

சென்னையில் நடக்கும் திருவிழாக்களில் மிக முக்கியமானது புத்தகக்காட்சி. வாசிப்பின் மீது காதல் கொண்டவர்கள் தங்களுக்கு விருப்பமான எழுத்தாளர்களின் புத்தகங்களையும் புதிதாக வெளியாகும் புத்தகங்களையும் வாங்குவதற்காகப் படையெடுக்கும் உற்சாக உற்சவம் இது. 2015 ஜனவரி 9-ம் தேதி தொடங்கும் 38–வது புத்தகக் காட்சிக்காக மும்முரமாகத் தயாராகிக்கொண்டிருக்கிறது சென்னை. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி மைதானத்தில் நடக்கவிருக்கும் இந்த புத்தகக்காட்சி, 21-ம் தேதி நிறைவுபெறுகிறது. வாசிப்புலகமும் பதிப்புலகமும் சங்கமித்துக் கொண்டாடும் இந்தத் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாகத் தொடங்கியிருக்கின்றன.
ஆப்செட் பிரின்டர்கள், ஓவியர்கள், அட்டை வடிவமைப்பாளர்கள், பக்க வடிவமைப்பாளர்கள் தொடங்கி புத்தகம் பைண்டிங் செய்பவர்கள், அவற்றை பண்டல் பண்டலாகக் கட்டி, விற்பனை நடக்கும் புத்தகக் கண்காட்சி அரங்குகளுக்கு அனுப்பிவைப்பவர்கள் என்று பல நூறு கலைஞர்கள், தொழிலாளர்கள் இரவு பகல் பார்க்காமல் பரபரப்புடன் இயங்கிவருகிறார்கள்.
ஆரம்ப வலி
“எங்களிடம்தான் ஒரு புத்தகத்துக்கான வேலை தொடங்குகிறது. ஆனால், புத்தகத் தயாரிப்பு எவ்வளவு விலை கூடினாலும் பக்க வடிவமைப்பு செய்பவர்களுக்குப் பெரிய ஊதிய உயர்வு கிடைப்பதில்லை. இந்த மாதங்களில் எங்களுக்கு ஓய்வே கிடையாது. ஆனால், இதுதான் கொஞ்சமாவது வருமானம் வரும் காலம்” என்கிறார் பக்க உருவாக்கம் செய்யும் ரேகா கிரி.
சூடு பறக்கும் அச்சுத் தொழில்
புத்தகக்காட்சியை எதிர்கொள்ள ஆப்செட் உலகம் எந்த வகையில் தயாராக இருக்கிறது? “பேசக்கூட நேரமில்லாம ஓடிக்கிட்டிருக்கோம். பத்து நாள் திருவிழான்னாலும், இந்த ஒரு மாசம் நாங்க உழைக்கும் உழைப்புதான் அடுத்த ஒரு வருஷத்துக்கான சாப்பாடு” என்று சிரிக்கிறார் மணி ஆப்செட் உரிமையாளர் சண்முகசுந்தரம். “ புதுப் புத்தகங்கள்ல 30 தலைப்புகள்னா, மறுபதிப்பு செய்யப்படுற புத்தகங்கள்ல 40 தலைப்புகள்னு ஒவ்வொரு பெரிய பதிப்பகமும் தலா 70 தலைப்புகளுக்குக் குறையாம எங்ககிட்ட ஆர்டர் குடுத்திருக்காங்க” என்கிறார் சண்முகசுந்தரம். திருவேற்காடு நோம்பல் பகுதியில் அச்சகம் நடத்தும் இவர், 1984-லிருந்து இந்தத் துறையில் இருக்கிறார். போர்க்களத்தில் பணியாற்றும் வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது இவரது அச்சகம்.
ஒரு வாரத்துக்குள்…
பெரும்பாலும் புத்தகங்கள் குறுகிய கால இடைவெளியில் சுடசுடத் தயாராகி வாசகர்களின் கைக்கு வருகின்றன. “காலண்டர் பிரின்டிங் எல்லாம் சுத்தமாக் குறைஞ்சுபோச்சு. புத்தகக்காட்சி வந்தால்தான் அச்சகம் நடத்துறவங்களுக்குப் புத்துணர்ச்சியே வரும். பொதுவா, நல்ல அனுபவமுள்ள பதிப்பகங்கள் கொஞ்சம் முன்கூட்டியே ஆர்டர் பண்ணிடுவாங்க. ஆனா, பெரும்பாலும் மத்த பதிப்பகங்கள்லாம் ஒரு வாரத்துக்கு முன்னாலதான் ஆர்டர் குடுப்பாங்க. அப்புறம் ராத்திரி, பகல்ங்குற பேச்சே இருக்காது. வேலை, வேலை, வேலைதான்” என்கிறார்கள் அச்சுத்தொழில் வட்டாரத்தில் அனுபவம் கொண்டவர்கள்.
புத்தகங்கள்: ஒரு கணக்கு
சராசரியாக 160 பக்கங்கள் கொண்ட புத்தகம் என்றால், அச்சு, பைண்டிங் என்று 12 மணி நேரத்தில் தயாராகிவிடும். இருக்கும் அச்சு இயந்திரங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒரு நாளில் 5 முதல் 6 தலைப்புகள் தயாராகிவிடும் என்கிறார்கள். பைண்டிங்கைப் பொறுத்தவரை பெரும்பாலும் இதற்கென இருக்கும் கடைகளில் கொடுத்துதான் வாங்கப்படுகிறது. திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளில் புத்தக பைண்டிங் செய்யும் கடைகள் நிறைய இருக்கின்றன.
டிஜிட்டல் தூரிகைகள்
தற்போது வெளியாகும் பல புத்தகங்கள் வாசகர்களின் கவனத்தை ஈர்க்க முக்கியக் காரணம் அட்டை வடிவமைப்பு. புத்தகத்தின் கருவைப் புகைப்படங்கள், ஓவியங்கள் மூலம் உணர்த்தும் அட்டைப் படங்கள் புத்தக விற்பனையில் கணிசமாக உதவுகின்றன. இந்தப் பரபரப்பில் ஓவியர்களும் பங்கேற்கிறார்கள். “இந்த முறை, மொழிபெயர்ப்புப் புத்தகங்கள், நாவல்கள், பெண்ணியம் அடிப்படையிலான கவிதைப் புத்தகங்கள் என்று நிறைய புத்தகங்களுக்கு வரைந்திருக்கிறேன். சில புத்தகங்களின் அட்டைக்கான வடிவமைப்பும் செய்திருக்கிறேன். ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்புக்கு வரைந்தது நல்ல அனுபவம்” என்கிறார் ஓவியர் ரோஹிணி.
ஓவியங்களை பென்சிலில் வரையும் இவர், அவற்றை ஸ்கேன் செய்து போட்டோஷாப்பில் எடிட் செய்கிறார். மெல்லிய வண்ணங்களுடனான அரூப கோட்டோவியங்கள் இவரது சிறப்பு.
வாசிப்பின் எல்லையை விரிவாக்கப்போகும் மற்றொரு நிகழ்வுக்காக நேரக்கணக்கு பார்க்காமல் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். இன்னும் சில நாட்களில் இதே கொண்டாட்டத் தீ வாசகர்களைத் தொற்றும்!
- வெ. சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in