Last Updated : 20 Nov, 2014 09:55 AM

Published : 20 Nov 2014 09:55 AM
Last Updated : 20 Nov 2014 09:55 AM

ருத்ரய்யா: என்றுமே அவர் அப்படித்தான்!

சென்னை தரமணி திரைப்படக் கல்லூரி யில் எனக்கு சீனியராக இருந்தவர் ருத்ரய்யா. 1974-75-ல் அவரை நான் சந்தித்தேன். இடதுசாரி சிந்தனைகளும், சர்வதேச சினிமாக்கள் மீதான பிரியமும் எங்களை இணைத்தன. அந்தக் காலகட்டத்து சினிமா மாணவர்கள் எல்லோரையும் பிரெஞ்சு புதிய அலை சினிமா ஈர்த்திருந்தது. திரைப்படக் கல்லூரி என்பது வெறுமனே வணிகப் படங்களை உருவாக்குபவர்களுக்கான இடம் அல்ல. அது மாற்று சினிமாவுக்கான உத்வேகத்தைக் கொடுக்கும் தளம் என்ற அபிப்ராயம் எங்கள் இரண்டு பேருக்கும் இருந்தது.

ருத்ரய்யாவுக்கு அதற்கான வாய்ப்புகளும் அமைந்தன. இயக்குநர் அனந்து அவருக்குப் பக்கபலமாக இருந்தார். வணிக சினிமாவில் பணியாற்றினாலும், அனந்து சினிமா களஞ்சியமாக இருந்தார். திரைப்பட விழாக்களுக்குச் சென்று ஆர்வத்தோடு படங்களைப் பார்த்துவந்தவர் அவர். வெறுமனே ஒரு திரைக்கதையை விவாதிப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கும் மேலான நிறைய உதவிகளைச் செய்பவராக இருந்தார். அதனால்தான், ‘அவள் அப்படித்தான்’ படத்தையே ருத்ரய்யா அனந்துவுக்குச் சமர்ப்பணம் செய்தார்.

ருத்ரய்யாவுக்கு முதலில் கதைகள் அமையவில்லை. நான் ஆவணப்பட, விளம்பரப்பட உலகில் இருந்தேன். அதன் பின்னணியிலிருந்து ‘அவள் அப்படித்தான்’கதைச் சுருக்கத்தை இரண்டு பக்கத்தில் எழுதிக்கொடுத்தேன். அனந்துவுக்கு எனது கதைச்சுருக்கம் பிடித்திருந்தது. ரஜினி என்ற நட்சத்திர பலத்துக்காகச் சில மாற்றங்களைச் செய்தார் அனந்து. கதாநாயகியின் ஃப்ளாஷ்பேக்கை வண்ணநிலவன் எழுதினார். ‘அவள் அப்படித்தான்’ டைட்டிலையும் அனந்துதான் வைத்தார்.

தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலைத் தான் ருத்ரய்யா முதலில் படமாக எடுக்கத் தீர்மானித்திருந்தார். கமல்ஹாசனும் அந்தக் கதையில் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். முதலில் ஒரு கமர்ஷியல் படத்தை எடுத்துவிட்டு, இரண்டாவதாக ‘அம்மா வந்தாள்’ படம் என்று முடிவுசெய்தோம். ‘அவள் அப்படித்தான்’அறிவிப்புடன் சேர்ந்தே ‘அம்மா வந்தாள்’ படத்துக்கும் அறிவிப்பு கொடுத்தோம்.

ருத்ரய்யா - கோப்புப் படம்: அருண் மோ

கலைஞர்களின் ஒத்துழைப்பு

‘அவள் அப்படித்தான்’ படத்தில் நடிகராக மட்டும் அல்ல, தொழில்நுட்பக் கலைஞராகவும் கமல் எல்லாவிதமாகவும் ஒத்துழைப்பு கொடுத்தார். காஸ்டியூம் வரை கவனித்துக்கொண்டார். ரஜினியும் மிகவும் குறைந்த சம்பளம் வாங்கிக்கொண்டு நடித் தார். வித்தியாசமான ஒரு அணி படம் எடுப்பதற்காக வந்திருக்கிறார்கள்; அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எல்லோரும் ஒத்துழைத்தார்கள். நல்லுசாமி-ஞானசேகரன் ஒளிப்பதிவும் மிகவும் துணிச்சலானது. நிழலுருவக் காட்சிகளை (சில்ஹவுட்) குறைவான வெளிச்சத்தில் நிறையப் பரிட்சார்த்தம் செய்து எடுத்திருப்பார்கள். அந்த வருடத்தில் வெளியான படங்களில் பெரும்பாலானவை வண்ணப் படங்களே. பொருளாதாரச் சிக்கனத்துக்காகவே கருப்பு-வெள்ளையில் படம்பிடித்தோம். ஆனால், அதுவே அப்படத்தின் சிறப்பம்சமாக இப்போது உணரப்படுகிறது.

படத்தின் வசனங்களையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். யதார்த்தத்துக்கும் நாடகத் தன்மைக்கும் இடையில் தர்க்கவாதம்போல வசனங்கள் கூர்மையாக இருக்கும். அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. பட வெளியீட்டின்போது மிகப் பெரிய சோதனையை ‘அவள் அப்படித்தான்’ சந்தித்தது. வெளியான ஒரு வாரத்தில் அனைத்துத் திரையரங்குகளிலிருந்தும் படப் பிரதி திரும்பி வந்துவிட்டது. ஆறு மாதம் கழித்து அந்தப் படத்தை சென்னை சஃபையரில் காலைக் காட்சியாக மட்டும் நான் வெளியிட்டேன். மிருணாள் சென் அந்தப் படத்தைப் பாராட்டியிருந்தார். தமிழில் இப்படியான படம் வந்தது ஆச்சரியம் என்று சொல்லியிருந்தார். பாரதிராஜாவும் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். “எந்த மாதிரியான வேட்கைகளுடன் தேடலுடன் நான் சினிமாவுக்கு வந்தேனோ அதைத் திரும்பிப் பார்க்க வைத்தது ‘அவள் அப்படித்தான்’ ” என்றார் அவர். பாரதிராஜா, மிருணாள் சென் இருவரது பேச்சையும் விளம்பரப்படுத்திப் படத்தை வெளியிட்டோம். நிறையப் பேர் வரத் தொடங்கினார்கள்.

உடலைச் சுட்ட படைப்பு

இந்தப் படத்தை எடுத்ததில் ருத்ரய்யா பொருளாதார விஷயத்தில் நிறையப் பாதிக்கப்பட்டார். ஒரு பத்திரிகை நேர்காணலில் அவரிடம் ‘‘ ‘அவள் அப்படித்தான்’ படத்தின் மூலம் கையைச் சுட்டுக் கொண்டீர்களா?” என்ற கேள்விக்கு, “உடலையே சுட்டுக்கொண்டேன்” என்று பதில் சொல்லியிருப்பார். ஆனாலும், ‘அவள் அப்படித்தான்’ படம் மூலம் அவருக்குத் திரையுலகில் ஆதரவுகளும் குவிந்தன. ஒரு படைப்பு உடனடியாக மக்களைக் கவரா விட்டாலும், பொருளாதாரரீதியாகப் படைப்பாளிக்கு லாபத்தைத் தராவிட்டாலும், அது நல்ல படைப்பாக இருந்தால், காலம் கடந்து ஏற்றுக்கொள்ளப்படும் என்பதற்கு உதாரணம் ‘அவள் அப்படித்தான்’.

சுஜாதாவின் ‘24 ரூபாய் தீவு’ கதையில் நடிக்க கமல்ஹாசன் உடனடியாக கால்ஷீட் கொடுத்தார். ஒரு பாட்டுடன் நின்றுபோனது. அடுத்து ‘ராஜா என்னை மன்னித்துவிடு’. அதற்கும் நாயகன் கமல்ஹாசன்தான். அறிவிப்போடு நின்றுவிட்டது. அதற்குப் பிறகுதான் ‘கிராமத்து அத்தியாயம்’. இளையராஜா, பஞ்சு அருணாச்சலம் போன்றோரின் முழு ஒத்துழைப்பு இருந்தாலும், ருத்ரய்யாவிடம் எதிர்பார்க்கப்பட்ட தரத்தில் அந்தப் படம் வரவில்லை.

அதற்குப் பிறகு கொஞ்ச நாட்கள் கழித்து 1983-84-ல் திரும்பவும் படம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு, ரஜினியைக் கதாநாயகனாக மனதில் கொண்டு, கடலோரக் கிராமத்தை மையமாக வைத்து ஒரு கதையை எழுதினேன். ருத்ரய்யா நினைத்ததுபோல நட்சத்திரங்கள் கிடைக்கவில்லை. அந்தக் கதைதான் பின்னர் பாரதிராஜா இயக்கத்தில் ‘கடலோரக் கவிதைகள்’ படமாக வந்தது.

சிவாஜி கணேசனை பீஷ்மர் கதாபாத்திரமாக்கி 3-டி தொழில்நுட்பத்தில் மகாபாரதக் கதையை எடுக்க விரும்பினார். அதுவும் சாத்தியமாகவில்லை. ரகுவரனை வைத்து ‘டிஎஸ்பி 7’, சுஜாதா கதை - திரைக்கதை. அதுவும் பூஜையோடு நின்றுவிட்டது.

தோல்வி அடைந்த முயற்சிகள்

நீண்ட இடைவெளிக்குப்பின், ஷேக்ஸ்பியரின் ரோமியோ-ஜூலியட் கதையைத் தற்காலச் சூழலில் மியூஸிக்கலான ஒரு திரைப்படமாக எடுக்கலாம் என்று முடிவுசெய்தோம். ஏ.ஆர். ரஹ்மான்தான் இசை என்று முடிவுசெய்தோம். வைரமுத்துவிடமும் பேசினோம். ஒளிப்பதிவாளராக பி.சி. ஸ்ரீராமை முடிவுசெய்து, அவரைத் தொடர்புகொண்டோம். அவர் 6 மாதம் கழித்துச் செய்யலாம் என்றார். நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஆனால், வணிகரீதியில் சிலரைச் சந்திக்க வேண்டியிருந்தது. அதை ருத்ரய்யா விரும்பவில்லை. அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. சினிமாவின் வணிகரீதியான நடைமுறைகளில் அவர் தொடர்ந்து முரண்பாடுடையவராக இருந்தார். அதனாலேயே நிறைய வாய்ப்புகளைத் தவறவிட்டார். ஒரு இடதுசாரி சினிமாக்காரராக சினிமாவை ஆயுதம் என்று நம்பியவர் அவர். அபூர்வமான மனிதர். தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டிய, நிறைய நல்ல படைப்புகளைத் தந்திருக்க வேண்டிய இயக்குநர் ருத்ரய்யா. அந்த வாய்ப்பைத் தமிழ் சினிமாவும் இழந்துவிட்டது; அவரும் இழந்துவிட்டார்.

- கே. ராஜேஸ்வர்,‘அவள் அப்படித்தான்’, ‘பன்னீர்புஷ்பங்கள்’, ‘கடலோரக் கவிதைகள்’ போன்ற படங்களின் கதாசிரியர்; ‘அமரன்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’உள்ளிட்ட படங்களின் இயக்குநர்.

தொகுப்பு: ஷங்கர் | படம் உதவி: ஞானம் | ஓவியம்: சீனிவாசன் நடராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x