

24
வயதான இந்திரா காந்தி, பார்ஸி மதத்தவரான ஃபெரோஸ் காந்தியை மணக்க விரும்புவதாகத் தன் தந்தை நேருவிடம் தெரிவிக்க, நாகரிக முதிர்ச்சியும், சுதந்திரச் சிந்தனையும் கொண்ட அவர்கூடச் சட்டென்று ஏற்றுக்கொள்ளவில்லை. தன் முடிவு உறுதியானது என்றும், மேற்கொண்டு ஏதேனும் பேசினால் இனிமேல் உங்களோடு பேசவே மாட்டேன் என்றும் இந்திரா காந்தி சொல்ல, அதற்குப் பிறகு இறங்கிவந்தார் நேரு. 1942 மார்ச் 26-ல் திருமணம். அலகாபாத் ஆனந்தபவன் அருகிலேயே சிறு வீட்டைப் பிடித்து வாழ்க்கையைத் தொடங்கினார்கள். இதற்கிடையே 1942 ஆகஸ்ட் 8-ல் பம்பாய் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த மாநாட்டில் இந்திரா தம்பதியினரும் பங்கேற்றார்கள்.
அன்றைய தினமே காங்கிரஸ் தலைவர்கள் பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைதுசெய்யப்பட்டார்கள். மறு தினம் காந்தி கைதுசெய்யப்பட்டார். மாநாடு முடிவுற்றதும் இந்திராவும் பெரோஸும் தனித் தனி வழிகளில் வீடு திரும்பினார்கள். அலகாபாதுக்கு இந்திரா போய்க் கொண்டிருக்கும்போதே, அவரது அத்தை விஜயலட்சுமி பண்டிட் கைதான தகவல் எட்டியது. தான் கைதுசெய்யப்படுவோம் என்று தெரிந்ததே இந்திராவும் மக்கள் கூட்டத்தோடு போராட்டத்தில் இறங்கினார். இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த ஃபெரோஸும் களத்தில் குதித்தார். இருவரும் ஒரே நேரத்தில் கைதானாலும், வெவ்வேறு சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
1942 செப்டம்பர் 11-ம் தேதி தன் நாட்குறிப்பில் விஜயலட்சுமி பண்டிட் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: ‘என் சிறைக் கதவு அடைக்கப்பட்ட அரை மணி நேரம் கழித்து வெளிக் கதவைத் தடதடவென்று தட்டும் ஓசை கேட்டது. திருமதி இந்திராவும் இங்கே வந்துவிட்டார் என்று சிறையின் பெண் காவலர் மகிழ்ச்சியோடு அறிவித்தார்.’
விஜயலட்சுமி பண்டிட்டும், அவரது இரண்டு மகள்களும் அடைக்கப்பட்டிருந்த அறையில்தான் இந்திராவும் அடைக்கப்பட்டார். அவருடைய 25-வது பிறந்தநாளை அங்கேதான் கழித்தார். இந்திராவும் அவரது கணவரும் விடுதலையான ஓராண்டு கழித்து 1944 ஆகஸ்ட் 20-ல் முதல் மகனான ராஜீவ் காந்தி பிறந்தார்.
ஐரோப்பாவில் போர் முடிந்து அகமது நகர் கோட்டையிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர்தான், நேரு தன் பேரனைக் கையில் எடுத்துக் கொஞ்சி மகிழ முடிந்தது.