Published : 11 Jul 2019 08:45 am

Updated : : 11 Jul 2019 08:45 am

 

வனமும் வனச் சட்டமும் யாருக்கானது?

இந்தியாவில் வனங்களில் வாழும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தனிச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் பட்டா இல்லை என்ற காரணத்தைச் சொல்லி அவர்களை வெளியேற்றுகின்றன நீதிமன்றத் தீர்ப்புகள். ‘இந்தியாவின் சுதந்திர எழுச்சியை ஒடுக்கவே பிரிட்டிஷார் வனச் சட்டத்தைக் கொண்டுவந்தார்கள்’ என்ற விமர்சனம்தான் நினைவுக்கு வருகிறது. அப்படியொரு தேவை இன்னமும் இருப்பதாக சுதந்திர இந்தியாவும் கருதுகிறதா என்ன?

சமவெளிப் பகுதிகளில் வேளாண்மை நடந்தாலும் மலையோரங்களில் காடுகளைச் சார்ந்தே அரசுகள் உருவாயின. பூண்டு, மிளகு, புளி, பட்டை, இந்துப்பு, அவ்வப்போது வேட்டை, விலைமதிப்புள்ள கல்மணிகள், உயிர் காக்கும் மூலிகைகள், வீடு கட்டவும் வேளாண்மைக் கருவிகள் செய்திடவும் தேவையான மரங்கள் - இவை அனைத்தும் வனத்திலிருந்தே கிடைத்ததால் வனம் சார்ந்த வாழ்வு தவிர்க்க முடியாததாக இருந்தது. சமவெளிக்கும் மலைக் காடுகளுக்கும் இடையிலான இந்த ஒட்டுறவு வாழ்க்கைக்குத்தான் பிரிட்டிஷார் கொண்டுவந்த வனச் சட்டம் முற்றுப்புள்ளி வைத்தது.

ஸ்லீமேன் எழுதிய குறிப்புகள்

வனப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காகத்தானே பிரிட்டிஷார் வனச் சட்டங்களை இயற்றினார்கள், அது நல்ல விஷயம்தானே என்று தோன்றலாம். மேலோட்டமான பார்வைக்கு அப்படித் தோன்றினாலும் பிரிட்டிஷாரின் நோக்கம் வேறாக இருந்தது. பிரிட்டிஷார் இந்தியா முழுவதும் தங்களது ஆளுகையை விரிவுபடுத்தியபோது பல சுதேசி மன்னர்கள் அவர்களை எதிர்த்துப் போரிட்டனர். இவர்களை ஒடுக்கப் பெரும்படையுடன் இந்தியா முழுவதும் பயணித்தவர் கேப்டன் வில்லியம் ஸ்லீமேன். அவர் இங்கிலாந்து அரசுக்கு அனுப்பிவைத்த குறிப்புகளிலிருந்து வனச் சட்டத்தின் பின்னால் உள்ள நோக்கம் தெளிவாகிறது.

‘கம்பெனி படைகளை எதிர்த்துப் போரிடும் இந்திய மன்னர்களின் படைகள், நம் படைகளைத் தாக்கிவிட்டு காட்டுக்குள் மறைந்துகொள்கின்றன. அவர்களது படைகளுக்கு உதவியாக தக்கர், பண்டரக்கர் என்ற பெயரில் இயங்கும் படையினர் கெரில்லா வீரர்களாக இருக்கிறார்கள். இவர்கள் காட்டுக்குள் பதுங்கி தனி அரசாகவே செயல்படுகிறார்கள். காடுகளின் போக்கினை அறிந்து வைத்திருக்கும் இப்படையினருடன் போரிடுவதால் நமது படைகள் உயிரிழப்பைச் சந்திப்பதோடு, மனவலிமையையும் இழந்துவருகிறது. இவர்களோடு நாம் போரிடுவதைவிட, காடுகளிலிருந்து இந்த மக்களைப் பிரித்தால் மட்டுமே போதுமானது.’

ஸ்லீமேன் போன்ற அதிகாரிகளின் ஆலோசனை களும் அறிவுறுத்தல்களும்தான் 1865-லேயே வனச் சட்டம் இயற்றப்படுவதற்கும், தொடர்ந்து 1878, 1927 ஆண்டுகளில் புதிய சட்டங்கள் இயற்றப்படுவதற்கும் காரணமாயின.

1927-ம் ஆண்டின் வனச் சட்டமானது, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளை அறிவித்து, மக்கள் வனப் பகுதிக்குள் நுழையவே கூடாது என்று கட்டுப்பாடு விதித்தது.

பிரிட்டிஷாரின் பின்தொடர்ச்சி

படிப்படியாக இந்தியா முழுவதும் தங்களை நிலைநிறுத்திக்கொண்ட பிரிட்டிஷார் தக்கர், பண்டரக்கப் படைகளைக் கைதுசெய்தனர். இவர்களின் கொள்ளையில் பங்கு வாங்கிய மன்னர்களையும் சிறையில் அடைத்தார்கள். இதனால் மன்னர்கள் வசமிருந்த நீதி, நிர்வாக அதிகாரங்களும் பிரிட்டிஷார் கைக்கு மாறின. வனச் சட்டங்களை இயற்றிய பிரிட்டிஷார், தங்கள் விருப்பம்போல காடுகளுக்குள் நுழைந்து புலி, சிறுத்தை, சிங்கங்களை வேட்டையாடி வரவேற்பறைகளை அலங்கரிக்க ஆரம்பித்தார்கள். பாறை, குன்று, புல்வெளி, கட்டாந்தரை மணல், மண் இவைகளெல்லாம் சேர்ந்த கருங்காடுகளை அழித்து தேயிலை, காபித் தோட்டங்களை உருவாக்கினார்கள்.

சுதந்திர இந்தியாவின் வனப் பாதுகாப்பு முயற்சிகளும் பிரிட்டிஷாரின் பின்தொடர்ச்சியாகவே இருக்கின்றன. ஓர் உதாரணம் இது. சிறுமுகை ஆற்றங்கரையில் துவக்கப்பட்ட செயற்கைப்பட்டு ஆலைக்காக கொடைக்கானல், நீலகிரி மலைகளில் வாட்டில், யூக்லிப்டஸ், பைன், சைப்ரஸ் மரங்களை நடவுசெய்திட 1972-ல் மத்திய அரசு அனுமதித்தது. ஹெலிகாப்டர் மூலம் வனத்தில் இந்த மரங்களின் விதைகள் தூவப்பட்டன. ஆனால், சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஆலை 1996-ல் மூடப்பட்டது. நான்கு மரங்களின் விதைகளையும் தூவியதன் விளைவு, 1960-ல் எடுக்கப்பட்ட நில அளவையின்படி கொடைக்கானலில் 930 சதுர கிமீ பரப்பளவில் இருந்த புல்வெளி 2014-ல் 300 சதுர கிமீ ஆகக் குறைந்தது. நீலகிரியில் 29,875 ஏக்கரில் இருந்த புல்வெளி 4,700 ஏக்கராகக் குறைந்தது.

பழங்குடிகளின் பாரம்பரிய அறிவு

வனப் பகுதிக்குள் ஈரத்தன்மையைக் காக்கும் காரணிகளில் புற்களுக்கு அடுத்து மூங்கில்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. மூங்கிலும் புல் வகையைச் சேர்ந்ததுதான். இதன் வேர்களில் உள்ள நூற்றுக்கணக்கான முண்டுகள் மழை நீரைச் சேமித்து வைத்து, கொஞ்சம் கொஞ்சமாகக் கசியவிட்டு, ஆண்டு முழுவதும் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்ள உதவுகின்றன. மூங்கில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும். பூத்ததும் தனது ஆயுளை முடித்துக்கொள்ளும். இதனால், காட்டுக்குள் வாழும் பழங்குடியினர், மூங்கிலின் வயதைக் கணக்கிட்டு முன்கூட்டியே வெட்டிவிடுவார்கள். மழைக் காலத்தில் தழைத்துவரும் மூங்கில் குருத்துகளே யானைகளுக்குத் தீவனம். ஆனால், வனத்துக்குள் வாழும் பழங்குடி மக்களிடம் மூங்கிலை வெட்டக் கூடாது என கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பே அரசு உத்தரவிட்டுள்ளது.

வனத்தில் உள்ள பொக்குப் பாறைகள் நிறைந்த பகுதியை ‘வர’ என்பார்கள். இந்த வரைகளிலே தண்டு பெரிதாக உள்ள கச்சாரம்புல், மஞ்சம்புல், கொண்டப்புல் ஆகியவை முளைக்கும். இந்தப் புல்வகைகளின் வேர்கள் வரைகளின் இடுக்குகளில் ஆழமாக ஊடுருவிப் பரவிவிடும். மூங்கில் போல் வேர்முண்டுகளில் நீரைச் சேமித்தும் வைக்கும் இப்புற்கள், பொக்குப் பாறைகளை வளம்நிறைந்த மண்ணாக மாற்றும் திறன் கொண்டவை. இந்தப் புற்களைக் கோடைக்கு முன்பு தீ வைக்க வில்லையென்றால், மூங்கில் போலவே பூத்தவுடன் செத்துவிடும். சிறிய பறவைகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்தப் புற்களில்தான் கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும். அதற்கு ஏதுவான குளிர்ச்சியும் இதமான வெப்பமும் இந்தப் புற்களின் தூர்களில் இருக்கும். பெரும்பாலான காட்டு விலங்குகளுக்கும் இந்தப் புல்வகைகளே தீவனம். புலி, சிறுத்தைகளுக்குச் செரிமானக்கோளாறு ஏற்பட்டால் இந்தப் புல்வகையினைச் சாப்பிடும். பழங்குடி மக்கள் இந்தப் புற்கள் மீது தீ வைப்பது விலங்கினங்களின் நன்மைக்காகவே.

புல்வெளிகளின் இழப்பால் வனங்கள் நீர்ப்பிடிப்புத் தன்மையை இழந்துவிட்டன. ஆண்டு முழுவதும் ஓடைகளில் சீராக நீர்வழிந்தோடிய காலம் முடிந்துவிட்டது. மழைக்கால வெள்ளம் பெருகுவதால், அணைகள் மட்டுமே இன்று நீர் சேமிப்பு நிலையங்களாக உள்ளன. வனப் பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறை எழுவதும், வன விலங்குகள் உணவுக்காக வனத்தை விட்டுக் குடியிருப்புக்குள் நுழைவதும் இதனால்தான்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே சமவெளி மக்களிடமிருந்த வன அறிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. தற்போதைக்குப் பழங்குடி மக்களிடம் மட்டுமே வனம் சார்ந்த அறிவு எஞ்சியுள்ளது. எந்த மரம் அழிந்தால் எந்த விலங்கு இடம்பெயரும், எந்தப் பூச்சி சாகும், அந்தப் பூச்சி செத்தால் எந்தப் பறவை உணவின்றி இடம் மாறிப் போகும் என உயிர்ச் சங்கிலியைத் தெளிவாக அறிந்துவைத்திருப்பவர்கள் பழங்குடிகள் மட்டும்தான். அவர்களின் அறிவைப் பாதுகாக்க வேண்டும் என்றால், வனங்களுக்குள் அவர்களை வாழ அனுமதிக்க வேண்டும்.

- இரா.முத்துநாகு, ‘சுளுந்தீ’ நாவலாசிரியர்.

தொடர்புக்கு: rmnagu@gmail.com

You May Like

More From This Category

facts-to-know-about-kamaraj

காமராஜரை அறிவோம்

கருத்துப் பேழை

More From this Author