

அமைச்சர்களும் அதிகாரிகளும் தமது வாகனங்களில் சுழல்விளக்குகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற முடிவுக்கு இப்போதுதான் ஆட்சியாளர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால், தனது வானத்தில் மட்டுமில்லை, தனக்கு முன்பு செல்லும் காவல் துறையினரின் வாகனங்களில்கூட சுழல்விளக்குகளை அனுமதிக்காத முன்னோடி காமராஜர்.
1954-ல் தமிழ்ப் புத்தாண்டு அன்று முதல்வர் பொறுப்பேற்க, திருமலைப்பிள்ளை வீதியில் உள்ள வாடகை வீட்டிலிருந்து தன் சொந்த வாகனத்தில் (எண்: 2727) புறப்பட்டார் காமராஜர். அப்போது உடன் வந்த காவல்துறையினரின் சைரன் வண்டியை நிறுத்தி, “இதுக்கு முன்னாலே இந்த சம்பிரதாயமெல்லாம் இருந்திருக்கலாம். எனக்கு இதெல்லாம் வேண்டாம்னேன். சத்தம் போடாம மக்களுக்குத் தொந்தரவு செய்யாம போங்க!” என்று அறிவுறுத்தினார் காமராஜர்.
அதன்பின், கோடம்பாக்கம் - நுங்கம்பாக்கம் வீதி சந்திப்பில் ஆரவாரமில்லாமல் வந்துகொண்டிருந்த முதல்வரின் காரை நிறுத்தி, பின்னால் வந்துகொண்டிருந்த ஆம்புலன்ஸ் வண்டியை முந்திச் செல்ல வைத்தார் போக்குவரத்துக் காவலர். முதல்வர் பாதுகாப்புக்காக வந்த காவல்துறையினர் இதனைக் கண்டு கோபம் கொண்டார்கள். முதல்வர் காரையே நிறுத்திவிட்டோமே என்று போக்குவரத்துக் காவலரும் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
அன்று மாலை முதல்வர் காமராஜர் வீடு திரும்பியபோது, கவலையுடன் வாசலில் காத்து நின்று மன்னிப்பு கேட்ட அந்தக் காவலரைத் தட்டிக்கொடுத்து, அவரது கடமை உணர்வைப் பாராட்டினார். இப்போது அமைச்சர்களின் வாகனங்களில் சுழல்விளக்குகள் இல்லை. ஆனால், அவர்களின் வாகனங்களுக்கு முன்பு செல்லும் காவல்துறையினரின் வாகனங்களில் விளக்குகள் சுழன்றுகொண்டுதான் இருக்கின்றன. அவை யாவும் ஆம்புலன்ஸ் வண்டிகளுக்கு வழி விடுமா என்பதும் சந்தேகமே!
- ஆ. வந்தியத்தேவன், அமைப்புச் செயலாளர்,
மறுமலர்ச்சி திமுக, தொடர்புக்கு: vanthiyathevan.a@gmail.com