Last Updated : 19 Jul, 2017 09:49 AM

 

Published : 19 Jul 2017 09:49 AM
Last Updated : 19 Jul 2017 09:49 AM

யாழ்நூல் இயற்றியபோது…

இலங்கை தமிழ்ச் சான்றோர்களுள் விபுலாநந்தர் குறிப்பிடத்தக்கவர். அவர் இயற்றிய யாழ்நூல் தமிழிசையின் ஆதார நூல்களில் ஒன்று. அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியபோது க.வெள்ளைவாரணன் அங்கு மாணவராகப் பயின்றவர். பின்னாளில் யாழ்நூலினை விபுலாநந்தர் எழுதத் தொடங்கியபோது, அதன் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்திருக்கிறார். அவருக்குப் பல மடல்களை, பல ஊர்களிலிலிருந்து விபுலாநந்தர் எழுதியுள்ளார்.

பேளூரிலிருந்து விபுலாநந்தர் வெள்ளைவாரணனுக்கு 24.11.42 நாளிட்டு எழுதிய மடலில் யாழ்நூல் உருவாக்கம் குறித்த பல விவரங்கள் உள்ளன. சங்கீத ரத்தினாகரம் என்ற நூலைப் படிக்க நினைத்தும் அப்போது நடைபெற்ற உலகப் போர் காரணமாக நூல்கள் பாதுகாப்புக்காக வேறிடம் சென்றுவிட்டதை அடிகளார் குறிப்பிட்டுள்ளார். உலகப் போரின்போது நூலகங்கள், அச்சுக்கூடங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளமையை இம்மடல் தெரிவிக்கின்றது. யாழ்நூல் படி எடுத்தல், கருவி நூல்களைத் திரட்டல், அச்சிடுதல், போன்ற பணிகளில் அடிகளார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளமையைப் பல மடல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்நூல் உருவாக்கப் பணி

யாழ்நூலை எழுதி முடிக்க விபுலாநந்தர் பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்தித்துள்ளார். மாயாவதி ஆசிரமப் பணியிலிருந்து விடுபடல் (1941), கொழும்புப் பல்கலைக்கழகப் பணியேற்றல் (1943 - 47), கடும் காய்ச்சலில் வீழ்ந்தமை, முடக்குவாதம் வந்தமை என்று பணியும், பிணியும் விபுலாநந்த அடிகளாரை அக்காலத்தில் வாட்டியுள்ளன. புதுக்கோட்டையில் வாழ்ந்த சிதம்பரம் செட்டியார் விபுலாநந்தருக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்து ஆதரித்தார். தம் ‘இராம நிலைய’ வளமனையின் முன்பகுதியை விபுலாநந்தர் ஆராய்ச்சிக்கு ஒதுக்கித் தந்தும், பல்வேறு பணியாளர்களை அமர்த்தியும், இசைநுட்ப வல்லுநர்களைப் பணிக்கு அமர்த்தியும் யாழ்நூல் உருவாக உதவியுள்ளார்.

விபுலாநந்தர் அமைதியாகத் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்ய இலங்கையில் றொசல்லா ஊரில் இருந்த தம் வளமனையை வழங்கியும் சிதம்பரம் செட்டியார் யாழ்நூல் ஆராய்ச்சிக்கு உதவியுள்ளார். சிதம்பரம் செட்டியாருக்குச் சுவாமிகள் வரைந்த மடலில் யாழ்நூலை அச்சிடுவதற்குரிய திட்டம் தரப்பட்டுள்ளது.

றொசல்லா ஊரின் உட்சோக் எஸ்டேட்டிலிருந்து 9.5.45-ல் எழுதிய மடலில், ‘பிரிய நண்பர் திரு. பெ. ராம. ராம. சித அவர்களுக்கு ஆண்டவன் அருளை முன்னிட்டு எழுதுவது.

பேரன்புள்ள திரு. **அ. க. அவர்கள் கடிதத்தையும் படித்தேன். அக்கடிதத்தில் ஒரு குறிப்பு எழுதி, இதனுள் வைத்திருக்கிறேன். அவர்களுக்கு அனுப்பிவிடலாம். அச்சுச் சட்டத்தின்படியும், நானூறு பக்கம் புத்தகத்தை ஓராண்டில் வெளியிட்டால் அதிகாரிகள் வினாவுவதற்கு இடமுண்டு.

1944-ல் அச்சாகி முடிந்த முதல் ஐந்து இயல்களை(ப்) பாயிரவியல், யாழுறுப்பியல், இசை நரம்பியல், பாலை திரிபியல், பண்ணியல்களை இப்பொழுது வெளியிடலாம். படங்களை ஈற்றிற் சேர்ப்பது இப்பொழுது வெளிவரும் ஆங்கில ஆராய்ச்சி நூல்களின் மரபு பற்றி யாமும் ஈற்றிற் சேர்த்துக்கொள்ளுவோம். உள்ளுறையும் நூல் முற்றிலும் அச்சான பிறகு அச்சிடுதற்குரியது. இப்பொழுது நாம் அச்சிடவேண்டியது முகப்புத்தாள் மாத்திரமே (Title Page). இது திரு. அ. க. அவர்களுக்கு முன்னமே எழுதியிருக்கிறேன். வெளிக் கவருக்கு கையினால் செய்த தாள் தடிப்பானது. மதுரையிலும், விருதுநகரிலும் கிடைக்கும். வெண்சிவப்பு நிறத்தில் உபயோகிக்கலாம். முகப்பு(த்) தாளிலுள்ள விஷயத்தைச் சுருக்கி அச்சிடலாம்’ என்று யாழ்நூல் அச்சிடுவதற்குரிய அமைப்பை இந்த மடலில் அடிகளார் எழுதியுள்ளார். தட்டச்சிட்டு வந்துள்ள இந்த மடலில் குறிப்பிட்டவாறு யாழ்நூலின் முதல் பதிப்பு வெளிவந்துள்ளமை கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாகும்.

இன்னும் வெளிவராத விபுலாநந்தரின் பல மடல்களில் அவர்தம் விருப்பங்கள் பல தெரியவருகின்றன. அவரின் நாட்கடமைகள், பயணத் திட்டங்கள், உறவினர்கள், நண்பர்கள், அவர் ஆற்றிய பணிகள் பதிவாகியுள்ளன. அக்காலத்தில் அமைந்திருந்த சமூக அமைப்பு, கல்விமுறை, தமிழ் வளர்ச்சி, ஆராய்ச்சித்திறம் யாவும் வெளிப்படுகின்றன.

அக்காலத்தில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வுகள், சமூகத்தில் உயர்நிலையில் இருந்தவர்கள் ஆற்றிய பணிகள் யாவும் உலக்குக்குத் தெரியவருகின்றன. இலங்கையிலும், இந்தியாவின் பல பகுதிகளிலும் சிதறிக் கிடக்கும் விபுலாநந்தரின் அரிய கையெழுத்துப் படிகளை முழுமையும் தேடிப் பதிப்பிக்க வேண்டியது தமிழ் ஆராய்ச்சியாளர்களின் தலைக்கடனாகும்.

- மு.இளங்கோவன், புதுச்சேரி அரசின் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தின் தமிழ்த் துறை

துணைப் பேராசிரியர்தொடர்புக்கு : muelangovan@gmail.com

ஜூலை 19 விபுலாநந்த அடிகளார்

நினைவுநாள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x