Published : 09 Jul 2019 06:58 am

Updated : 09 Jul 2019 06:58 am

 

Published : 09 Jul 2019 06:58 AM
Last Updated : 09 Jul 2019 06:58 AM

மூன்று மொழிகள் கற்பது நல்லது... ஆனால், இந்தித் திணிப்பு கூடாது!- டேவிட் ஷுல்மன் பேட்டி

டேவிட் ஷுல்மன், இஸ்ரேலைச் சேர்ந்த இந்தியவியல் அறிஞர்; சங்க இலக்கியத்தை ஹீப்ரு மொழியில் மொழிபெயர்த்தவர். தமிழ், தெலுங்கு போன்ற இந்திய மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கு முக்கியமான மொழிபெயர்ப்புகளைச் செய்தவர். இவருக்குப் பல பரிமாணங்கள் உண்டு. இஸ்ரேலியர்கள் அபகரித்துக்கொண்ட நிலப் பகுதிகளை பாலஸ்தீனர்களுக்கு மீட்டுக்கொடுக்கும் நோக்கில் செயல்படும் ‘தாயுஷ்’ (அமைதி இயக்கம்) அமைப்பைச் சேர்ந்தவர். இஸ்ரேல் அரசைத் தொடர்ந்து விமர்சித்துவருபவர். தமிழின் வரலாற்றைப் பேசும் ‘தமிழ்: எ பயோகிராபி’ நூல் இவர் தமிழுக்கு அளித்திருக்கும் முக்கியமான பங்களிப்பு. பத்துக்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்தவரான ஷுல்மனுடன் பன்மொழிக்கொள்கை தொடர்பாக உரையாடியதிலிருந்து…

பொதுவாகவே இஸ்ரேலில் பன்மொழியாளர்கள் அதிகம் அல்லவா! இதற்குக் காரணம் என்ன?


பல்வேறு நாடுகளிலிருந்து வந்து சேர்ந்தவர்களின் நாடு இஸ்ரேல் என்பதுதான் முக்கியமான காரணம். பெரும்பாலானோர் மத்திய ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்தவர்கள்; அங்கே ஒரே நேரத்தில் பல மொழிகள் பேசப்படும் (ஹங்கேரியன், ருமேனியன், ஜெர்மானிய மொழி, பிரெஞ்சு, ரஷ்ய மொழி, செர்போ-குரேஷிய மொழி போன்றவை). எனினும், ஒருவரை இருமொழிகளில் புலமை வாய்ந்தவர் என்றோ, பல மொழிகளில் புலமைவாய்ந்தவர் என்றோ அவ்வளவு எளிதில் கூறிவிட முடியாது. ஏ.கே.ராமானுஜன் தன்னைப் பற்றிக் குறிப்பிடும்போது இந்தோ-அமெரிக்கன் என்பதில் உள்ள இடைக்கோடுதான் (hyphen) தான் என்பார். கன்னடம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளை அழகாகப் பேசியவர்தான் அவர். அதே நேரத்தில், இருமொழிப் புலமையாளர்கள் பொதுவாகத் தாங்கள் அறிந்திருக்கும் மொழிகளுள் ஒரே ஒரு மொழியில்தான் அதிகத் தேர்ச்சிகொண்டிருக்க முடியும் என்று அவர் கூறுவதுண்டு. நிறைய மொழிகளில் சமாளித்துவிடுவேன் என்றாலும் என்னை நான் இருமொழிப் புலமையாளன் என்றே கருதுகிறேன். அதாவது ஹீப்ரு-ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில். இதில் ஆங்கிலம் எனது தாய்மொழி, ஹீப்ரு என் இதயத்தின் மொழி. சிறுவயதிலிருந்தே புத்தகங்கள் வாயிலாக நானாகவே கற்றுக்கொண்ட மொழி ஹீப்ரு. ஹீப்ரு, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் சரளமாக எழுதுவேன், கவிதை உட்பட. ஆனால், நான் கற்பிப்பது பெரிதும் ஹீப்ருவில்தான். தெலுங்கும் ஓரளவு சரளமாக எனக்கு வரும். அதை அடுத்து நான் வெவ்வேறு அளவில் கற்றுக்கொண்ட மொழிகள் தமிழ், அரபு உட்பட நிறைய இருக்கின்றன. தற்போது மலையாளத்தை மிகவும் சிரமப்பட்டுக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

இஸ்ரேலில் பின்பற்றப்படும் மொழிக் கொள்கையைப் பற்றி விளக்க முடியுமா?

இஸ்ரேலில் உள்ள யூதப் பள்ளிகளில் ஹீப்ருவிலும், பாலஸ்தீனியப் பள்ளிகளில் அரபி மொழியிலும் சொல்லித்தரப்படுகின்றன. எனினும், எல்லா மாணவர்களும் ஆங்கிலத்தைக் கொஞ்சம் தொடக்க நிலையிலேயே, அதாவது முதல் வகுப்பிலிருந்தே கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். பெரும்பாலான யூதப் பள்ளிகளில் அரபியும் கூடுதலாகச் சொல்லித்தரப்படுகிறது, அதேபோல்தான் இஸ்ரேலில் உள்ள அரபிப் பள்ளிகளில் ஹீப்ருவும் சொல்லித்தரப்படுகிறது (ஆனால், இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளான மேற்குக் கரையிலோ காஸாவிலோ அப்படிச் சொல்லித்தரப்படுவதில்லை). இஸ்ரேலியப் பள்ளிகளில் அரபி கற்றுத்தரப்படும் முறை அவ்வளவு தரமாக இருப்பதில்லை. ஆகவே ஹீப்ரு, அரபி ஆகிய இருமொழிகளிலும் புலமை என்ற லட்சிய நிலைக்கு வெகுதூரத்தில்தான் நாங்கள் இருக்கிறோம். ஒரு காலத்தில் அது நிச்சயம் சாத்தியமாகும் என்றே நம்புகிறேன்.

வழக்கொழிந்த நிலையிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு, மீண்டும் வழக்கில் வெற்றிகரமாகக் கொண்டுவரப்பட்ட ஒரே மொழி அநேகமாக ஹீப்ருவாகத்தான் இருக்கும். உங்கள் தேசத்தைக் கட்டமைத்தபோது, அதன் ஒரு பகுதியாக ஹீப்ருவை எப்படி உயிர்ப்பித்தீர்கள்?

வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்ட ஒரே மொழி ஹீப்ரு என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. மலாய் மொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நவீன இந்தோனேஷிய மொழிக்கும் ஹீப்ருவின் புத்துயிர்ப்புக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. எனினும், ஹீப்ரு மீட்டெடுக்கப்பட்ட விதம் மிகவும் தனித்தன்மை கொண்டது. 1880-ல் மொழியியல் மேதை எலீஸெர் பென்-யெஹுதா கிழக்கு ஐரோப்பாவிலிருந்து ஜெருசலேமுக்குக் குடிபுகுந்தார். இந்த நாட்டுக்குத் திரும்பிவரும் யூதர்களுக்கு ஒரு பொதுமொழி இருக்க வேண்டும் என்றும், அந்த மொழி ஹீப்ருவாகத்தான் இருக்க முடியும் என்றும், வரலாற்றுக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு பென்-யெஹுதா முடிவுக்குவந்தார். ஆகவே, தொன்மையான ஹீப்ரு வேர்ச்சொற்களிலிருந்து புதிய ஹீப்ரு சொற்களை அவர் உருவாக்க ஆரம்பித்தார். அல்லது பழைய ஹீப்ரு சொற்களைப் புழக்கத்தில் கொண்டுவந்தார். தனது வீட்டில் உள்ளவர்களுக்கிடையே ஹீப்ருவில் மட்டும் பேசிக்கொள்வது என்று வலியுறுத்தினார். ஆகவே, அவரது மகன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு ஹீப்ருவைத் தாய்மொழியாகக் கொண்டு வளர்ந்த முதல் நபராக மாறினார். பென்-யெஹுதா ஹீப்ருவில் செய்தித்தாளும் வெளியிட, அது மிகவும் பிரபலமானது. பல தொகுதிகளைக் கொண்ட பெரிய அகராதியையும் அவர் உருவாக்கினார். ஹீப்ருவை மீட்டெடுக்க வேண்டும் என்ற அவரது அசாதாரணமான எண்ணம் பாலஸ்தீனத்துக்கு அப்போது வந்துசேர்ந்திருந்த யூத முன்னோடிகளையும் தொற்றிக்கொள்ள, அவர்கள் தங்களுக்குள் ஹீப்ருவில் பேசிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இத்தனைக்கும் அவர்களில் பலருக்கும் அந்த மொழி தெரியாது. மேலும், நவீன சிந்தனைகளுக்குத் தேவையான சொற்கள் பலவும் அப்போது ஹீப்ருவில் கிடையாது. பல்லாயிரக்கணக்கான சொற்கள் புதிதாக உருவாக்கப்பட வேண்டிய நிலை. ஓரிரு தலைமுறைக்குப் பிறகு ஹீப்ருவைத் தாய்மொழியாகப் பேசுபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டின் பெரும்பான்மையினராக ஆக ஆரம்பித்து, இன்று மிகப் பெரிய எண்ணிக்கையில் இருக்கிறார்கள். பென்-யெஹுதாவைப் பற்றி ஆர்.செய்ன்ட்-ஜான் எழுதிய ‘டங் ஆஃப் தி ப்ராஃபெட்ஸ்’ (தீர்க்கதரிசிகளின் மொழி) என்றொரு நல்ல புத்தகம் இருக்கிறது. இன்னும் அது கிடைக்கிறது என்று நினைக்கிறேன்.

ஆங்கிலம் எல்லாத் துறைகளிலும் சொல்வளத்தைக் கொண்டது. அதனாலேயே உலக மொழியாக மாறியிருக்கிறது. ஹீப்ருவில் அது போன்ற சொல்வளம் உண்டா? அப்படியெனில், இஸ்ரேல் எப்படி அதைச் சாதித்தது?

வேர்ச்சொல் அடிப்படையிலும் பெயர்ச்சொல் வடிவங்கள் அடிப்படையிலும் பல்லாயிரக்கணக்கான சொற்களை ஹீப்ரு உருவாக்க வேண்டியிருந்தது. இது நாடு தழுவிய ஒருங்கிணைந்த முயற்சியாலும் ‘பொது மொழிக் குழு’, ‘ஹீப்ரு மொழி அகாடமி’ ஆகியவற்றின் உதவியாலும், கணக்கற்ற அறிஞர்களின் முயற்சியாலும் சாத்தியமாயிற்று. இப்படிப்பட்ட பெரு முயற்சியால் எல்லாத் துறைகளிலும் சொல்வளமிக்க ஒரு மொழியாக ஹீப்ரு உருவாகியிருக்கிறது.

இந்தியாவில் சமீபத்தில் வெளியான தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழிக் கொள்கையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஓரளவுக்கு அதுபற்றி நான் அறிந்திருக்கிறேன். அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு, கருத்தளவில் நவீன காலத்துக்கு முன்பு இந்தியாவில் இருந்த பன்மொழிப் புலமையை மீட்டெடுப்பதற்கு ஆதரவானவன் நான். இன்று இந்திய மொழிகள் ஒன்றுக்கொன்று தொடர்பற்றுப்போய்விட்டன. சங்கக் கவிதைகள் என்றொரு அற்புதம் பற்றி எத்தனை தெலுங்குக்காரர்களுக்குத் தெரியும்? ஆண்டாளைப் பற்றி கிருஷ்ண தேவராயர் தெலுங்கில் எழுதிய ஆமுக்த மால்யதாவையோ மனுசரித்ரமுவையோ எத்தனை தமிழர்களால் படிக்க முடியும்? இந்தியா போன்றதொரு பல மொழிகளைக் கொண்ட சிக்கலான சமூகத்தின் மொழிக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுரை கூற நான் சரியான ஆள் இல்லை. ஆனால், ஒன்று மட்டும் தெளிவு. தாய்மொழியுடன் சேர்ந்து ஆங்கிலமும் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், அதுதான் உலக மொழி; சர்வதேசத் தொடர்புக்கான மொழி. உலகத்தினரோடு முன்னே செல்ல வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களுக்கு அது அவசியம். கூடுதலாக, ஒரு மொழியும் இளம் வயதிலிருந்து கற்றுக்கொடுத்தால் நல்லது என்று நினைக்கிறேன். ஆக, இந்தியக் குழந்தைகள் கட்டாயம் தாய்மொழியுடன் ஆங்கிலமும் கூடவே ஒரு இந்திய மொழியையேனும் கற்பது நல்ல விஷயம். ஆனால், இதில் இந்திக்கு அதிகாரபூர்வ சலுகை என்பது கூடாது. பல கோடிக்கணக்கானவர்களால் பேசப்படும் அழகிய மொழி இந்தி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்தியை இரண்டாவது, அல்லது மூன்றாவது மொழியாகத் திணிக்க நினைப்பது மிகவும் சிக்கலை உண்டாக்கும். மேலும், இதுபோன்ற விவகாரங்களில் திணிப்பு முயற்சிகள் வெல்வதில்லை.

ஒருவரின் தாய்மொழியில் கல்வி கற்பதன் முக்கியத்துவம் என்ன?

தாய்மொழியில் கல்வி கற்பது அழகான விஷயம். இன்று இந்தியாவில் தங்கள் தாய்மொழியை ஒழுங்காகப் படிக்கவோ அழகாகப் பேசவோ முடியாத நிலை கணிசமான மாணவர்களிடம் நிலவுவது பெரிய சிக்கல். ஆங்கில வழியில் படித்துவிட்டு, ஆங்கிலத்திலேயே சிந்திப்பதுதான் இதற்குக் காரணம். பேரிழப்புதான் இது.

தமிழின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறீர்கள். தமிழ் பல்வேறு ஊடுருவல்களையும் திணிப்புகளையும் கலாச்சார சந்திப்புகளையும் சம்ஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளிடமிருந்து எதிர்கொண்டிருக்கிறது. புறத்திலிருந்து வந்த இதுபோன்ற நெருக்கடிகளை தமிழ் எப்படி எதிர்கொண்டது என்பதைக் கூற முடியுமா?

எல்லா மொழிகளும் சொற்கள், வெளிப்பாட்டு முறைகள், சிந்தனை முறைகள், தொடரியல் அமைப்புகள், சில சமயம் பதவியல் கூறுகள் போன்றவற்றைப் பிற மொழிகளிடமிருந்து உள்வாங்கியிருக்கின்றன. ‘தூய’ மொழி என்ற ஒன்று உலகிலேயே இல்லை. மொழியானது தூய்மை என்பதையே எதிர்க்கிறது. மொழி எப்போதுமே பல்வேறு கூறுகளின் கலவையாகவே இருக்கிறது. மொழித் தூய்மைவாதம் என்பது முட்டாள்தனமானது மட்டுமல்ல; சாத்தியமற்றதும்கூட. துருக்கியில் முயன்று பரிதாபகரமான முறையில் தோல்வியுற்றார்கள், தமிழர்களும் இந்த விஷயத்தில் தோல்வியடைந்திருக்கிறார்கள். மொழிகள் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கின்றன. அதிகப்படியான எண்ணிக்கையில் புதுப்புதுக் கூறுகள் ஒவ்வொரு மொழியிலும் வந்துசேர்கின்றன. அது ஒரு நல்ல விஷயமே. இப்படிச் சொன்னாலும் பெரும்பாலான மொழியியலாளர்கள் கூறியபடி ஒவ்வொரு மொழியும் அதற்கேயுரிய சிறப்புத்தன்மையை, உள்ளமைப்பைக் கொண்டிருக்கிறது. ஒரு மொழியை ஆளும் அதன் உள்வயமான தர்க்கம் புதிதாக உள்ளே வரும் கூறுகள் மீதும் தனது கட்டுப்பாட்டைச் செலுத்துகிறது. இதற்குப் பிரக்ஞைபூர்வமான முயற்சி தேவைப்படுவதில்லை. இயல்பாகவே நடக்கிறது. தமிழில் கலந்திருக்கும் சம்ஸ்கிருதத்தை ஏதோ அந்நியனைப் போல் பார்ப்பது பிழையானது. எல்லா இந்திய மொழிகளைப் போல் தமிழும் தனது தனித்தன்மையை இழக்காமல் சம்ஸ்கிருதத்திடமிருந்து நிறைய நல்ல விஷயங்களைக் கடன் வாங்கியிருக்கிறது. இந்தியில் கலந்திருக்கும் சம்ஸ்கிருதச் சொற்களைவிட பேச்சுத் தமிழில் அதிக சம்ஸ்கிருதச் சொற்கள் கலந்திருக்கலாம்.

ஒரு பக்கம் ஆங்கிலம், இன்னொரு பக்கம் இந்தித் திணிப்பு முயற்சிகள். இத்தகைய சவால் மிகுந்த சூழலில் தமிழின் பலம் என்னவென்று நினைக்கிறீர்கள்? வாழும் மொழியாக தமிழுக்கு எதிர்காலம் இருக்கிறதா?

நிச்சயமாக, தமிழுக்குப் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. தமிழைச் சுவாசித்து, உணர்ந்து, அதையே சிந்தித்து வாழும் 8 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். இந்த நிலை அடுத்துவரும் சில தலைமுறைகளில் மாறாது. மிகக் குறைவான மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் பழங்குடி மொழிகள் (அமெரிக்கா, நியூ கினியா, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் உள்ள மொழிகள்) இறந்துகொண்டிருக்கின்றன. தமிழின் நிலை அப்படி இல்லை. அதற்கென்று மாபெரும் வரலாறும் இன்னமும் படைப்பாக்கம் அதிகம் கொண்ட துடிப்புகளும் இருக்கின்றன. அற்புதமான நவீன இலக்கியம், பாடல்கள், கவிதைகள், கதைகள், அட்டகாசமான பேச்சு வழக்கு, வட்டார வழக்குகள் (இது ஒரு நல்ல அம்சமே) போன்றவற்றைக் கொண்டிருக்கும் தமிழின் மீள்தன்மைக்கும் ஆற்றலுக்கும் ஆங்கிலமும் இந்தியும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று நான் கருதவில்லை.

தமிழ் மீது நீங்கள் கொண்டிருக்கும் காதலைப் பற்றிச் சொல்லுங்கள். தமிழுக்கே உரித்தான ஒரு சிறப்பியல்பைப் பற்றிச் சொல்லச் சொன்னால் எதைச் சொல்வீர்கள்?

தமிழை நான் முந்தைய ஏதோவொரு ஜென்மத்திலிருந்து அறிவேன் என்பதுதான் அதன் மீது நான் கொண்ட காதலைப் பற்றிய சிறந்த விளக்கமாக இருக்கும். இந்த ஜென்மத்தில் நானும் என் மனைவி அய்லீனும் 1972-ல் சென்னைக்கு – அப்போது மெட்ராஸ் - புதுமணத் தம்பதியராக வந்தபோது, தமிழுலகின் எல்லாவற்றையும் நேசித்தோம். முதல் பார்வையிலேயே காதல் என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். தமிழின் மந்திரம் போன்ற அற்புதமான ஒலி, இசை, அந்த மக்களின் திறந்த மனது, உணவு, நிலக் காட்சிகள், அவற்றின் தீவிரம், கவிதை, அதன் வெப்பமும் ஈரப்பதமும்கூட, எல்லாமே எங்களுக்கு அற்புதமானவையாகத் தோன்றின, தொடக்கக் கணத்திலிருந்தே. தமிழின் பல்வேறு கூறுகளிலிருந்து அதற்கே மிகவும் உரித்தான ஒரே ஒரு கூறை எடுத்துச் சொல்லவேண்டும் என்றால், தமிழ்ப் பேச்சின் இசைத்தன்மையைப் பற்றி, அதன் ஒலியியல்பு, ஒலிநயம் பற்றிச் சொல்வேன். சடசடவென்று ஆற்றொழுக்காக சொற்கள் வந்து விழும் வேகத்தையும் இது உள்ளடக்கும். எல்லா மொழிகளுக்கும் தனித்தன்மை கொண்ட இசையொலிகளும் ஒலிநயமும் உண்டு. தமிழைப் பொறுத்தவரை அதன் ஒலித்தன்மை மிகவும் ஈர்க்கக்கூடியதாகவும் முழுக்கவும் உணர்ச்சிகள் நிரம்பியதாகவும் இருக்கிறது. பேச்சுத் தமிழையும் அதன் சொலவடைகள், மரபுத் தொடர்கள் போன்றவற்றையும் கேட்பதே ஆனந்தம். புலனுக்கு இன்பம் தரும் இழைவு இந்த மொழியில் இருக்கிறது, உணர்வு நிரம்பியது அது, அது தமிழின் கூடப் பிறந்த இயல்பு.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

bharathiyar-memorial-day

பாரதீ! எம் கவிஞன் நீ!

கருத்துப் பேழை
x