

பொதுத்துறை நிதி நிறுவனங்கள் இந்திய பொருளாதாரக் கட்டமைப்பில் அளப்பரிய பங்கைப் ஆற்றிவருகின்றன. ஆனால், அவற்றின் உரிமையாளரான மத்திய அரசே அவற்றைப் பலவீனப் படுத்துவதும், தனியார் துறை வங்கிகளை மட்டும் ஊக்குவிப்பதுமான செயல்களில் ஈடுபட்டுவருவது மிகவும் ஆபத்தானது.
2017, ஜூன் 14 அன்று பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, ‘நிதித் தீர்வு மற்றும் வைப்புக் காப்பீடு - 2017 மசோதா’வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா ஆகஸ்ட் மாதம் 10 அன்று நாடளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சட்டமாக்கப்பட்டால், இதன் ஒரு பகுதியாக ‘தீர்வுக் கழகம்’ ஒன்று உருவாக்கப்படும். இந்தக் கழகத்தின் திசையைத் தீர்மானிக்கவும், நிர்வாகத்தை நடத்தவும் இயக்குநர் குழு ஒன்று அமைக்கப்படும். இந்த இயக்கு நர் குழுவில் ஒரு தலைவரும், நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி, செபி, காப்பீடு ஒழுங்கமைப்பு ஆணையம், ஓய்வூதிய நிதி ஒழுங்கமைப்பு ஆணையம் ஆகியவற்றிலிருந்து தலா ஒரு நபரும், மத்திய அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று முழு நேர உறுப்பினர்களும், கூடவே, மத்திய அரசால் நியமிக்கப்படும் இரண்டு சுயேச்சையான உறுப்பினர்களும் இடம்பெறுவார்கள்.
ஸ்டேட் வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கிராம வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பணப்பட்டுவாடா வங்கிகள் (பேமண்ட் வங்கி), எல்.ஐ.சி., தேசியமயமாக்கப்பட்ட பொதுக் காப்பீட்டுக் கழகங்கள் உள்ளிட்டவற்றில் எந்த ஒரு நிறுவனமாவது தொடர்ந்து இயங்குவதற்கு இயலாத வகையில் ஆபத்தில் உள்ள நிதி நிறுவனம் என்று கருதப்படுமானால், அதை வேறொரு பொதுத்துறை அல்லது தனியார் துறை நிதி நிறுவனத் தோடு இணைக்கக்கூடிய, அல்லது அதை இழுத்து மூடக்கூடிய அளவுக்கு வானளாவிய அதிகாரத்தை இந்த ‘தீர்வுக் கழகம்’ கொண்டிருக்கிறது. அத்துடன், ஆபத்தான நிலையில் இருக்கின்றன என்று இந்தக் கழகத்தால் கருதப்படும் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை வேறொரு நிறுவனத்துக்கு மாற்றவோ, அவர்களின் ஊதியத்தைக் குறைக்கவோ, அவர்களைப் பணி நீக்கம் செய்யவோ இந்தக் கழகம் அதிகாரம் படைத்தது. மேலும், இந்த மசோதா சட்டமாகும் என்றால் கோடிக்கணக்கான சாதாரண மக்களின் வைப்புத்தொகைக்கும், லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பணிப் பாதுகாப்புக்கும் பெரும் ஆபத்து ஏற்படும்.
பொதுத்துறை நிதிநிறுவனங்கள் என்பவை சாதாரணக் குடிமக்களுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டவை. அவை, மக்களைக் கசக்கிப் பிழிந்து மிகப் பெரும் லாபத்தை ஈட்டுவதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல. 36 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டது ஸ்டேட் வங்கி. ஏழை, எளிய மக்களுக்குக் கடன் வழங்குவதன் மூலமாக அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகுப்பதும், வங்கிகளின் மொத்த வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கு வணிகம் செய்வதும், நாட்டிலேயே மிகப் பெரிய பொதுத்துறை வங்கியாக இருப்பதுமான ஸ்டேட் வங்கியை மூடுவதற்கு மத்திய அரசு முயற்சி செய்யும் என்று நாம் யோசித்திருப்போமா?
1956-ல் மத்திய அரசால் வெறும் ரூ. 5 கோடி மூல தனத்தில் உருவாக்கப்பட்ட ‘ஆயுள் காப்பீட்டுக் கழகம்’ இந்தியாவின் அடிப்படைக் கட்டுமான வளர்ச்சிக்காக 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது சுமார் ரூ. 7 லட்சம் கோடியையும், 12-வது ஐந்தாண்டு திட்டத்தின் போது சுமார் ரூ. 14 லட்சம் கோடியையும் வழங்கியுள்ளது. இப்படி, பொன் முட்டையிடும் ஆயுள் காப்பீட் டுக் கழகத்தை இழுத்து மூட மத்திய அரசு எத்தனிக்கும் என்று யாராவது கனவாவது கண்டிருப்போமா?
வங்கித் துறையை எடுத்துக்கொண்டால் ரூ. 5 கோடியும், அதற்கு மேலும் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாத பெருநிறுவனங்கள்தான் மொத்த வாராக்கடனில் 88.4% வாராக் கடனுக்குச் சொந்தக்காரர்கள். ரூ. 5,000 கோடிக்கு மேல் கடன் வாங்கிய 12 மிகப் பெரிய கடனாளிகள் ரூ. 2.5 லட்சம் கோடியைத் திருப்பிச் செலுத்தாமல் வாராக்கடனாக வைத்திருக்கிறார்கள். இது மொத்த வாராக்கடனில் 25%. இவர்களிடமிருந்து இந்தக் கடனை வசூல் செய்ய மத்திய அரசு இதுவரை ஆக்கபூர்வமாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வில்லை.
மத்திய அரசு சென்ற வருடம் இயற்றிய ‘திவால் சட்ட’த்தாலோ, இந்த வருடம் அவசரச் சட்டம் மூலமாக வங்கிகள் ஒழுங்கமைப்புச் சட்டத்தில் கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தத்தாலோ இந்தப் பெருநிறுவனங்களின் வாராக்கடனை உடனடியாக, முழுமையாக வசூலிக்க முடியாது. ரிசர்வ் வங்கியே இந்நிறுவனங்களுக்கு மொத்தக் கடனில் 50% வரை தள்ளுபடி செய்யத் தயாராக இருக்க வேண்டுமென்று வங்கிகளுக்கு அறிவுறுத்துகிறது.
பெரு நிறுவனங்களிடமிருந்து வாராக்கடனை வசூலிக்க எந்த அரசியல் உறுதியும் மத்திய அரசிடம் இல்லை. மாறாக, இதனால் ஏற்படக்கூடிய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக சாதாரண வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் சேவைக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்படுகின்றன. ஸ்டேட் வங்கியின் பெருநகரக் கிளைகளில் குறைந்தபட்சமாக ரூ.5000-ம், நகரக் கிளைகளில் ரூ.3000-ம் சேமிப்புக் கணக்கில் இருப்பு வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் ரூ.100 வரை அபராதம் விதிக்கப்படும். இது 2017 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துவிட்டது. கடந்த 5 வருடங்களாக இவ்வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக எதுவும் வைத்திருக்க வேண்டிய கட்டாயமில்லை. அதேபோல், சேமிப்புக் கணக்குக்கு வழங்கப்பட்டுவந்த 4% வருடாந்திர வட்டியை மூன்றரை சதவீத வட்டியாக ஸ்டேட் வங்கி சமீபத்தில் குறைத்துவிட்டது. கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள்மீது நடத்தப்படும் மற்றொரு தாக்குதல் இது. இவ்வாறு பொதுத்துறை வங்கிகளை மோசமாகச் சித்தரித்து, இவற்றை இழுத்து மூடுவதற்கான செயலில் மத்திய அரசு துரிதமாக ஈடுபட்டுவருகிறது.
நமது நாட்டில் 56 கிராம வங்கிகள் தமது 23,000 கிளைகளுடன் 600-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் செயல்படுகின்றன. மொத்தக் கடனில் 80%-க்கும் கூடுதலாகக் கிராமப்புற மக்களுக்கு பயிர்க் கடன், குடிசைத் தொழிலுக்கான கடன், சுயஉதவிக் குழுவுக்கான கடன் போன்ற முன்னுரிமைக் கடன்களை வழங்கி சிறப்பான சேவை புரிந்துவருகின்றன. 31 மாநிலக் கூட்டுறவு வங்கிகள், 370 மத்தியக் கூட்டுறவு வங்கிகள், 1,600 நகரக் கூட்டுறவு வங்கிகள், 93,000 பிரதான வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்கள் மக்களுக்குச் சேவையாற்றிவருகின்றன. விதிகளை மீறிய தனியார் நிறுவனங்களின் போட்டியைக் கடந்தும், பொதுத்துறையில் உள்ள பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் அசைக்க முடியாத சக்தியாக திகழ்கின்றன.
இந்தப் பின்னணியில், பொதுத்துறை நிதி நிறுவனங்களைச் சீரழிக்கக்கூடிய ஒரு மசோதாவை மத்திய அரசு கொண்டுவருவது ‘கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?’ என்ற பாரதியின் பாடலைத்தான் நினைவுபடுத்துகிறது. ஆகவே, பொதுவாக வங்கித் துறை ‘சீர்திருத்த’த்தைக் கண்டித்தும், குறிப்பாக மத்திய அரசாங்கத்தின் இந்த மசோதா வைக் கைவிடக் கோரியும், 10 லட்சம் வங்கி ஊழியர் களையும் அதிகாரிகளையும் உள்ளடக்கிய ‘வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு’ இன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்துக்கான அறைகூவலை விடுத்திருக் கிறது. ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளைக் காப்பதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டிய தருணம் இது.
- சி.பி. கிருஷ்ணன், பொதுச் செயலாளர்,
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் – தமிழ்நாடு, தொடர்புக்கு: cpkrishnan1959@gmail.com