Published : 27 Jul 2017 09:24 AM
Last Updated : 27 Jul 2017 09:24 AM

காந்தியக் கல்வியும் மெக்காலேவாதிகளும்

புதிய பாடத்திட்டத்தை முன்மொழிய கல்விக் குழுக்கள் அமைக்கப்பட்டு வல்லுநர்களின் கருத்துகளுக்காக தமிழ்நாடே காத்திருக்கிறது. இன்றைய சூழலில் முற்றிலும் மறக்கப்பட்டுவிட்ட காந்தி முன்மொழிந்த சர்வோதய சமுதாயக் கல்வி குறித்த ஆழமான அலசல் தேவை என்று தோன்றுகிறது. நம் கல்வி குறித்த விவாதங்கள் திரும்பத் திரும்ப அயல்நாட்டு நடைமுறைகளையே சுற்றி வருவதைவிட, நம்மிடமே இருக்கும் மாற்றுக் கல்வி நடைமுறைகளைப் பரிசீலிக்க இது உதவும்.

1937-ல் ‘ஹரிஜன்’ இதழில் நாட்டின் கல்வி குறித்து விரிவான ஒரு கட்டுரையை காந்தி எழுதினார். அதில் கல்விமுறையின் 10 பலவீனங்களைப் பட்டியலிட்டிருந்தார்.

அவை: 1. நமது மரபுக்கும் பண்பாட்டுக்கும் முரண்பட்டதாக இந்த மெக்காலே குமாஸ்தா கல்வி உள்ளது. 2. இந்தக் கல்வி, குழந்தையை நேரடியான சமுதாயச் சூழ்நிலையிலிருந்தும் உடல் உழைப்பிலிருந்தும் பிரித்துவிடுகிறது. 3. கற்றவர்களைத் தனி இனமாக, பிரிவாக இன்றைய கல்வி உருவாக்கிவிட்டது. 4. அரசு மற்றும் தனியார்க்கு பணியாளர்களாக மாணவர்களை மாற்றுவதற்கான பயிற்சி மட்டுமே இன்றைய கல்வி. 5. மாணவர்களின் மனதில் சமுதாய உணர்வு இன்றி சுயநல தனிமனித உணர்வு புகுந்துவிட்டது. 6. ஒரு நூற்றாண்டாகத் தொடரும் இந்த அந்நியர் கல்வியில் தொடக்கப் பள்ளி என்பது எந்த முன்னேற்றமுமின்றி வதங்கிவிட்டது. 7. கல்வித் திட்டத்தின் பெரும்பகுதி வாழ்க்கைக்குப் பயன்படாததாக வீணானததாக உள்ளது. 8. பொதுமக்கள் கல்வி முன்னேற்றம் பற்றி இன்றைய கல்வி எண்ணிப்பார்ப்பதே கிடையாது. 9. இயந்திர முறையில் ஒரே மாதிரி கல்வியை அனைத்துக் குழந்தைகளுக்கும் - அவரவர் தேவை உணராமல் வழங்குகிறார்கள். 10.கல்விமுறையும் தேர்வுகளும் கல்வியை மாணவர்களின் உள்ளத்தில் பயத்தை உருவாக்கிப் பெரிய சுமையாகவே மாற்றிவிடுகிறது. எவ்வளவு உண்மை?!

வார்தா கல்வித் திட்டம்

இதற்கு மாற்றாக காந்தி முன்வைத்தது தனது சொந்த அனுபவங்களின் வழியே அவர் அடைந்த ஒரு கல்விமுறை. அதை ‘சர்வோதயக் கல்வி’ என்று அழைத்தார் காந்தி. கிராம சுயராஜ்யத்தைக் கட்டமைக்க உதவும் கல்வியே சர்வோதயக் கல்வி ஆகும். காந்தியக் கல்வியின் அடிப்படை தனி மனிதர்களைச் சமுதாயத்துக்குப் பயனுள்ளவர்களாக மாற்றுவது என்பதே. தனது கல்வித் திட்டத்தை மூன்றே வாசகங்களில் காந்தி விளக்கினார். ‘வாழ்க்கைக்கான கல்வி; வாழ்க்கை மூலம் கல்வி; வாழ்க்கை முழுவதும் கல்வி’ என்பவையே அவை. 1937-ல் வார்தாவில் காங்கிரஸின் கல்வி மாநாட்டை அக்டோபர் 22 மற்றும் 23-ம் தேதிகளில் கூட்டினார் காந்தி. அது இந்தியத் தேசியக் கல்வி மாநாடு என்று அழைக்கப்படுகிறது. கல்வியாளர் டாக்டர் ஜாகிர் ஹுசைன் (பின்னாட்களில் இந்திய குடியரசுத் தலைவர் ஆனவர்) தலைமையில் இந்தியக் கல்வி குறித்து முடிவுசெய்ய ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. ‘வார்தா கல்வித் திட்டம்’ அல்லது ‘ஆதாரக் கல்விக் கொள்கை’ அந்த கல்விக் குழுவால் பரிசீலித்து முன்மொழியப்பட்டது.

காந்தியக் கல்வி ஆறு முக்கிய அம்சங்களைக் கொண்டது. அதன் முதல் அம்சம், ஏழாண்டு ஆதாரக் கல்வியைக் கட்டணமின்றி அரசே தரத்தோடு வழங்க வேண்டும் என்பது. இரண்டாவது அம்சம், ஆதாரக் கல்வி முழுக்க முழுக்கத் தாய்மொழியில் மட்டுமே நடைபெற வேண்டும். மூன்றாவது அம்சம், கைத்தொழில் மூலமோ, ஆக்கப்பணி மூலமோ கல்வி கற்றுத்தரப்படும். நான்காவது அம்சம், பள்ளியின் சட்ட திட்டங்களிலிருந்து தாங்கள் கற்க வேண்டிய தொழில் உட்பட மாணவர்களே தீர்மானித்து சுயகட்டுப்பாட்டுடன் ஒரு சமூகமாக பள்ளியை வழிநடத்துவார்கள். தங்களது சூழலோடு பொருந்துகிற கல்வி என்பது ஐந்தாவது அம்சம். ஆறாவது அம்சம், குடிமைப் பயிற்சி. நாட்டின் உயர்ந்த லட்சியங்களாக காந்தி கருதிய மதச்சார்பின்மை, வாய்மை, நேர்மை, பொது வாழ்வியல், சமுதாயப் பங்கேற்பு, அகிம்சை வழியில் உரிமைகளைப் பெறும் வழிகளை அறிதல் என அவரது கல்வி விரிவடைகிறது.

சர்வோதயக் கல்வி தோற்றது ஏன்?

காந்தியின் பெருமுயற்சியால் வார்தாவிலும் செகாவோனிலும் சர்வோதய மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. என்றாலும், விரைவில் அவை தோல்வியே கண்டன. மதபோதனை இல்லாத கல்வி என்பதால், இஸ்லாமிய மதரஸா கல்வியாளர்களும், சாதி பார்க்காத கல்வி என்பதால் இந்துத்துவவாதிகளும் காந்தியக் கல்வியை எதிர்த்தார்கள். ஆரம்பத்தில், காந்தியின் கொள்கைப் பிடிப்போடு செயல்படுவதுபோல ஈடுபாடு காட்டிய மெக்காலேவாதிகள் சர்வோதயப் பள்ளித் திட்டத்தைப் பகிரங்கமாகவே எதிர்த்தார்கள்.

1948-ல் அமைக்கப்பட்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் கல்விக் குழு இந்தியக் கல்வியை - ஆக்ஸ்போர்டு கல்விக்கு நிகராக ஆக்க என்ன செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கவே அமைக்கப்பட்டது. காந்தியின் ராட்டையும் கலப்பையும் நம் கல்விக்கூடங்களுக்குள் நுழைந்துவிடாமல் தடுப்பதில், அவரது வழிவந்ததாகக் கூறிக்கொள்ளும் இந்திய ஆட்சியாளர்களே அதிக உக்கிரத்தோடு செயல்பட்டுள்ளார்கள் என்பதே வரலாறு. விதிவிலக்காக கோத்தாரி கல்விக் குழு நமது வகுப்பறைகளுக்குள் தறி வாத்தியார் ஒருவரை அனுப்பிவைத்தது. மற்றபடி, எல்லாக் கல்விக் குழுக்களுமே மெக்காலேவாதிகளால் அமைக்கப்பட்டவையே.

வார்தா கல்விப் பிரகடனத்தைப் பரிசீலிப்போம்

சர்வோதயக் கல்வி பற்றி இடதுசாரிகள் உட்பட பலருக்கும் சில அடிப்படை விஷயங்களில் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், அது ஒரு சமுதாயக் கல்வி என்பதில் சந்தேகமே இல்லை. இருக்கும் விளைநிலத்தையெல்லாம் வந்த விலைக்கு விற்றுக் கட்டணம் கட்டித் தன் குழந்தைகளை ‘நாசமாய்ப் போன’ விவசாயத்திடமிருந்து எப்படியாவது ‘மீட்டு’ பில் கேட்ஸின் வேலைக்காரர்களாக்கிடத் துடிக்கும் சமூகத்தை உருவாக்கிய மெக்காலேவாதிகளின் நச்சுக் கல்விக்கு மாற்றாக அடிப்படைத் தொழில்களை நேசிக்கத் தூண்டிய கல்வியாக காந்தியின் சர்வோதயக் கல்வி இருக்கிறது. பள்ளிகளில் துருப்பிடித்த காலாவதியான பழைய அறிவியல் சாதனங்களால் நிரம்பிய ஆய்வுக்கூடம் என்கிற மோசடிக்குப் பதிலாகக் குழந்தைகள் தங்கள் கைவண்ணத்தையும் கற்பனைத் திறனையும் காட்டும் தொழில் பட்டறைகளை அறிமுகம் செய்யும் கல்வியாக காந்தியக் கல்வியை நாம் பார்க்க முடியும். பள்ளி மாணவர்களுக்காக காந்தி உருவாக்கிய ‘படித்துக்கொண்டே சம்பாதிக்கும், சம்பாதித்துக்கொண்டே படிக்கும் தொழில் பட்டறை உற்பத்திக் கல்வி’ சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு, வாசனை வத்தியிலிருந்து கைபேசிக் கருவிவரை நம் சந்தைகளை நிரப்பிவிட்டது சீன தேசம்.

மத அடிப்படைவாத எதிர்ப்பு தொடங்கி, மதுவிலக்குக் கொள்கை வரையில் இயல்பிலேயே மாணவர்களை மாண்பு மிக்கவர்களாக உருவாக்க முயன்ற வார்தா கல்விப் பிரகடனத்தையும் நம் தமிழகக் கல்விக் குழுக்கள் மனதில் கொள்ள வேண்டும்.

-ஆயிஷா இரா. நடராசன், எழுத்தாளர், ஆசிரியர்.

தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x