Last Updated : 03 Jul, 2019 10:06 AM

Published : 03 Jul 2019 10:06 AM
Last Updated : 03 Jul 2019 10:06 AM

புதியன விரும்பு

அன்றைய சென்னை மாநிலத்தில், மாணவர்கள் முன்னின்று நடத்திய மொழிப் போர் உச்சத்தில் இருந்த 1965-ம் ஆண்டு, அதே ஆண்டில் நடந்த இன்னும் ஓர் அரிய நிகழ்வு பிற்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது எனப் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்திருந்த அடிப்படைப் பொறியியல் ஆய்வு மையத்துக்கு ஓர் புதுமையான கருவி வந்து இறங்கியது. ஐபிஎம் 1620 வகை கணினி அது. இந்தியாவில் முதன்முதலில் கணினியின் பயன்பாடு தொடங்கப்பட்டது, வடக்கே கான்பூர் ஐஐடியிலும் தெற்கே கிண்டி பொறியியல் கல்லூரியிலும்தான். அக்கணினி மையத்தின் இயக்குநராக வா.செ.குழந்தைசாமி, போர்ட்ரான் முதலான கணினி நிரல்மொழிகளைப் பயிற்றுவித்துவந்தார். ஐபிஎம் 1620 வகை கணினியில் தகவலை ‘பஞ்ச்டு கார்ட்’ எனப்படும் துளையிடப்பட்ட அட்டைகள் மூலம்தான் உள்ளீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்ப்யூட்டருக்குத் தமிழில் என்ன?

பல பேராசிரியர்களே கணினியைக் கண்டிராத அந்தக் காலகட்டத்தில், தமிழ்நாட்டின் முக்கியமான தலைவர் ஒருவர், கிண்டிக்கு வந்த கணினியைக் காண வேண்டும் என்று பெரிதும் விரும்பினார். அவருக்கு அப்போது வயது 86. படியேற முடியாது. அவரை ஒரு நாற்காலியில் அமர வைத்து மாடிக்குத் தூக்கிச் சென்றனர். கணினி பற்றி தனக்குச் சொல்லப்பட்ட விளக்கங்களை எல்லாம் ஆர்வமாகக் கேட்டுக்கொண்ட அவர், ‘இந்த அட்டையிலிருந்து தகவலெல்லாம் எப்படி கம்ப்யூட்டருக்குப் போகிறது?’ என்று கூடுதல் வினா எழுப்பி விளக்கமும் பெற்றுக்கொண்டார்.

நடுவில், தன்னுடன் வந்திருந்தவரிடம் கம்ப்யூட்டருக்குத் தமிழில் என்ன என்று கேட்டார். அவர் பதில் சொல்லத் தயங்கியபோது, தனக்கு மிகவும் பிடித்த வசைச் சொல் ஒன்றைப் பயன்படுத்திவிட்டுச் சொன்னார் அந்தத் தலைவர் “நீ கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்திருந்தால்தானே அதற்குப் பெயர் இருக்கும்” என்று. தன்னுடைய தள்ளாத வயதில் அந்தப் புதுமையான கருவியைக் காண கிண்டி பொறியியல் கல்லூரிக்கு அன்று வருகை புரிந்தவர், பெரியார் ஈ.வெ.ராமசாமி.

தமிழரிடையே அறிவியல் மனப்பான்மை வளரவும் தமிழ் மொழி நவீனமடையவும் உரிமையுடன் பல விமர்சனங்களை முன்வைத்த பெரியார் - தமிழ் மொழியைக் காக்க உணர்ச்சிமிகு எழுச்சிகள் பரவிக்கொண்டிருந்த காலத்திலும், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை நோக்கிக் கவனம் குவித்தது குறிப்பிடத்தக்கது. தனக்கே உரிய தர்க்க நியாயக் கேள்விகளின் அடிப்படையிலேயே புதுமைக் கருவியின் செயல்பாட்டைக் கேட்டறிவதோடு, இத்தகைய அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபடாத தமிழினத்தை உரிமையுடன் குட்டுவதும் கணினித் தமிழ் கலைச்சொல்லாக்கத் தேவையை உணர்த்திச் செல்வதும் கவனிக்கத்தக்கது.

கூடவே, இந்நிகழ்வு எழுப்பும் துணைக் கேள்விகள் சிலவும் கவனிக்கத்தக்கவை. தமிழருக்கும் அறிவியல் தொழில்நுட்பத்துக்குமான உறவு, அதற்கான சூழலைத் தமிழ்ச் சமூகமும் தமிழ் மொழியும் தொடர்ந்து உருவாக்கித் தர இயலுமா என்று பல கேள்விகள் எழுகின்றன.

தமிழரின் அறிவியல் தொழில்நுட்ப உறவு

வரலாற்றின் தொடக்க காலத்தில் தமிழரின் அறிவியல் சிந்தனை ஒப்பீட்டளவில் சிறந்து விளங்கியது. பழந்தமிழரின் நீண்ட கடற்பயணங்கள், அவர்களது வானியல் அறிவுக்கும், கட்டுமானத் தொழில்நுட்பத்துக்கும் சாட்சியாகின்றன. துறைமுக நகர நிர்வாக ஒழுங்கு, வணிக நேர்மை, பழந்தமிழரின் நீர் மேலாண்மை, காலத்தை வென்று நிற்கும் இடைக்காலக் கற்றளிக் கோயில்கள் போன்றவை இன்றைய நவீன அளவீடுகளின்படியும் மாபெரும் சாதனை முயற்சிகளே. வரலாற்றின் தொடக்க காலத்தில் தமிழகம் கண்ட எழுச்சியும் இடைக்கால வளர்ச்சியும் பிற்காலத்தில் சுணங்கியதற்குக் காரணமான சமூகப் பண்பாட்டுக் காரணிகள் ஆழமான ஆய்வுக்குரியவை.

இந்திய விடுதலைக்குப் பின், தொழில்நுட்பத்தைச் சிறப்புறப் பயன்படுத்திய மாநிலங்களில் தமிழகம் முதன்மையானது. புதிய அணைகள், சாலைகள், மின்மயமாக்கல் மற்றும் பல்வேறு தொழில்களின் வளர்ச்சி என முன்னேற்றம் கைவசமானது. 1984-க்குப் பின் நடத்தப்பெற்ற வெளிப்படையான பொறியியல் மாணவர் சேர்க்கை, கடைக்கோடித் தமிழ் மாணவரின் தொழில்நுட்பக் கனவுகளை நனவாக்கியது. படிப்பை முடித்து வெளிவந்த மாணவர் பலருக்குப் புத்தாயிரமாண்டு புதிர் எனப்படும் ‘ஒய்2கே’ சிக்கல் வெளிநாட்டுப் பணிவாய்ப்பினைப் பெருமளவில் பெற்றுத் தந்தது. தமிழ்நாட்டின் கடைக்கோடிக் கிராமங்களிலிருந்தும் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் பலர் திரை கடலோடித் திரவியம் தேடப் புறப்பட்டார்கள். தாது வருடப் பஞ்சத்தின்போது (1876) கூட்டம் கூட்டமாய் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி இலங்கை, மலேசியா, மேற்கிந்தியத் தீவுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்று தோட்டப் பயிர்களை வளர்த்த அதேநேரம், தத்தம் தொப்புள் கொடி உறவுகளை இழந்தவர்கள் ஏராளம். ஆனால், இம்முறை பெருமை மிகு தொழில்நுட்பப் பணியாளர்களாகத் தமிழக இளைஞர்கள் வான்வழிப் பயணம் மேற்கொண்டு வளம் கண்டனர்.

தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம்

தொழில்நுட்பப் பயன்பாட்டை நுகர்வதில் தமிழர் பெற்றுள்ள வெற்றி குறிப்பிடத்தகுந்தது. எனினும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கிட என்ன செய்திடல் வேண்டும் என்ற கேள்வி உடன் எழுகிறது.

எந்த ஒரு நிகழ்வையும் உணர்வுபூர்வமாக மட்டுமின்றி, தர்க்க நியாய வழியே அறிவுபூர்வமாகவும் அணுகுதல் முதற்படி. ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என மாணவர் கேள்வி கேட்டுப் பழகுவதை அனுமதிக்கும் வகுப்பறை, அதை அங்கீகரிக்கும் கல்விச்சூழல், தொழில்நுட்பக் கனவுகள் நிறைவேறிடத் தேவையான கடுமையான உழைப்பு, தொழில்முனையும் திறனைப் பாதுகாத்துப் பயன்படுத்திடும் தகவமைப்பு, வெற்றி தோல்வி என்பவை முயற்சியின் இரு சமபக்கங்களே என்ற புரிதல் என இந்தப் பயணத்தைக் கவனத்துடன் செதுக்கிட வேண்டும்.

தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் தொழில்நுட்பத்தைக் கையாளும் முறையில்தான் அடங்கியிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியைக் கண்டு மிரண்டுவிடாமல், அதேசமயம் தொழில்நுட்பச் சாதனங்களுக்கு அடிமையாகியும் விடாமல், தொழில்நுட்பத்தை ஓர் வலிமை மிக்க ஆயுதமாக மாற்றி, அவற்றை லாவகமாகப் பயன்படுத்தும் திறன்களை மென்மேலும் வளர்த்துக்கொள்வதில் இருக்கிறது தமிழ்ச் சமூகத்தின் வெற்றி.

- த.உதயச்சந்திரன், தொல்லியல் துறை ஆணையர்.

தொடர்புக்கு: udhay17@gmail.com


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x