

சென்னைப் புத்தகக் காட்சிக்கு வருபவர் களையெல்லாம் அசரடிக்கிறார்கள் அந்த இளைஞர்கள். ஒவ்வொருவர் கையிலும் ஒரு பை. ஓடி ஓடிச் சென்று எங்கெல்லாம் குப்பைகள் தென்படுகின்றனவோ அவற்றைச் சேகரித்து, அப்புறப்படுத்துகிறார்கள். விசாரித் தால், எல்லோருமே பல்வேறு கல்லூரிகளின் மாணவ - மாணவிகள்.
“படிக்கிற காலத்துல நம்மாலான சின்ன காரியங்களையாவது சமூகத் துக்குச் செய்யணும்னு தோணும்ல, அப்படியான எண்ணத்துக்கு நாங்க தேர்ந்தெடுத்துக்கிட்ட வழிதான் இந்த ‘விழித்திரு’ அமைப்பு. சுற்றுச்சூழல் பாதுகாப்புதான் எங்களோட களம். பொதுவான நாட்கள்ல, மரக்கன்று நடுறது, மரம் வளர்ப்புலேயும் இந்தப் புத்தகக் காட்சி மாதிரியான நிகழ்ச்சிகள் நடக்குற நாட்கள்ல குப்பை அகற்றும் வேலையிலேயும் ஈடுபடுறோம்.
சந்தோஷம் எதுலன்னா, நாங்க எவ்வளவு குப்பையை அகற்றுறோம்கிறதுல இல்ல, எங்களைப் பார்த்துட்டு நெறையப் பேர் குப்பை போடுறதையே தவிர்க்கிறாங்கங்கிறதுதான்.”
சமூகப் பணியைச் சரியான இடத்தில் தொடங்கியிருக்கிறீர்கள், வாழ்த்துகள்!