

ஆகஸ்ட் 3-ம் தேதி நியூயார்க் சென்ட்ரல் பார்க்கில் நடந்த ஒரு விநோதமான நிகழ்வு அங்கு வழக்கமாக நடை பயில வருவோரை திகைப்பில் ஆழ்த்தியது. விஷயம் அறிந்ததும் உற்சாகமாகப் பங்குகொள்ளவும் வைத்தது. தந்தத்தால் செய்யப்பட்ட குதிரைகள், புத்தர்கள், கடவுள்கள், அணிகலன்கள் தங்கள் கடைசி நிமிடத்துக்காகக் காத்திருந்தன. ‘அவற்றைக் காப்பாற்றுங்கள்’ என்ற சொற்கள் கொண்ட காகித விசிறிகளைப் பார்வையாளர்கள் உற்சாகத்துடன் அசைத்தார்கள் - காத்திருந்த தந்தப் பொருட்கள் எல்லாம் ஒரு கன்வேயர் பெல்டில் சென்று ஒரு ராட்சஸ அரைக்கும் இயந்திரத்தில் போடப்பட்டன. சில நொடிகளில் மாவாய் விழுந்தன. ‘மிக அழகிய கலைப்பொருளாக இருந்தாலும், ஒரு அழகிய ஜீவனைக் கொன்றதன் அடையாளம் இது’ என்று தனது கையிலிருந்த அற்புத வேலைப்பாடு மிகுந்த பேழையைப் பார்த்தபடி சொன்னார் விலங்குகள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த ஆர்வலர்.
சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான தந்தப் பொருட்கள் சமீபத்தில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்டன. அவை குறைந்தபட்சம் 100 யானைகளின் முகத்திலிருந்து பிடுங்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆகஸ்ட் 12 அன்று ‘உலக யானை தினம்’ முன்னிட்டு நடத்தப்பட்ட ‘தந்த அரைப்பு’தான் அது. தந்தத்தை வாங்குவது, விற்பது , வியாபாரம் செய்வது ஆகியவற்றைக் குற்றம் என்று முதன்முதலாக நியூயார்க் மாகாணம்தான் 2014-ல் சட்டம் இயற்றியது.
அந்தச் சட்டம் உலகெங்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த உதவியது என்றார் வனவிலங்குப் பாதுகாப்பு அமைப்பின் இணைத் தலைவர். ‘யானைகளைக் கொல்ல நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தந்த ஆபரணம் அணியாவிட்டால் ஏதும் நஷ்டமில்லை” என்றார். கூட்டம் அதை ஆமோதித்தது. ‘ஒரு டன் தந்தத்தை உலகின் மிகப் பிரபல பூங்காவில் பொடி செய்வதன் மூலம் யானைகளை அழிப்பவர்களுக்கும் இங்கே வீதிகளில் சட்டவிரோதமாக வியாபாரம் செய்பவர்களுக்கும் மிகக் கடுமையான சேதி சொல்ல விரும்புகிறோம்.’
ஆப்பிரிக்காவில் தந்தத்துக்காக தினம் 96 யானைகள் கொல்லப்படுகின்றனவாம். சென்ட்ரல் பார்க்கில் பொடிக்கப்பட்ட தந்தம் அவ்வளவும் கடந்த மூன்று ஆண்டுகளாக 300 அதிகாரிகள் ரகசியமாக மேற்கொண்டிருந்த சோதனையில் பிடிபட்டவை. மாவாகிப்போன தந்தத்தைக் கண்டு பலர் கைக்கொட்டி ஆர்ப்பரித்தாலும் அதைப் பரிதவிப்புடன் சிலர் பார்த்தபடி நின்றார்கள். இப்படிச் செய்திருக்க வேண்டியதில்லை என்றார்கள் புராதன பொருட்களை விற்பவர்கள். “அழிக்கப்பட்ட பல சிற்பங்களுக்குப் புராதன மதிப்பு உண்டு. ஒப்பற்ற அந்தக் கலைப்பொருட்கள் தடை உத்தரவு வருவதற்கு 300, 400 வருடங்களுக்கு முன் செய்யப்பட்டவை. இனிமேல் தந்தத் தொழில் செய்ய மாட்டோம் என்று உறுதி அளிக்கிறோம். ஆனால், இருப்பதை அழிப்பானேன்?” என்பது அவர்களது வாதம்.
தந்தத்தில் எதுவுமே 100 ஆண்டுகளுக்கு மேல் புராதனமில்லை என்கிறார் ஒரு பேராசிரியர். புராதனக் கலைப் பொருளாக இருந்தாலும் அதை நாம் வைத்திருப்பது ‘தந்தத்துக்கு மதிப்பு உண்டு, அதை கைப்பற்றலாம்’ எனும் எண்ணத்தை வலியுறுத்துவதாகும் என்கிறார். நியூயார்க் சென்ட்ரல் பார்க்கில் நடந்ததுபோல இந்தியாவில் நடந்திருக்குமா என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.
- வாஸந்தி, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்,
தொடர்புக்கு: vaasanthi.sundaram@gmail.com