Published : 08 Aug 2017 08:40 AM
Last Updated : 08 Aug 2017 08:40 AM

ரகசியமாக நடந்து முடிந்துவிட்டது அவரின் மரணம்! - கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் (1959-2017)

ட்டு தினங்களுக்கு முன் நாகர்கோவிலில் நடந்த மௌலானா ரூமியின் மஸ்னவி கவிதைகளின் தமிழ்மொழியாக்க வெளியீட்டு விழாவுக்குத் தலைமையேற்றிருந்தேன். வழக்கமான புன்னகை மாறாமல் எப்போதும்போல இயங்கிக்கொண்டிருந்தார் ரசூல். கூட்ட நிகழிடத்திலிருந்து கடைசிக் கடைசியாக விடைபெற்றுப் பிரிந்தவர்கள் நானும் அவரும்தான். அவருடைய, ‘போர்ஹேயின் வேதாளம்’ தொகுப்பு பற்றி மதிப்புரை எழுதச் சொல்லி என்னைக் கேட்டுக்கொண்டே இருந்தார். ‘‘மற்றவர்களை எழுதவைத்துவிடுகிறேன்” என்றேன். “எழுதினால் நீங்கள் எழுதுங்கள்; இல்லையேல் வேண்டாம்” என்றார். அதையும் அவர் சிரித்துக்கொண்டே சொன்னார். ஆனால், அது அவருடைய வருத்தப்பாடு. அவருடைய குரலைக் கேட்டது அதுவே கடைசி என்று அப்போது எண்ணவில்லை.

உடலுக்குள் பல நோய்க்கூறுகளையும் வரவழைத்துக்கொண்டிருந்த சர்க்கரைநோய் குறித்து அவருக்கு எவ்வித அச்சமும் இல்லை. மருத்துவரின் ஆலோசனைகளைச் செவிமடுக்காமல் அவர் இருந்திருக்கிறார். இந்த உண்மைகூட அவருடைய உற்ற தோழர்களுக்கு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்றுதான் தெரிந்தது. 530 புள்ளிகளைத் தொட்டது அது. மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டவருக்கு, அப்போதே நாடித் துடிப்பு குறைந்துவிட்டிருந்தது. மாரடைப்பின் அறிகுறி. சிறுநீரகமும் செயல்படாமல் நின்றது. நிமோனியா காய்ச்சல் வரும் அபாயம். மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்ற அளவில் உடல்நிலையைக் கொண்டுவர எல்லாமும் தடையாகி நின்றன. பணி ஓய்வுபெற்ற பின் இன்னும் அதிகமாக வாசிக்க வேண்டும், இன்னும் அதிகமாக எழுத வேண்டும் என்ற உத்வேகம் அவருக்கு இருந்ததாக ஹாமீம் முஸ்தபா சொன்னார்.

வாழ்வின் ரகசியம்

நாகர்கோவிலின் இலக்கிய உலகம் மிகவும் வளமானது; வலுவானது; விரிந்தளாவியது. ஒற்றைக் குரல் இற்றுப்போனாலும் இங்கே தெற்றெனக் காட்டிவிடும். ரசூலின் உதிர்வு மிகப்பெரும் இடியோசைபோலத்தான் இங்கு கேட்டது. ரசூல், அரசுப் புள்ளியியல் துறையில் பணியாற்றி கடந்த மார்ச் மாதம் ஓய்வும் பெற்றுவிட்டார். தன் உடல்நிலை குறித்த பகிர்வை யாரிடமும் சொல்லாமல், எப்போதும் இளமைத் துடிப்புக்கேற்ற ஆடைகளைத் தெரிந்தெடுத்து, கம்பீரம் குலையாத தோற்றத்தோடும் காட்சியளித்தவர். அவரின் மரணம் ஓர் இளைஞனின் மரணமாக உணரப்படுகிறது.

அவரது கல்லூரிப் பருவத்திலேயே கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டார். உடன் பயின்ற தோழர் எஸ்.கே.கங்கா இந்த ரகசியத்தைக் கண்டுபிடித்து ஊக்கமளித்தார். அச்சின் ருசி கண்டபின் அந்தப் புயல் நகர்ந்துகொண்டே இருந்தது. கவிதையின் ரகசியம் என்னவென்று ஆராயப் புகுந்த ரசூல், அதன் வழியாய் வாழ்வின் ரகசியம் என்ன என்ற ஆராய்ச்சிக்குள்ளும் இறங்கியிருக்கிறார்.

எண்ணரிய வாசல்கள்

மானுட வாழ்வுக்குத் தன்னையொரு உந்துவிசையாக்கிட வேண்டும் என்ற ஆர்வம் அவரைச் செயல்படத் தூண்டியது. எஸ்.கே.கங்காவின் கைப்பிடித்துக் கலை, இலக்கியப் பெருமன்றத்தின் கதவுகளைத் திறந்து உள்நுழைந்தார். அவரது தேடலுக்கேற்ற இடம் இது; இவ்வுண்மையை அறிந்த பின் சமரசமற்ற போராளியானதே மீதிக் கதை! முன்வைக்கும் கால்களைப் பின்னோக்கி வைக்காத லட்சியப் பற்றாளரானார். இந்த இலக்கியப் பயணம், வரக்கூடிய காலங்களில் தன்னையும் தன் குடும்பத்தையும் ஆண்டுக்கணக்காக அலைக்கழிக்கும் என்ற கற்பனை அவருக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு கவிஞனின் கற்பனைகள் சிறகடிக்க வேறுவேறு திசைகளல்லவா இருக்கின்றன?

இஸ்லாத்தின் எண்ணரிய வாசல்கள் ஒவ்வொருவரையும் வளமார்ந்த பகுதிகளுக்குள் கொண்டுசெல்லும் பாதைகளைக் கொண்டவை. இந்த உண்மைகளை ரசூல் கண்டுகொண்டார். இவையெல்லாம் சமூகத்துக்குள் பேசப்படாமல், ஆய்வு செய்யப்படாமல் கிடக்கின்றன. அவற்றை, தான் பேச வேண்டும் என்ற உள்ளக் கிளர்ச்சி தோன்றலாயிற்று. அதற்காகவே அவர் பல மேலைநாட்டுத் தத்துவங்களையும் உரையாடல்களையும் கற்றார். சொந்த மண்ணின் இயற்கையை, இயல்பை மார்க்சிய வல்லுநர்களுடன் விவாதித்துக் கண்டறிந்தார். பின்னொரு நாளில் இவைதான் அவரது படைப்புலகின் கச்சாப் பொருளாயின. இது அவரின் கவிதை எடுத்துரைப்பை மாற்றியது. ரசூலின் கவிதை மூலங்களை இந்நிலையிலிருந்து ஆராய்ந்தால், சமூகத்தின் வளர்ச்சி நிலை மேலும் சாத்தியமாகியிருந்திருக்கும்.

தேர்ச்சியின் சூத்திரங்கள்

தான் விசுவாசிக்கும் மார்க்கத்தின் மீது ஒருவர் உள்ளபடியே மிகவும் திடமான நம்பிக்கையைக் கொண்டிருப்பாரேயானால், அவரால் எத்தகைய கேள்விகளையும் சந்தேகங்களையும் எதிர்கொள்ள முடியும். இன்னும் இதுபோன்ற ஐயப்பாடுகள் எழுந்தால் நன்றாயிருக்குமே என்று உணரச் செய்திருக்கும்.

சவால்களை எதிர்கொள்ளாத நிலையில் ஆன்மிகம் இருக்குமானால், அந்த ஆன்மிகம் எப்படி வலிமையான உலகின் படைப்புச் சக்தியாக இருக்க முடியும்? ஒரு மாணவனைத் தேர்வுக் களத்துக்குள் வைத்துச் சோதனை செய்வதுபோலத்தான் இது. அனைத்து மதங்களின் அடிப்படைவாதங்களும் இவற்றுக்கு முகம் கொடுக்காததால் வந்த வினையே இன்றைய அவலங்கள்.

ரசூலுக்கு இது தெரிந்தது. ரசூலின் கவிதைகள் ஒவ்வொருவரையும் தேர்ச்சிகொள்ளச் செய்வதற் கான சூத்திரங்களைக் கொண்டிருப்பவை. அவருடைய படைப்புகளில் விருப்புவெறுப்பற்ற பார்வையை ஒருவர் செலுத்துவாரேயானால், நிச்சயமாக இந்தச் சமூகத்தை உய்விக்கும் மேலும் பல திறப்புகளைக் கண்டறிய முடியும்.

ரசூல் நவீன கவிதையின் பல அம்சங்களையும் திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டிருந்தார். தமிழில் வெளியாகும் அனைத்துக் கவிதைத் தொகுப்புகளையும் வாங்குவதும் வாசிப்பதும் இயல்பாயிற்று. தமிழகம் முழுவதிலும் கலந்துகொண்ட கூட்டங்களில் நீண்ட நெடிய உரைகளைச் சளைக்காமல், சலிக்காமல் மென்மையான குரலால் உரையாடினார். கவிதை அவருக்கு ஒரு கைவாளாக இருந்தது.

யாரைக் கூப்பிட்டாலும்/ என்னைக் /கூப்பிடுவதுபோல்/ இருக்கிறது/ எதிரே மரத்தின் இலை / அசையும் போதும்/ பயம் தொற்றிக்கொள்கிறது/எனது நிழலைப்/பார்த்தபோது / கூரிய ஆயுதங்களோடு/அது என்னைத்/ துரத்தி வருகிறது/எனது பெயரைத்/திரும்பக் கூப்பிடுகிறாய்/ அது எனது பெயரல்ல/ எனத் தெரிந்தும்.../

தமிழ் தன்னுடைய முக்கியமான கவிகளில் ஒருவரை அகாலத்தில் பறிகொடுத்துவிட்டது.

- களந்தை பீர்முகம்மது, ‘பிறைக் கூத்து’ முதலிய நூல்களின் ஆசிரியர்,
தொடர்புக்கு: kalanthaipeermohamed@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x