Published : 10 Jul 2019 10:23 AM
Last Updated : 10 Jul 2019 10:23 AM

காந்தி பேசுகிறார்: முயற்சியே வெற்றி!

லட்சியத்தை அடைந்துவிடுவது எப்போதும் நம்மிடமிருந்து தூரமாகப் போய்க்கொண்டே இருக்கிறது. எவ்வளவுக்கெவ்வளவு முன்னேற்றம் அடைகிறோமோ அவ்வளவுக்கு நமது தகுதி இன்மையையும் உணர்ந்துகொள்கிறோம். முயற்சியில்தான் திருப்தி இருக்கிறதேயன்றி, அதை அடைந்துவிடுவதில் அல்ல. முழு முயற்சியே முழு வெற்றி.

கஷ்டமான நிலைமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக எல்லா இடங் களுக்கும் சுற்றிக்கொண்டிருக்கும் வெற்றி வீரனாக இருக்கும் வகையில் என் பணியை நான் வகுத்துக்கொண்டிருக்கவில்லை. தங்கள் சொந்த கஷ்டங்களை மக்கள் தாங்களே எப்படி நீக்கிக்கொள்ளலாம் என்பதை மக்களுக்குக் காட்டுவதே என்னுடைய பணிவான தொழிலாக இருந்துவருகிறது.

என் சமூக சீர்திருத்த வேலை, அரசியல் வேலையைவிடக் குறைவானதோ, அதற்கு உட்பட்டிருப்பதோ அன்று. உண்மை என்னவென்றால், அரசியல் வேலையின் உதவியில்லாமல் ஓரளவுக்கு என் சமூக சீர்திருத்த வேலை சாத்தியமில்லை என்பதைக் கண்டபோது, சமூக சீர்திருத்த வேலைக்கு உதவியாக இருக்கும் அளவுக்கு அரசியல் வேலையை நான் மேற்கொண்டேன். ஆகையால், முழுமைக்கும் அரசியல் வேலை என்று சொல்லப்படும் வேலையைவிட சமூக சீர்திருத்த வேலையோ, இந்த வகையில் அடையும் சுயத்தூய்மையோ நூறு மடங்கு எனக்கு அதிகப் பிரியமானது என்பதை நான் ஒப்புக்கொண்டுவிடவே வேண்டும்.

என் ஒத்துழையாமை அன்பிலிருந்து பிறந்த தேயன்றித் துவேஷத்திலிருந்து எழுந்தது அல்ல. யார் மீதும் துவேஷம் கொள்வதி லிருந்து என் சொந்த மதக் கோட்பாடு என்னைத் திட்டவட்டமாகத் தடுக்கிறது. சாதாரணமானது என்றாலும் இந்த உயர்வான கோட்பாட்டை, எனக்குப் பன்னிரண்டு வயதாக இருக்கும்போது, பள்ளிக்கூடப் புத்தகம் ஒன்றிலிருந்து நான் கற்றுக்கொண்டேன். அந்த உறுதியான எண்ணம் இது வரையில் எனக்குத் தொடர்ந்து இருந்துவருகிறது. என்னில் அது தினமும் வளர்ந்துகொண்டும் வருகிறது. அதுவே எனக்கு மிகுந்த ஆர்வமாகவும் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x