ஜிஎஸ்டி சந்தேகங்கள்

ஜிஎஸ்டி சந்தேகங்கள்
Updated on
2 min read

ஜிஎஸ்டி என்றால் என்ன?

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) என்பது, பொருட்களுக்கும் சேவைகளுக்கும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான மறைமுக வரியாகும். சிவப்பு நாடா நடைமுறையைக் குறைக்கவும், வரி ஏய்ப்புகளைத் தடுக்கவும், வெளிப்படையான மறைமுக வரி விதிப்புக்கு வழிவகுக்கவும் வெவ்வேறு கட்டங்களில் விதிக்கப்படும் பல்வேறு மறைமுக வரிகள் உள்வாங்கப்பட்டு ஒரே வரியாக ஜிஎஸ்டி கொண்டுவரப்படுகிறது.

வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்த ஜிஎஸ்டி எந்த வகையில் உதவும்?

உற்பத்தியாளர்கள், வணிகர்கள், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் என்று அனைவருக்கும் ஜிஎஸ்டி எண்களை, சரக்கு மற்றும் சேவை வரி வலைப்பின்னல் எனும் விரிவான வருமான வரி முறை வழங்கும். இதன் வாயிலாக வரி கட்டும் முறை எளிதாவதோடு, வரி ஏய்ப்பும் நிறைய குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாமானியர்களுக்கு ஜிஎஸ்டியால் பலன் உண்டா?

உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது என்பதால் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிக்கும் மக்களுக்கு ஜிஎஸ்டியின் நேரடிப் பாதிப்பு அதிகம் இருக்க வாய்ப்பில்லை. அதேசமயம், காய்கறி, பழங்களின் விலை உயரும். அதேபோல், உணவகங்களில் சாப்பிடுவது போன்ற சேவைகளில் விலை அதிகரிக்கும் என்பதால் பாதிப்புகளும் இருக்கத்தான் செய்யும். ஜிஎஸ்டி என்பது, அடிப்படையில் உற்பத்திசெய்யப்பட்ட பொருட்களை வாங்குகின்ற அல்லது சேவைகளைப் பயன்படுத்திக்கொள்கின்ற ஒவ்வொரு வாடிக்கையாளர்களிடமிருந்தும் மறைமுகமாக வசூலிக்கப்படும் வரி. ஆகையால், ஒருவர் மாதச் சம்பளம் வாங்கினாலும் சரி, தினக்கூலியாக இருந்தாலும் சரி; ஒருவர் ஏதேனும் பொருட்களை வாங்குகிறார் என்றால், வரி செலுத்துகிறார் என்றுதான் அர்த்தம். ஆக, வாங்கும் பொருட்களுக்கு ஏற்ப பாதிப்பு இருக்கத்தான் செய்யும்.

28% - இந்தியாவில் புதிதாகக் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி மூலம் விதிக்கப்படும் வரியின் சதவிதம். இதுதான் உலகிலேயே மிகவும் அதிகமான ஜிஎஸ்டி வரி விகிதம்.

தமிழகத்தின் நிதிநலன் என்னவாகும்?

ஜிஎஸ்டி வரி விதிப்பால் இரு வகைகளில் தமிழகம் போன்ற வளர்ந்த மாநிலங்கள் பாதிக்கப்படும். முதலாவதாக, மாநிலங்கள் வரி விதிக்கும் உரிமை பெரிய அளவில் ஜிஎஸ்டி மூலம் பறிக்கப்படுகிறது. இது எல்லா மாநிலங்களுக்கும் ஏற்படும் உரிமைப் பறிப்பு. அடுத்து, வளர்ந்த மாநிலமாக இருப்பதாலும் பாதிப்பை தமிழகம் எதிர்கொள்ளும்.

தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், ஹரியாணா ஆகிய மாநிலங்கள் தொழில் உற்பத்தி மாநிலங்கள் என்றாலும் புதிய வகை வரிமுறையால் வரிவருவாய் அவற்றுக்குக் குறையும். இந்த வருவாய் இழப்பை ஈடுகட்ட நிதிக் குழு ஒரு யோசனையைத் தெரிவித்தது. இந்த மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை முதல் மூன்று ஆண்டுகளுக்கு 100% என்றும், நான்காவது ஆண்டில் 75% என்றும், ஐந்தாவது ஆண்டில் 50% என்றும் மத்திய அரசு ஈடுகட்ட வேண்டும் என்பதே அந்த யோசனை. இது ஒரு நிரந்தரமான மாற்று நடவடிக்கை இல்லை என்றாலும், வேறு வழியற்ற சூழலில், ``குறைந்தபட்சம் இந்த இழப்பீட்டை ஐந்தாண்டுகளும் 100% அளவுக்குத் தர வேண்டும்`` என்று போராடி இந்த மாநிலங்கள் பெற்றன.

ஆக, ஐந்தாண்டு காலத்துக்குச் சிறிய அளவில் இந்த இழப்பீடு ஓரளவுக்கு நிதி நிலைமையைச் சமாளிக்க உதவும். ``அதற்குப் பின் அந்தந்த மாநில அரசுகள்தான் அதிக வருவாய்க்கான வழியைத் தேடிக்கொள்ள வேண்டும்`` என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருக்கிறார். வரிவிதிப்பு அதிகாரத்தையே ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு பறித்துவிட்ட நிலையில் வேறு எந்த வகையில் வருவாயை அதிகரிப்பது? தமிழகம்தான் ஒரு பெரிய பொருளாதாரப் பாய்ச்சலுக்கான தொலைநோக்குத் திட்டத்தைத் தீட்ட வேண்டும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in