

தீண்டாமை, மூடநம்பிக்கைகள் போன்றவற்றை ஒழிப்பதே பெரியாரின் லட்சியம்: இப்போது இவருக்கு வயது 89. திருச்சிராப் பள்ளியிலே ஒரு பழையகால இல்லத்திலே வசித்துவருகிறார். அதன் முகப்பிலே பெரியார் மாளிகை என்ற பெயர்ப் பலகை காணப் படுகிறது. தமிழ் கலை இலக்கியப் பேரவை ஆண்டு மாநாட்டுத் தொடக்க விழாவுக்காக நான் திருச்சிக்குச் சென்றிருந்தேன். அப்போது நான் “திராவிடர் கழக முதுபெரும் தலைவரைச் சந்திக்க வேண்டும். தொலைபேசியில் கேட்டு அவரது வசதியை அறிந்து சொல்லுங்கள்” என்று நண்பர் ஒருவரிடம் தெரிவித்தேன். அவரும் உடனே பெரியார் மாளிகையுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தார். உடனே வரச் சொல்லுங்கள் என்று அவர் தெரிவித்ததாகப் பதில் கிடைத்தது.
திகைக்க வைத்த காட்சி: 15 நிமிடங்களில் நாங்கள் பெரியார் மாளிகையைச் சென்றடைந்தோம். நாங்கள் பெரியார் மாளிகை நுழைவாசல் கதவை அடைந்ததும், ஒரு விசித்திர முரண்பாடான காட்சியைக் கண்டேன். திகைத்தேன். தாம் ஒரு நாத்திகர், பகுத்தறிவுவாதி, கடவுள் சிலைகளை உடைப்பவர் என்று பெரியார் அவர்கள் உலகறிய பகிரங்கமாகச் சொல்லிவருபவர். அப்படியிருந்தும் கதவு நிலைக்குமேல் ஒரு கடவுள் உருவம் செதுக்கப் பட்டிருப்பதைச் சற்று தொலைவிலிருந்து கண்ணுற்றேன். திகைக்கவைத்தது இந்தக் காட்சி என்னை. ஆனால், அணுகிப்பார்த்தபோது, அது பெரியார் அவர்களுடைய உருவமே என்பதைக் கண்டறிந்தேன். நாமே கடவுள், நம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று அறிவிப்பது போலத் தென்பட்டது.
பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள், தமது 89 வயதிலே வெண்தாடி தாழ்ந்து ஊஞ்சலாட, வெண்கேசம் படர்ந்த தலையுமாக, யாவருக்கும் தாத்தா என்று அறிவிக்கும் தோற்றம் பெற்றவர். அவரது முதுபெரும் வயதைக் கவனிக்கும்போது, அவர் சாதாரணமான மற்றவர்களைவிட நல்ல உடல் நிலையுடனும் நினைப்புச் சக்தியுடனும் இருக்கிறார் என்பதை அறிந்தேன். இப்போதும்கூட அன்றாடச் செய்திப் பத்திரிகைகளையும் புத்தகங்களையும் படித்தபடி இருக்கிறார். கட்டுரைகள் எழுதுகிறார். கருத்துக்களை வாயால் சொல்லி, மற்றொருவரை எழுதிக்கொள்ளும்படி செய்கிறார்.
தம்மைக் காண வருபவர்களுக்கு உடனுக்குடன் பேட்டியளிக்கிறார். அவர்களுடன் உறுதியான, கனத்த குரலில் தடுமாற்றமின்றி உரையாடுகிறார். அந்தக் குரலிலும் பேச்சிலும் தளர்வும் தடுமாற்றமும் கொஞ்சமும் இல்லை. வயது இவ்வளவு ஆகியும் அவரது கொள்கை உறுதியோ அல்லது தீவிரமோ சற்றும் தளரக் கிடையாது. தம்மைப் பின்பற்றுகிறவர்கள் பொதுத்தேர்தலில் பெரும் வெற்றிபெற்றதோ, அவரது திராவிடக் கழகத்தின் கிளையாகத் தோன்றிய திமுக ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததோ அவருக்கு முழுத் திருப்தி அளித்துவிடவில்லை என்றே புலப்படுகிறது.
முதல் கேள்வியும் பெரியார் பதிலும்: “இப்போது திமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறதே. உங்களுடைய ஆயுட்கால வேலைகள் திருப்தியாக நிறைவேற்றி வைக்கப்பட்டுவிட்டன என்று தாங்கள் நினைக்கிறீர்களா?” என்பது, நான் அவரிடம் கேட்ட முதல் கேள்வி. நான் இந்தக் கேள்வியை ஆங்கிலத்தில்தான் கேட்டேன். இதனைத் தமிழில் மொழிபெயர்த்துச் சொல்வதற்கு முன்பே அவர் ‘‘இல்லை’’ என்று தமிழில் உறுதி தொனிக்கப் பதில் அளித்தார்.
இவ்விஷயத்தைத் தொடர்ந்து விளக்குகையில் அவர், நான் இன்னொரு முறையும் பிறந்து தொடர்ந்து இத்துறையில் பணியாற்றினாலும், சரியே நான் எடுத்துக்கொண்டு நடத்திவரும் வேலைகளைப் பூர்த்தி செய்ய முடியாது. ஆனாலும், இதற்கான விஷயங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன என்று வேண்டுமானால் நீங்கள் கூறலாம். நாங்கள் என்ன வழியில் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
குறிக்கோள்: வைதீகப் பாசி படிந்த இந்து சமுதாயத்தினைச் சீர்திருத்த வேண்டும் என்ற மன எழுச்சியால், இவர் தமது இயக்கத்தைத் துவக்கினார். இது நாளுக்கு நாள் தீவிரமாயிற்று. இந்தத் தீவிர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகத்தான் நாடு பிரிவினை இயக்கமும் தோன்றிற்று.
நெடுங்கால நண்பரான திரு.சி. இராசகோபாலச் சாரியார் (ராஜாஜி) தூண்டுதலால் இவர் காங்கிரசில் சேர்ந்தார். பின்னர், இவர் நீதிக்கட்சியில் சேர்ந்தார். சர் பட்டம் பெற்றவர்களும் ராவ்பகதூர்களும் கொண்டது நீதிக்கட்சி. டொமினியன் அந்தஸ்து கோரும் நிதானவாதிகளின் கட்சி அது. இவர் தலைவரானதும் அதன் அமைப்பை மாற்றிக்காட்டினார்.
முஸ்லிம் லீக், பாகிஸ்தான் தனி நாடு கோரிக் கையைத் துவக்கிய அதே காலத்தில் திராவிடர் கழகமும் தனிநாடு கோரிக்கைப் பரணியை முழக்கிற்று. பெரியார் அவர்களே தமது திராவிட நாடு இயக்கத்தின் குறிக்கோள்கள் எவை என்று 1950-ம் ஆண்டில் அறுதியிட்டுக் கூறியுள்ளார்.
‘திராவிட இயக்கமானது மத சமுதாயச் சீர்திருத்த அமைப்பு. சமுதாயத்தை இப்போதைவிட, அதிக மனிதாபிமானமும் பகுத்தறிவும் கொண்ட அடிப்படையில் சீர்திருத்தி அமைக்க வேண்டும் என்பதே இதன் குறிக்கோள். சாதியை அடியோடு ஒழித்துக்கட்டவும் விரும்புகிறது. திராவிட மக்கள் அனைவரையும் அவர்கள் எந்த அரசியல் கொள்கையைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி, அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறது.’
இந்த திராவிடர் கழகத்தின் இறுதி லட்சியம், கொள்கை மதங்களை ஒழிக்க வேண்டும் என்பதே யாகும். இந்த திராவிட இயக்கமானது இவ்வித சமுதாயப் புரட்சியுடன் நின்றுவிடவில்லை. பொருளா தாரத் துறையிலே, வடநாட்டின் தொடர்பு அதாவது, மத்திய அரசின் ஆதிக்கத்திலிருந்து தமது திராவிட நாடு அறுத்துக்கொள்ள வேண்டும் என்பதும் திராவிட இயக்கத்தின் நோக்கம்.
1950-ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த வகைக் கொள் கைகளிலும் லட்சியங்களிலும் ஏதாவது மாறுதல் உண்டா என்று நான் மேற்கொண்டு கேட்டபோது அவர், ‘‘இல்லை’’ என்று தமிழில் உறுதி தொனிக்கப் பதிலளித்தார். இவரது தனி திராவிட நாடு, தெளிவாகக் கூறுமிடத்து தனித் தமிழ்நாடு கொள்கை அரசியல், நல்ல வெற்றிபெற்றுள்ளது.
அவர் தீவிரப் பிரச்சாரம் நடத்திவந்தும் இன்னும் பலர் கோயிலுக்குப் போகிறார்களே என்று நான் கேட்டபோது அவர், ‘‘அங்கேதான் ஆண்களும் பெண்களும் சந்திக்க வசதிப்படுகிறது’’ என்றார்.
கடவுள் மறுப்புச் சுவரொட்டிகள்
சுவரொட்டி அறிக்கை ஒன்றைக் கொண்டுவரச் செய்து எனக்குக் காட்டினார். இந்த சுவரொட்டிப் பிரதிகள் அவர் பேசிடும் கூட்டங்களிலும் ஊர்கள்தோறும் ஒட்டப்பட்டுள்ளன. ஜனங்களும் ஆயிரக் கணக்கில் இதனை வாங்கி, தங்கள் வீடுகளிலும் தி.க. கூட்டங்கள் நடக்கும் இடங்களிலும் வைத்திருக்கிறார்கள். அந்த சுவரொட்டி அறிக்கையில்…
கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்பினவன் அயோக்கியன்
வணங்குகிறவன் காட்டுமிராண்டி
என்று எழுதப்பட்டிருந்தது. கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்றே இந்தப் பெரியார் உறுதி தொனிக்கக் கூறுகிறார்.
தீண்டாமை, சாதி வேற்றுமைகள், மூடநம்பிக்கைகள், மடமைச் சடங்குகள் ஆகியவற்றை இவர் கடுமையாக, வன்மையாகக் கண்டித்து அவற்றை விட்டொழிக்கும்படி வலியுறுத்திவருகிறார். இவர் மார்க்சியவாதி அல்ல. இவர், பொதுமக்கள்மீது அவர்களுடைய லட்சியங்கள், நல்வாழ்க்கை விஷயமாகவும் கொண்டுள்ள பற்றுதலும், ஒரு இனத்தவர்கள் மற்ற இனத்தவர்கள்மீது ஆதிக்கம் செலுத்துவதையும் இவர் வெறுப்பதும் இவரைக் கிட்டத் தட்ட மார்க்சியவாதி என்றே எண்ணச் செய்கிறது.
உருது-இந்தி எழுத்தாளரான கே.ஏ. அப்பாஸ் (1914-1987), தந்தை பெரியாரைச் சந்தித்து அவரைப் பற்றி 1968-ல் எழுதியதன் தமிழாக்கம் விடுதலை நாளிதழில் வெளியானது. அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
- தகவல் உதவி: சு.ஒளிச்செங்கோ, ஓய்வுபெற்ற செய்தியாளர்
| பெரியார் நினைவு நாள் - டிசம்பர் 24, 1973 |