Last Updated : 04 Apr, 2014 12:00 AM

 

Published : 04 Apr 2014 12:00 AM
Last Updated : 04 Apr 2014 12:00 AM

இந்த ஜனநாயகம்தான் நம் ஆதாரம்: கொடிக்கால் நேர்காணல்

முக்கடல்கள், சுற்றிலும் மலைகள், பரந்து விரிந்த வயல்கள்... கன்னியாகுமரியின் அழகை விவரிக்கவும் வேண்டுமா? ஐந்திணைகளில் நான்கு திணைகளும் ஒருங்கமைந்த குமரி, தமிழகத்தின் அழகிய அடையாளம்.

சுதந்திரம் அடைந்தபோது குமரிப் பகுதி தமிழகத்தின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. சேரர்களின் வீழ்ச்சிக்குப் பின் ஏராளமான படையெடுப்புகளைச் சந்தித்த அது கடைசியில் திருவிதாங்கூர் மன்னர்களின் ஆளுகைக்குக் கீழ் இருந்தது. ஆங்கிலேயர்கள் அகன்ற பின்னரும் திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதியிலேயே கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் அது நீடித்தது.

மார்ஷல் நேசமணி தலைமையிலான விடுதலைப் போராட்டத்தின் விளைவாகவே அது தமிழகத்தின் ஒரு பகுதியாக மாறியது. நிலப் பகுதியில் கிட்டத்தட்ட சரி பாதி விவசாய நிலமாகவும் மூன்றில் ஒரு பகுதியை வனமாகவும் கொண்ட குமரியைத் தாமிரவருணியும் வள்ளியாறும் பழையாறும் நிறைக்கின்றன. அந்தக் காலத்தில் குமரியைத் திருவிதாங்கூரின் களஞ்சியம் என்று சொல்வார்களாம்.

இப்போதும் தமிழகத்தின் வளர்ச்சி அடைந்த மாவட்டங்களில் முதல் மூன்று இடங்களுக்குள் குமரியும் இடம்பெற்றிருக்கிறது. என்றாலும், தலைநகருக்குச் செல்லும் தேவை ஏற்படும்போதெல்லாம், கூப்பிடு தொலைவில் இருக்கும் திருவனந்தபுரத்தை விட்டுவிட்டு, சென்னைக்குச் செல்ல வேண்டியிருப்பது முணுமுணுப்பாகக் குமரிக்காரர்களிடமிருந்து இன்னமும் வெளிப்படுகிறது.

இந்தியச் சுற்றுப்பயணத்தைக் குமரியிலிருந்து தொடங்குவது எவ்வளவு பொருத்தமானதோ, அவ்வளவு பொருத்தமானது கொடிக்கால் ஷேக் அப்துல்லாவிடமிருந்து தொடங்குவதும். ஓர் ஏழை இந்துவாக, தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவராக, செல்லப்பாவாகப் பிறந்த ஷேக், தன்னுடைய இளம்வயதிலேயே தாய் - தந்தை இருவரையும் இழந்தவர். தன் வாழ்வைத் தானே வடிவமைத்துக்கொண்டவர். தன்னுடைய 15-வது வயதில், நாட்டின் முதல் பொதுத்தேர்தலில் அன்றைய ஐக்கிய முன்னணி வேட்பாளர்களான சி. சங்கர், டி.எஸ். ராமசாமிப் பிள்ளை, கற்காடு எஸ். சாம்ராஜுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதன் மூலம் அரசியலில் அடி எடுத்துவைத்தவர் ஷேக். தொடர்ந்து ஈத்தாமொழியில் தெற்கெல்லை விடுதலைப் போராட்ட ஆதரவு மாநாடு, குமரியைத் தமிழகத்துடன் இணைப்பதற்கான தொடர் போராட்டங்கள், கக்கன் பங்கேற்ற தாழ்த்தப்பட்டோர் லீக் மாநாடு என இறங்கியவரின் ஆரம்பக் கால அரசியல் களம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மனைவியும் கட்சிக்காரர் என்பதால், கட்சி, அமைப்புப் பணிகள், எழுத்து, பத்திரிகை, போராட்டம், சிறை என்று காலத்தைக் கழித்தவர், ஒருகட்டத்தில் தலித் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். இஸ்லாத்தை வரித்துக்கொண்ட பிறகு இஸ்லாமிய அமைப்புகளோடு இணைந்து பணியாற்றினார். ஷேக்கின் அரசியல் தொடர்புகளை கருணாநிதி முதல் இந்திரா காந்தி வரை சொல்லிக்கொண்டே போகலாம். தமிழகத்தின் விளிம்புநிலை அரசியலின் முக்கிய முன்னோடிகளில் ஒருவரான ஷேக்குக்கு இப்போது 80 வயதாகிறது. மனிதர் படு உற்சாகமாகப் பேசுகிறார்.

நீங்கள் எல்லைப் போராட்டங்களில் பங்கேற்றவர் இல்லையா? இப்போது அந்தப் போராட்டங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இதைப் பாருங்கள்... (எல்லைப் போராட்டத் தியாகி என்று அரசு அளித்த பட்டயத்தைக் காட்டுகிறார்...) அன்றைக்குப் பட்ட பாட்டுக்கான நினைவுச் சின்னம் இது. இன்றைக்கு இருப்பவர்களுக்கு அந்த வலி தெரியாது. இனம், மதம் சார்ந்து நீங்கள் சிறுபான்மையினராக உணர்வதைக் காட்டிலும் வலி மிகுந்தது மொழி சார்ந்து உங்களைப் பலவீனமாக நீங்கள் உணர்வது.

ஆனால், இன்றைக்கெல்லாம் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் எல்லா மொழி பேசும் மக்களும் வாழத்தானே செய்கிறார்கள்?

நீங்கள் பெருநகரங்களின் நிலைமையோடு இதை ஒப்பிடக் கூடாது. பிழைப்பதற்காக ஒரு இடத்துக்கு நிர்ப்பந்தப்பட்டுப் போவது வேறு. உங்கள் சொந்த ஊரிலேயே நீங்கள் அதிகாரம் பறிக்கப்பட்டவராக வாழ்வது வேறு. சரி, பிழைப்புக்காக வெளியூருக்கு இடம்பெயர்வதையே எடுத்துக்கொள்வோம். அங்கு போன பிறகு எந்தப் பிரச்சினைக்காவது குரல்கொடுக்கிறீர்களா? பிழைத்தால் போதும் என்றுதானே நினைக்கிறீர்கள். ஏனென்றால், அந்த ஊர் உங்களுடைய ஊர் அல்ல.

இந்தியா மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டது சரியானதுதானா?

அதுதான் சரியானது; அதுதான் பொருத்தமானது. தேசிய நலன் என்ற பெயரிலும் பிராந்தியப் பிரிவினை எண்ணங்கள் வலுவடையும் என்ற பெயரிலும் மொழிவாரிப் பிரிவினையை விமர்சித்தவர்கள் உண்மையில் தேசிய இனங்களின் அடையாளங்களை அழிக்கவே முயற்சித்தார்கள். ஒருவேளை அவர்கள் நோக்கப்படி பொருளாதார நோக்க அடிப்படையிலான மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தால், இன்றைக்கு இந்தியா சிதறிப்போயிருக்கும்.

இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் தொடங்கி எல்லாத் தேர்தலிலும் பங்கெடுத்திருக்கிறீர்கள். அன்றைய சூழலை இன்றைய சூழலோடு ஒப்பிட முடியுமா?

கொஞ்சம்கொஞ்சமாகச் சீரழிந்திருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். எவ்வளவோ படிக்கிறோம், சம்பாதிக்கிறோம், வளர்கிறோம் என்றெல்லாம் சொன்னாலும், நாம் எந்த இடத்தில் நிற்கிறோம் என்பதைத் தேர்தல்கள்தான் சரியாக அடையாளப்படுத்துகின்றன. பணம், இனம், சூது இவைதானே தேர்தலைத் தீர்மானிக்கின்றன? அன்றைக்கு அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு, பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்குச் சமூகத்தில் ஒரு மதிப்பு இருந்தது. அரசியல்வாதிகளும் அந்த மதிப்புக்குக் கட்டுப்பட்டே கண்ணியமாக நடந்துகொண்டார்கள். இன்றைக்கு இரு தரப்பிலுமே அது போய்விட்டது. நான் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலராக இருந்தபோதுகூட, வீட்டில் மளிகைச் சாமான் வாங்கக் காசு இல்லாத நிலையை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால், கவனம் எல்லாம் கட்சியில்தான் இருந்தது. நான் இல்லாதபோது வீட்டுக்கு வரும் தோழர்கள் அடுக்களையில் என்ன இருக்கிறது, இல்லை என்று பார்த்துவிட்டுத் தங்கள் கைக் காசில் சாமான் வாங்கிப் போட்டுவிட்டுப் போவார்கள். ஆனால், பணம் என் பொதுவாழ்க்கையைப் பாதிக்கவில்லை. இன்றைக்கெல்லாம் இது சாத்தியமா? அரசியல் முழுக்க முழுக்கப் பணக் காரர்கள்வசம் போனதுதான் நடந்ததிலேயே மோசம்.

எந்தக் காலகட்டத்தில் இது நடந்தது? முக்கியக் காரணம் யார்?

படிப்படியாகத்தான் நடந்தது. இதிலே யாருமே நியாயவான் என்று சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியைப் பொற்காலம் என்று சொல்கிறோம். அந்த காமராஜரே சுதந்திரப் போராட்டத்தில் போராடிய தூக்குமேடை ராஜகோபாலுக்கும் காசிராஜனுக்கும் தேர்தலில் போட்டியிட இடம் கொடுக்கவில்லையே? பெருமுதலாளிகளான எம்.சி.சங்கர ரெட்டியாருக்கும் அய்யநாடாருக்கும்தானே கொடுத்தார்? ஆக, யாரும் இதில் விதிவிலக்கு இல்லை.

சுதந்திரம் அடைந்தபோது, காங்கிரஸுக்கு அடுத்த நிலை யில் இருந்த இடதுசாரிகள் ஏன் கொஞ்சம்கூட முன்னகர வில்லை? ஒரு முன்னாள் இடதுசாரியாக நீங்கள் இதுபற்றி யோசித்திருக்கிறீர்களா?

ஒரு எழுத்தாளர் சொன்னதுபோல, ‘கம்யூனிஸம் என்பது விவாதிக்க வேண்டிய சிந்தனை அல்ல; அது நன்கு சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு.’ கம்யூனிஸ்ட்டுகள் செய்ய வேண்டியதெல்லாம், அந்தந்தச் சமூகத்துக்கு ஏற்ப அதை எப்படிச் செயல்படுத்த வேண்டியது என்கிற வழிமுறையைக் கையாள்வதுதான். இந்திய கம்யூனிஸ்ட்டுகள் அந்த வழிமுறையை இன்னும் கண்டடையவில்லை.

சரி, இந்தியச் சமூகத்தின் தலையாய பிரச்சினையாக எதைச் சொல்வீர்கள்?

சாதி.

அதனால்தான் மதம் மாறினீர்களா?

ஆமாம்.

சாதியிலிருந்து தப்பிக்க மதம்தான் புகலிடமா?

என்னளவில் கண்டுகொண்ட வழி இது. அம்பேத்கர் இந்த வழியைத்தானே கையாண்டார்?

இந்தியாவில் இந்து மதம்போலவே இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களிலும் சாதிப் பாகுபாடு இருக்கத்தானே செய்கிறது?

என் தனிப்பட்ட அனுபவத்திலிருந்து இல்லை என்று சொல்வேன். நிச்சயமாக இந்து மதம் அளவுக்குச் சாதிப் பாகுபாடு எங்கும் இல்லை என்பதை எல்லோருமே அறிவார்கள்.

சரி, அன்றைய செல்லப்பாவிலிருந்து இன்றைய அப்துல்லா வரையிலான ஒட்டுமொத்தப் பொது வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையில் சொல்லுங்கள்... இந்தியா என்ற நாட்டை எப்படி மதிப்பிடுகிறீர்கள்? இதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

இந்தச் சாதி, மதம், பணப் பாகுபாடு எல்லாவற்றையும் தாண்டி நாம் நமக்கான வாழ்க்கையைத் தீர்மானித்துக் கொள்வதற்கான உரிமையை இந்த நாடு வழங்கியிருக்கிறது பார்த்தீர்களா? அதைத்தான் - அந்த ஜனநாயகத்தைத்தான் - நான் எல்லாவற்றுக்கும் ஆதாரமாகப் பார்க்கிறேன். எவ்வளவோ கொடுமைகளையெல்லாம் அனுபவித்திருக்கிறேன். எல்லாவற்றி லிருந்தும் மீண்டுவிட முடியும் என்ற நம்பிக்கையையே இந்த நாடுதான் தந்திருக்கிறது. நிச்சயம் நல்ல மாற்றங்கள் வரும் என்று நினைக்கிறேன். நேற்று வரை அர்விந்த் கேஜ்ரிவால் யார்? இன்றைக்கு அவரும் ஒரு அகில இந்தியத் தலைவராக உருவாகியிருக்கிறாரே? பல நல்லவர்கள் அவர்கள் பின் அணிவகுக் கிறார்களே? எப்படி? நாடு தன் தேவைக்கு ஆட்களை உருவாக்குகிறது. உருவாக்கிக் கொள்ளும். நான் இந்தியாவை நம்பிக்கையுடனேயே பார்க் கிறேன்.

தொடர்புக்கு: samas@kslmedia.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x