

கடந்த இரண்டு நாட்களாகத் தொடர் சங்கிலித் தொழில்நுட்பத்தின் அடிப்படைகளை அலசினோம்.
தகவல்களை மையமாக அல்லாது, பரவலாகச் சேமிப்பது என்பது தொடர் சங்கிலித் தொடரின் அடிப்படை இயங்குமுறை என்றேன். இப்படி, தகவல்கள் பல இடங்களில் பரவலாகப் பதிந்து வைக்கப்பட்டால், தகவல் பாதுகாப்பு என்பது கடினம் அல்லவா என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். இதில்தான் நாம் பார்த்த ‘பொதுத் திறவுகோல் சங்கேதமுறை’ (Public Key Cryptography) பயனுக்கு வருகிறது. எனது தகவலை உங்களிடம் கொடுக்க எனக்குத் தேவை உங்களின் பொதுத் திறவுகோல். அதேபோல், நீங்கள் மற்றவருக்குத் தகவலைக் கொடுக்க வேண்டுமென்றால், அவரது பொதுத் திறவுகோல் மட்டும் போதும். பொதுத் திறவுகோல் என்பது எல்லோராலும் பார்க்கப் பட முடிகிற ஒன்று என்பதால், நீண்ட சரமாகச் சென்றபடியிருக்கும் தொடர் சங்கிலியில் பதிவாகியிருக்கும் கொடுக்கல்/வாங்கல் பரிவர்த்தனைகளைப் பார்க்க முடியும். ஒருவேளை நான் உங்களுக்குக் கொடுக்கும் தகவலைத் திருடிக்கொள்ள எனது பிளாக்குக்கும், உங்கள் பிளாக்குக்கும் இடையில் தனது பொதுத் திறவுகோலைக் கொண்டு அமைத்த பிளாக்கைச் செருகிக்கொண்டு அந்தத் தகவலை ஒருவர் திருடிக்கொண்டால் என்ன ஆகும்? இது சாத்தியம் என்றாலும், இந்தத் திருட்டு வேலையை அவர் செய்வதில் அர்த்தமில்லை. காரணம், ஒரு குறிப்பிட்ட தகவல்பேழையில் ஊடுருவித் தகவலைத் திருடிக்கொள்ளும் நபர், உலகில் எல்லோரிடமும் இருக்கும் அந்தத் தொடர் சங்கிலித் தகவல்பேழைகளிலும் இதே செருகல் வேலையைச் செய்தாக வேண்டும். இது ஏட்டளவில் சாத்தியம் எனினும், இதைச் செய்து முடிக்கத் தேவைப்படும் கணினித் திறன் கற்பனைக்கும் எட்டாதது.
ஆக, தொடர் சங்கிலி என்பது சரக்கு ரயில் போல நீண்டு சென்றுகொண்டிருக்கும் அடுக்குப் பெட்டிகளின் தொகுப்பு என்பதாகக் கருதலாம். சரக்கு ரயில் போலவே ஒவ்வொரு பெட்டியிலும் தகவல்களை நிரப்பிக்கொள்ள முடியும். புதிய பெட்டியை இணைக்கப் பெட்டியின் உரிமையாளரின் பொதுத் திறவுகோலும் அந்தப் பெட்டியைச் செய்வதற்கான கணினித்திறன் முதலீடும் வேண்டும். ஒரு பெட்டியை ஒரு ரயில் தொடரில் இணைத்தால், அதே போலவே பல நகரங்களில் கண்ணாடிப் பிரதிபலிப்பாக நின்றுகொண்டிருக்கும் அனைத்து ரயில் வண்டிகளிலும் இதே பெட்டி தானாகவே பொருத்தப்பட்டுவிடும். மொத்தத்தில், இருவருக்கிடையில் நடைபெறும் பரிவர்த்தனையில் நம்பிக்கையின்மை என்ற குறைபாட்டைத் தொடர்சங்கிலித் தொழில்நுட்பம் தீர்த்து வைக்கிறது. இதன் மற்றொரு பயன், இடைத்தரகர்கள் தேவையற்றவர்கள் என்ற நிலைக்குத் தொடர் சங்கிலித் தொழில்நுட்பம் எடுத்துச் செல்கிறது.
தொடர் சங்கிலித் தொழில்நுட்பத்தின் முதல் வெளியீடு ‘பிட்காயின்’. இந்தக் கட்டுரையை இதுவரைக்கும் படித்திருக்கும் உங்களுக்கு ‘பிட்காயின்’ என்ற பெயர் பரிச்சயமாக இருக்கும் என்று நம்புகிறேன். 2008-ல் சட்டோஷி நாகமாட்டோ என்ற புனைபெயரில் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை வெளியிட்ட நபர் பிட்காயினுக்கு பிளாக்செயின் சுழியிட்டு ஆரம்பித்து வைத்தார். இன்று வரை சட்டோஷி யார் என்பது எவருக்கும் தெரியாது என்பது தேவையற்ற உபதகவல். அவர் எழுதிய கணித வழிமுறையின்படி ( algorithm ) அதிகபட்சம் 2.1 கோடி பிட்காயின் முதன்மை பிளாக்குகளே (முதல் பகுதியில் கொடுத்த உதாரணத்தின்படி 2.1 கோடி சரக்கு ரயில் வண்டிகளே ) இருக்க முடியும். இந்தக் கறாரான வரம்பு காரணமாக பிட்காயின் தொடர் சங்கிலிக்குத் தங்கம் போன்ற அரிய உலோகத்துக்கான பண மதிப்பு ஏற்பட்டது. இன்றைய நாட்களில் பிட்காயின் ஒன்றின் நிகர அமெரிக்க டாலரின் பரிமாற்ற விலை 3,300-ஐத் தாண்டுகிறது.
இதுவரை 1.6 கோடிக்குச் சற்று அதிகமான பிட்காயின்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. புதியதொரு பிட்காயின் உருவாக்கப்படுகிறது என்றால், புதிய பிளாக் தயாராகிவிட்டது என்று புரிந்துகொள்ளலாம். இப்படித் தயாரிப்பவர்களை சுரங்கத் தொழிலாளிகள் ( Miners ) என்கிறார்கள்.
கொஞ்சம் பொறுங்கள், பிட்காயினை நானே உருவாக்க முடியுமா? அப்படியானால், பத்தாயிரம் பிட்காயின்களை உடனடியாக உருவாக்கி, ஒரே நாளில் பெரும் பணக்காரன் ஆகிவிடலாமே என்ற எண்ணம் இழையோடினால் அதை முற்றிலும் நசுக்க எனக்கு விருப்பமில்லை. காரணம், ஏட்டள வில் இது சாத்தியமே; நடைமுறையில் இது சாத்தியமே இல்லை. காரணம், பிளாக்குகளை உருவாக்குவதற்கான கணினித்திறன்; அதை இயக்கத் தேவைப்படும் மின்சாரம் போன்றவை காரணமாக ஆயிரக்கணக்கான கணினிகளை ஒன்றிணைத்துத் தொழில்முறை தயாரிப்பாளர்களே புதிய பிட்காயின் பிளாக்குகளை உருவாக்க முடியும் என்பதே இன்றைய நிலை. புதிய பிட்காயின் பிளாக்குகளை உருவாக்குபவர்களின் வேகத்தைப் பார்த்தால் 2035-க்குள் 2.1 கோடியை யும் உருவாக்கிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தொடரை இன்னும் 2 நாட்களுக்குத் தொடர்ந்து படிப்பவர்களுக்குப் பரிசு பெறும் வாய்ப்பு ஒன்று காத்திருக்கிறது. தொடர் சங்கிலி தொழில்நுட்பத்தில் பிரபலமாகிவரும் கிரிப்டோ கரன்சி ஒன்றைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு உண்டு. இதில் கலந்துகொள்ள - +1 313 251 3770 என்ற எண்ணுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியை வாட்ஸப் தகவலாக அனுப்புங்கள்.
அண்டன் பிரகாஷ், எழுத்தாளர்,
தகவல் தொழில்நுட்ப வல்லுநர்,
தொடர்புக்கு: anton.prakash@gmail.com