

இந்திய வரலாற்றில் 1969 ஜூலை 19 மிக முக்கியமான நாள். அன்றைய பிரதமர் இந்திராகாந்தி 14 பெரிய தனியார் வங்கிகளை தேசியமயமாக்கி அறிவித்த நாள். வி.வி. கிரி. தற்காலிகக் குடியரசுத் தலைவராகப் போட்ட கடைசி கையெழுத்து வங்கிகள் தேசியமயமாக்கிய அவசர சட்டத்தில்தான். (அடுத்த நாளே அவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார்.) இந்தியாவின் பெருமுதலாளிகள் வங்கிகள் தேசியமயமாக்கியதைக் கடுமையாக எதிர்த்தனர். நாடாளுமன்றத்தில் இந்திராவை ஹிட்லருடன் ஒப்பிட்டுப் பேசினார் ஜே.பி. கிருபளானி. அப்போதைய ஜனசங்கத்தின் நாடாளுமன்றப் பிரதிநிதியாக இருந்த வாஜ்பாய் நாடாளுமன்றக் கூட்டத்துக்கு முன்பே அவசரச் சட்டம் கொண்டுவந்ததைக் கேள்வி கேட்டார். சம்யுக்தா சோசலிசக் கட்சிப் பிரதிநிதியாக மது லிமாயி வங்கிகளின் நிர்வாகத்தில் ஊழியர்கள், சேமிப்பவர்கள் மற்றும் சிறுதொழில் நிறுவனப் பிரதிநிதிகள் வேண்டும் என்று சட்டத் திருத்தம் கொண்டுவந்தார். இந்திரா அதனை ஏற்றுக்கொண்டார். நாடாளுமன்றத்தில் நீண்ட விவாதத்துக்குப் பின் ஆகஸ்ட் 4 மற்றும் 8 தேதிகளில் இரு சபைகளும் சட்டத்தை ஏற்றுக்கொண்டன.
இந்தச் சட்டத்தை எதிர்த்து ஆர்.சி. கூப்பரும் டி.எம். குருமக்சாணியும் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை 12 நீதிபதிகள் கொண்ட குழு 34 நாட்கள் விசாரித்தது. பிரபல வழக்கறிஞர் நானி ஆ. பல்கிவாலா இந்தச் சட்டத்தை எதிர்த்து வாதாடினார். அப்போதைய அட்டர்னி ஜெனரல் நிரன்தே அரசுக்காக வாதாடினார். இறுதியாக, வங்கிகள் தேசியமயமாக்கல் சட்டத்தை ஆமோதித்து பிப்ரவரி 10, 1970-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தேசியமயமாக்கத்தின் காரணம்
வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் பின்னணியை இன்றைக்குத் திரும்பிப் பார்ப்பது அவசியம். ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஆர்.கே. கசாரி, “தொழில் அதிபர்களின் ஆதிக்கத்திலிருந்து வங்கிகளை விடுதலை செய்யாதவரை இந்தியாவில் பொருளாதார ஆதிக்கம் ஒருசிலரின் கையில் மட்டும் இருப்பதை உடைக்க முடியாது” என்று 1967–ல் திட்ட கமிஷனுக்கு அளித்த அறிக்கையில் கூறினார். 1960 முதல் 1966 வரை 7-8 முறை இடதுசாரிகள் வங்கிகளைத் தேசியமயமாக்கக் கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தனர். 1967, மே 26-ல் நாடாளுமன்றம் கொள்கைரீதியாகத் தேசியமயமாக்கலை ஏற்றுக்கொண்டது.
1960-ல் 328 வணிக வங்கிகள் இருந்தன. 1965-ல் இவை 94 ஆகச் சுருங்கிவிட்டன. 1960-ல் பாலா மத்திய வங்கி, லட்சுமி வணிக வங்கி ஆகியவை திவாலாயின. 1969-ல் 8,262 வங்கி கிளைகள் மட்டுமே இருந்தன. 1966-ல் மொத்த கடனில் 0.2% மட்டுமே விவசாயத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. 65,000 பேருக்கு 1 வங்கிக் கிளை என்ற வீதத்தில்தான் அப்போது இருந்தது. எனவே, தேசியமயமாக்கலின் நோக்கங்களாக, நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் வங்கிக் கிளைகளைப் பரவலாக்குதல், மக்கள் சேமிப்பை வங்கிகளுக்குக் கொண்டுவருதல், பின்தங்கிய மக்களுக்கும் சிறுகடன் பெறுபவர்களுக்கும் வங்கிக்கடன் கிடைக்கச் செய்வது, கடனை எடுத்துச் செல்வது, பெரும் தொழில் குடும்பங்கள் ஒருசிலவற்றின் கைகளிலிருந்து வங்கிகளை விடுவித்தல், வங்கி நிர்வாகிகளுக்குச் சிறந்த சேவைக்கான நிர்வாகத் திறன் பயிற்சி தருதல், வங்கி ஊழியர்களுக்குச் சிறந்த பயிற்சியளித்தல் ஆகியவை முன்வைக்கப்பட்டன. லாபம் என்ற வார்த்தை எங்கும் இருக்கவில்லை. 1969 முதல் 1991 வரையுள்ள புள்ளிவிவரங்கள் இந்த நோக்கங்கள் அனைத்தும் வெற்றியடைந்ததைக் காட்டுகின்றன. வங்கிச் சேவை மேலும் அதிகரிக்க இருந்த சூழலில் அரசின் கொள்கைகள் மாறின. அரசின் கொள்கைத் தலையீடுகளால் 1991-ல் ரிசர்வ் வங்கி புள்ளிவிவரப்படி மொத்தக் கடன்காரர்களில் 35.9% ரூ. 2 லட்சத்துக்கும் குறைவான கடன் பெற்றிருந்தனர். ஆச்சரியம் என்னவென்றால் மொத்தக் கடனில் 99.3% ரூ. 2 லட்சத்துக்கும் கீழ் வழங்கப்பட்டிருந்தது.
அதிகரிக்கும் வாராக் கடன்கள்
அரசு பெரிய கடன்கள் வழங்க இருந்த விதிமுறைகளைத் தளர்த்தியது. ரிசர்வ் வங்கியும், அரசும் முன்னுரிமைக் கடன்களில் வீட்டுக்கடன், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கான கடன், நடுத்தரத் தொழில்களுக்கான கடன் என சேர்த்துச் சிறுகடன்கள் கிடைப்பதைக் குறைத்தன. கைகுலுக்கல் கொடுத்து பல்லாயிரம் ஊழியர்களையும் அதிகாரிகளையும் வீட்டுக்கு அனுப்பியது. 10 ஆண்டுகள் வேலைக்கு ஆட்கள் நியமனம் தடை செய்யப்பட்டது. வங்கிகள் பெரும் கடன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தன. இந்திய தொழில் வளர்ச்சி நிறுவனம், இந்திய தொழில் முதலீடு மற்றும் கடன் நிறுவனம், இந்திய வீட்டு வசதி வளர்ச்சி நிறுவனம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள், சேமிப்புக்காக ஆரம்பித்த யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா ஆகியவை வங்கிகளாக மாற்றப்பட்டுத் தனியார்மயமாக்கப்பட்டன. பொதுத்துறை வங்கிகள் இந்திய வளர்ச்சி நிறுவனங்களின் பணிகளைச் செய்ய ஆரம்பித்தன. பெரும் கடன்கள் வாராக்கடன்கள் ஆகின. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள்படியே மீண்டும் கடன் கொடுத்தும் வாராக்கடன்கள் அதிகரிக்கத் தள்ளுபடி ஆரம்பமானது. வங்கிகள் நஷ்டத்துக்குச் சென்றன.
நாடாளுமன்ற நிலைக்குழு வாரக்கடன்களை வசூல் செய்ய வழி முறைகளை பரிந்துரை செய்தது. அரசு இதனை கண்டுகொள்ளவில்லை. விளைவு ரூ. 7 இலட்சம் கோடி வாராக்கடன். இவற்றில் 86% பெரும் முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்டதே. 2016 மார்ச் ரிசர்வ் வங்கி அறிக்கைபடி பார்த்தால் மக்கள்தொகை 132 கோடியில் 10 வயதுக்கு உட்டபட்ட 39% பேரை விலகி விட்டுப் பார்த்தால்கூட வெறும் 19 % பேருக்கே வங்கிக் கடன் கிடைக்கிறது. 81% மக்களுக்கு வங்கிக் கடன் கிடைப்பதில்லை. ரூபாய் 100 கோடிக்கு மேல் பெற்ற கடன் மொத்த கடனில் 36.18%. ரூ. 2 லட்சத்துக்குக் கீழ் கடன் பெற்றுள்ளவர்கள், பெற்ற கடன் வெறும் 6.9% மட்டுமே. எனவேதான், விவசாயிகள் சாகிறார்கள், வியாபாரிகள் தவிக்கிறார்கள். மாணவர்களுக்குக் கல்விக் கடன் இல்லை.
பொதுத்துறை வங்கிகள்தான் உடல் எங்கும் குருதியைக் கொண்டுசேர்க்கும் இதயம் போன்று இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் ரத்த நாளங்கள் போல் கிளைகளைக் கொண்டுசென்று சேவை செய்பவை. எனவே, பொதுத்துறை வங்கிகளைப் பாதுகாப்போம். தவறு செய்தால் தட்டிக்கேட்போம். காரணம், அவை மக்களின் வரிப் பணத்தில் உருவானவை. மக்கள் சேவையே அவற்றின் நோக்கம்.