைய இந்திய அரசு இந்து மதச்சார்பு அரசு என்பதாலா? அதுதான் உண்மையென்றால் அது ஒரு நொண்டிச்சாக்குதான். இன்னொரு காரணத்தையும் நான் யோசித்துப் பார்த்தேன், அந்த யோசனை தவறானதாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். பாலஸ்தீன விவகாரத்தில் உங்களின் அமெரிக்க-எதிர்ப்பு நிலைப்பாடு யாவரும் அறிந்ததே. எனவே, அமெரிக்காவை எதிர்த்துப் போரிடும் தலிபான்களுக்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்க உங்கள் தலைவர்கள் தயங்குகிறார்களா? இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. இந்த இரண்டுமே உண்மையான காரணத்தை முழுமையாக விளக்கவில்லை என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். அப்படியென்றால், உங்கள் மதத்தின் பல்வேறு உட்பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்கள் பெஷாவர் படுகொலைகளைக் கண்டித்து ஏன் பேரணி நடத்தவில்லை? இஸ்லாமிய மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் பயங்கரவாதத்துக்கு எதிரான முதல் குரலை மட்டுமல்ல துணிவான, அறிவார்த்தமான எதிர்ப்புக் குரலையும் உங்கள் தலைவர்கள் எழுப்பும் நாளுக்காக நான் காத்திருக்கிறேன். தயவுசெய்து, திருக்குர்ஆனின் வாசகங்களை அரசியலுக்கான, மதத்துக்கான ஆயுதமாகப் பயன்படுத்த யாரையும் அனுமதிக்காதீர்கள், அவர்கள் யாராக இருந்தாலும்.

அதேபோல், உங்கள் தலைவர்கள் யாரும் வன்முறைகளுக்குக் கண்டனக் குரல் எழுப்பாமல் இருந்தார்கள் என்றால் அவர்களுக்கெதிராக எளிய மக்களான நீங்கள் குரலெழுப்ப வேண்டும். அந்த நாளையும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். உங்கள் சமூகத்துக்குள்ளேயே சமூகரீதியான-மதரீதியான உள்ளாய்வு மேற்கொள்ளப்படுவதற்கான உடனடித் தேவை தற்போது எழுந்துள்ளது. அந்தத் தேவை உங்களுக்குள்ளிருந்து எழ வேண்டுமே தவிர உங்கள் மீது யாரும் திணிக்கக் கூடாது. உங்கள் மார்க்கத்தைச் சேர்ந்த பல்வேறு குரல்களுக்கு நீங்கள் செவிகொடுப்பது மட்டுமல்லாமல் அவற்றை மதிக்கவும் வேண்டும்.

அடுத்தது ரொம்பவும் முக்கியமானது. ஆண்-பெண் சமத்துவத்துக்காகக் குரல்கொடுக்கும்படி தயவுசெய்து நீங்கள் உங்கள் தலைவர்களைத் தூண்டுங்கள். ‘பழங்காலத்தில் பெண்கள் நடத்தப்பட்ட விதத்திலேயே இந்திய முஸ்லிம்கள் தங்கள் பெண்களை வைத்திருக்கிறார்கள்’ என்று குறுகலான பார்வை கொண்டவர்கள் உங்களைக் குறை சொல்வதற்கு நீங்கள் துளியும் இடம் கொடுக்கக் கூடாது. அப்படி இடம் கொடுப்பதன் மூலம் சகிப்புத்தன்மையற்ற இந்துத்துவர்களுக்குத் தயவுசெய்து அடிபணிந்துவிடாதீர்கள்.

இந்தியா மீது நீங்கள் கொண்டிருக்கும் விசுவாசத்தை நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்று கேட்கும் வலதுசாரிகளின் கோரிக்கையைப் போன்றதாக என்னுடைய கோரிக்கையைக் கருதிவிடாதீர்கள். இஸ்லாமியச் சமூகத்துக்குள்ளே அச்சமில்லா சிந்தனையும் செயல்பாடுகளும் இருக்க வேண்டியதற்கான தேவை இருக்கிறது என்று நான் ஆழமாக நம்புவதாலே இதை எழுதுகிறேன். நீங்கள் மட்டுமல்ல, உங்களைப் போல் இன்னும் பலர் இந்த நாட்டில் இருக்கிறார்கள். அவர்களின் இயல்பாலும், அவர்கள் கொண்ட கொள்கை அடிப்படையிலும் அவர்களுக்கும் உங்களின் நிலைதான். உங்களைப் போலவே அவர்களும் சுதந்திர இந்தியாவின் குடிமக்களாக இருக்க நேரிட்டவர்கள். இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்றோ போலி-மதச்சார்பின்மைவாதிகள் என்றோ அவர்கள் மீது முத்திரை குத்தப்படுகிறது. அவர்களோடு சேர்ந்து அவர்களின் கரங்களை வலுப்படுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் கரங்களையும் இந்தியாவின் கரங்களையும் வலுப்படுத்துங்கள். அவர்களைப் பலமிழக்கச் செய்துவிடாதீர்கள்.

இந்த உலகம் எப்படி உங்களுடைய ஆன்மிக, அறிவுச் செல்வங்களால் செழுமைப்பட்டிருக்கிறதோ அப்படித்தான் இந்தியாவும் செழுமைப்பட்டிருக்கிறது. உங்களின் பெருமைக்குரிய பாரம்பரியம் தனது மகத்துவத்தை நிரூபிக்க நேரம் வந்துவிட்டது; எல்லாக் கட்டுப்பெட்டித்தனங்களையும் உடைத்துக்கொண்டு வெளிப்படும் துணிவு மிகுந்த தலைமையை அது உருவாக்கவும் நேரம் வந்துவிட்டது.

- டி.எம். கிருஷ்ணா, கர்நாடக இசைக் கலைஞர், தொடர்புக்கு: tmkrishnaoffice@gmail.com

- தி இந்து (ஆங்கிலம்)- தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x