குடிசைத் தொழிலுக்கு விற்பனை வரியா?

குடிசைத் தொழிலுக்கு விற்பனை வரியா?
Updated on
1 min read

ஒருமுறை சென்னையில் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஊர்வலத்தில் நுழைந்த திமுகவினர் சிலர் கடுமையாகத் தாக்கத் தொடங்கிவிட்டனர். உடல் முழுக்க அடிபட்ட தொண்டர் ஒருவரை ரத்தம் சொட்டச் சொட்ட காமராஜர் இருந்த மேடைக்குத் தூக்கி வந்தனர். எதிரே கூடியிருந்த ஏராளமான மக்களுக்கு முன்னால் இந்தக் கொடுமையைக் காட்ட வேண்டும் என்பது தலைவர்களின் விருப்பமாய் இருந்தது.

காமராஜர் இதைப் பார்த்துவிட்டுக் கத்தினார். “ஏய்... டாக்டர்கிட்டே கொண்டுபோ. மூளையிருக்கா? இங்கே கொண்டுவந்து காட்டி இன்னும் ஒரு பெரிய கலவரத்தை உருவாக்கப் பாக்குறியா...” என்று அந்த அமளியை அடக்கிவிட்டாராம். வேறு தலைவர்களாயிருந்தால் அந்தத் தொண்டனை மக்களிடம் காட்டி “பாருங்கள் ரத்தம்... கலங்குகிறது சித்தம்... என்ன செய்தான் குத்தம்?” என்று வசன மழை பொழிந்திருப்பார்கள்.

ஒருமுறை இரவு நேரத்தில் கோட்டையில் உட்கார்ந்து கோப்புகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர். வெளியில் சலசலவெனச் சத்தம் கேட்கிறது. விவரம் கேட்கிறார் காமராஜர்! தமிழ்நாடு அரசின் பட்ஜெட் வெளியாகியிருந்த நேரம் அது. “அப்பள வியாபாரிகள் உங்களைப் பார்க்கக் கூட்டமாய் வந்திருக்கிறார்கள். கோபமாகவும் இருக்கிறார்கள்!” என்கிறார் செயலாளர். ஆவேசமாய் இருந்த அவர்களை அழைத்து அமைதிப்படுத்துகிறார் முதல்வர்.

‘இவ்வளவு நாளும் இல்லாம இப்போ அப்பளத்துக்கு விற்பனை வரி போட்டுட்டாங்க. நாங்க எப்படிப் பொழைக்கிறது?” என்று கொதித்தனர் அப்பள வியாபாரிகள். உடனே தொழில் அமைச்சர் ஆர். வெங்கட்ராமனை அழைத்தார் முதல்வர். “என்ன நடந்தது?” என்று கேட்டார். “பார்சல் செய்யப்பட்ட எல்லா உணவுப் பொருள்களுக்கும் விற்பனை வரி போடப்பட்டது. அதில் அப்பளக்கட்டும் சேர்க்கப்பட்டது” என்று விளக்கினார் ஆர்.வி.

இப்போது முதல்வரே பேசினார். “மெரீனா பீச்சில் சுண்டலைப் பொட்டலம் போட்டுத்தான் கொடுப்பாங்க. கையிலே கொடுக்க முடியாது. அது, ‘பேக்டு ஃபுட்ஸ்’ பட்டியல்லே வருமா? அப்பளத்தைத் தனித்தனியாகக் கொடுக்க முடியாது. ஒரு கட்டு கட்டிக்கொடுக்கிறாங்க. ஏழைத் தாய்மார்கள் வீடுகள்லே ஒக்காந்து செய்ற குடிசைத் தொழில் அது. விற்பனை வரியை அதுக்கெல்லாம் போட்டா அவங்க தாங்குவாங்களா? ‘அப்பளம் எக்ஸெம்ப்ட்டடு ஃப்ரம் பேக்டு ஃபூட்ஸ்’ (பாக்கெட் உணவுகள் பட்டியலிலிருந்து அப்பளத்துக்கு விலக்கு) அப்படின்னு உடனே திருத்தம் போடுங்கள்!” என்றாராம். பிரச்சினையின் நியாயத்தைப் புரிந்துகொண்டு அந்த இடத்திலேயே அதற்குத் தீர்வு சொன்னார் காமராஜர்.

-திரு. வீரபாண்டியன், ஊடகவியலாளர்,
தொடர்புக்கு: thiru.veerapandian@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in