புதிய வரி யுகம்!

புதிய வரி யுகம்!
Updated on
3 min read

பொது சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்துவிட்டது. ‘ஆட்டத்தையே மாற்றக்கூடியது’, ‘இந்த நூற்றாண்டின் புரட்சி’ என்றெல்லாம் பாராட்டப்படும் இந்த நிகழ்வு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் தொடங்கப்படுவதற்கான தகுதிகள் படைத்தது. 1947 ஆகஸ்ட் 14-15 நள்ளிரவில், சுதந்திர தின அறிவிப்பை வெளியிட்டு ‘விதியோடு ஒரு சந்திப்பு’ என்ற தலைப்பில் நம் தேசத்தின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு உரையாற்றியது நமக்கு நினைவிருக்கலாம். ஜிஎஸ்டி அறிமுக நிகழ்ச்சிக்குச் செய்திருக்கும் கோலாகல ஏற்பாடுகளைப் பார்க்கும்போது, இந்தச் சீர்திருத்தம் இதுவரையில் பார்த்திராத விளைவுகளை ஏற்படுத்தப்போகும் நிகழ்வு என்பதையே உணர்த்துகிறது.

இந்த வரியால் ஏராளமான நன்மைகள் ஏற்படும் என்ற பேச்சுகளும், ‘ஒரே தேசம்-ஒரே சந்தை-ஒரே வரி’ என்ற முழக்கத்தை அரசும் தொழிலதிபர்களும் ஒரே குரலில் முழங்கியிருப்பதும் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன; அதே சமயம், அரசு மற்றும் தொழில்துறை வட்டாரங்களில் ஒருவித பதற்றமும் இருப்பதைப் பார்க்கவும், உணரவும் முடிகிறது.

இந்தச் சீர்திருத்தத்துக்காக நாடு நீண்ட காலமாகக் காத்துக்கொண்டிருக்கிறது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சீர்திருத்தம் குறித்து வாதப் பிரதிவாதங்கள் நடந்தன. 2010 ஏப்ரல் முதல் இது அமலுக்கு வரும் என்று, 2007 பட்ஜெட்டின்போது நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்தார். இப்போதுதான் அது நிறைவேறியிருக்கிறது.

பரவசத்தைக் கட்டுப்படுத்துங்கள்

பொது சரக்கு, சேவை வரி அமல் என்பது கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு தான் என்றாலும் ரொம்பவும் அதீதமாகப் போய்விடக்கூடாது. இதனால் விலைகள் குறையும், தொழில் முதலீடு அதிகரிக்கும், வேலைவாய்ப்பு பெருகும் என்றெல்லாம் நம்பிக்கையை அதிகப்படுத்திவிட்டால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். பெட்ரோலியப் பொருள்கள் இந்த வரி விதிப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதால், அது பல நிலைகளாகப் பெருகுவது தொடரும். வரி வருவாயில் 35% - 40% வரையில் மறைமுக வரிகள் வாயிலாகத்தான் கிடைக்கிறது.

பல்வேறு அடுக்குகளாக வரி இருப்பதால் இது எளிமையானதல்ல. பண்டங்களை வெவ்வேறு வரி விகிதங்களில் வகைப்படுத்தியிருப்பது தொடர்பாக சர்ச்சைகள் எழக்கூடும். வெவ்வேறு விகிதங்கள் இருப்பதால் அந்தந்த துறையினர், தங்கள் மீதான வரி விகிதத்தைக் குறைக்க செல்வாக்கைப் பயன்படுத்துவார்கள். பொது சரக்கு, சேவை வரி வியாபாரிகள் ஆண்டுக்கு 37 வரிசெலுத்து அறிக்கைகளை அளிக்க வேண்டும் என்பதால் அவர்களுக்குப் பதற்றம் ஏற்படலாம். அரசு எவ்வளவுதான் உறுதிமொழிகள் அளித்தாலும், அதிக லாபம் ஈட்டுவதைத் தடுப்பதற்கான சட்டப் பிரிவு வியாபாரிகளிடையே அச்சமூட்டும் உறுத்தல் பிரிவாகவே நீடிக்கும். மாநிலங்களுக்கு இடையில் சரக்குகளைக் கொண்டுசெல்லும்போது ‘இ-வே’ பில்களைக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதும் கவலையை அளிக்கும்.

பணமதிப்பு நீக்கக் கசப்பு அனுபவம்

பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் போல ஜி.எஸ்.டி.யும் எதையாவது செய்துவிடுமோ என்ற அச்சம் பலரிடமும் காணப்படுகிறது. எந்த ஒரு பெரிய வரிச் சீர்திருத்தமும் அன்றாட நடைமுறைகளில், நிர்வாகத்தில் நிச்சயம் மாறுதலை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்.

மாநிலங்களில் ஆண்டுக்கு ரூ.75 லட்சத்துக்கும் குறைவாக விற்றுமுதல் வைத்துள்ள சில்லறை வியாபாரிகள்தான் அதிகம். அவர்கள் ‘காம்பவுண்டிங் சிஸ்டம்’ என்ற கூட்டுக் கணக்கு முறையின் கீழ் வருவார்கள். அவர்கள் தங்களுடைய மொத்த விற்று முதல் மதிப்பில் 1% அல்லது 2%-ஐ வரியாகச் செலுத்துவார்கள். அவர்களுக்கு இடுபொருள் வரிக்கான கழிவு கிடையாது. அவர்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கு கொடுத்தால் போதும்.

எவ்வளவு காலத்துக்கு?

பொது சரக்கு சேவை வரி சீர்திருத்தம் நம்முடைய பொருளாதாரத்தில் குறுகிய காலத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. புதிய முறைக்கான மாறுதல் எவ்வளவு எளிதாக இருக்கும், பொருளாதார வளர்ச்சிக்கான முகமைகள் எவ்வளவு விரைவில் இதற்கேற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் என்ற கேள்விகள் எழுகின்றன. பணமதிப்பு நீக்கத்தின்போது உறிஞ்சப்பட்ட தொகையில் பெருமளவை மீண்டும் திருப்பித் தந்த பிறகும், அமைப்புரீதியாகத் திரட்டப்படாத பல துறைகள் இன்னமும் முடங்கிய நிலையிலேயே இருக்கின்றன.

எனவே, புதிய முறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், அதிருப்தி ஆகியவற்றை முன்கூட்டியே கணிக்க முடியாது. நூல், இழை, ஆயத்த ஆடை ஆகியவற்றின் மீதான வெவ்வேறு வரிவிகிதங்களை விலக்கக் கோரி தமிழ்நாட்டில் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள், விசைத்தறி உற்பத்தியாளர்கள், ஜவுளித் துறையினர் என்று வேலை நிறுத்தம் செய்து போர் முரசு கொட்டியுள்ளனர்.

பெட்ரோல், டீசல் போன்றவற்றை வாங்கும்போது செலுத்திய வரியை, போக்குவரத்து சேவைக்கான செலவை அளிக்கும்போது கழித்துக்கொள்ள முடியாது என்று போக்குவரத்துத் துறையில் உள்ளவர்கள் உணரும்போது அதிருப்தி பரவும். வரி விகிதம், கட்டாயம் செலுத்த வேண்டியது, புதிய முறைக்கு மாறுவதில் ஏற்படக்கூடிய தடங்கல்கள், முதலீடு குறைந்து ஏற்படப்போகும் செயலற்ற நிலை ஆகியவற்றுக்கு வாய்ப்பு இருப்பதால் இந்தச் சீர்திருத்தம் எப்படி உருவெடுக்கும் என்று பார்க்க வேண்டியிருக்கிறது.

வரி விகிதம் என்னவென்று தெரிவித்து, பழைய முடிவுகளை மாற்றிக்கொண்டு புதிய முடிவுகளை ஜிஎஸ்டி கவுன்சில் எடுத்தாலும் அவற்றை உடனுக்குடன் உள்ளேயே எடுத்துச்சொல்லி தெரிய வைப்பதற்கு இப்போது கால அவகாசம் இல்லை. அரசு செப்டம்பர் வரையில் இந்த அமலை ஒத்திவைத்திருந்து, பல முறை ஒத்திகை பார்த்த பிறகு மேற்கொண்டிருந்திருக்கலாம்.

நுகர்வு வரி சீர்திருத்தம்

உண்மையில் இது பொது சரக்கு, சேவை வரி என்பதைவிட அனைத்துப் பொருள்களையும் சேவைகளையும் பயன்படுத்துவோரிடமிருந்து பெறும் நுகர்வு வரிதான். நிச்சயமாக சில தடைகள் ஏற்படும், அதனால் பொருளாதார வளர்ச்சி வேகம்கூட மட்டுப்படலாம். இந்தப் பரிமாற்றங்களுக்கான செலவுகள் நாளாக நாளாகக் குறையும். அதன் பிறகுதான் வளர்ச்சி வேகமெடுக்கும். நீண்ட கால நன்மைகளுக்காக நாம் குறுகிய கால இடர்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று நிதியமைச்சர் ஜேட்லி கூறியிருப்பது பொருத்தமானது.

இதைத் தொடர்ந்து சீரமைத்துக்கொண்டிருக்கிறோம் என்று வருவாய்த் துறை செயலர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. வெகு விரைவிலேயே இப்போது அறிவிக்கப்பட்டுள்ள பலவித வரி விகிதங்கள் குறைக்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று வரி விகிதங்கள் மட்டுமே இருக்கும் என்பது நம்பிக்கை அளிக்கிறது.

மனை வணிக விற்பனைத் துறை (ரியல் எஸ்டேட்) குறிப்பிட்ட காலத்துக்குள் இந்த வரிச் சீர்திருத்தத்தின் கீழ் கொண்டுவரப்படும் என்று அறிவித்துள்ளனர். கறுப்புப் பணம் உருவாவதை இது தடுக்கும். அதே வேளையில், பெட்ரோலியப் பண்டங்களையும் ஜி.எஸ்.டி. வரம்புக்குள்ளேயே கொண்டுவருவதும் அவசியம். அது வருவாய் இழப்புகளைச் சரிசெய்ய உதவும்.

செலவைக் குறைக்கும்

இந்தியாவில் தொழில், வர்த்தகச் செலவுகளைக் கணிசமாகக் குறைப்பதற்குத்தான் இந்த சீர்திருத்தம். ஏகப்பட்ட வரிகளைச் செலுத்துவதற்குப் பதில் ஒருசில வரிகளை - அதிலும் குறைந்த வரி விகிதத்தில் - செலுத்துவதற்கு இது வழிவகுக்கும். பெருநகர நுழைவு வரி (ஆக்ட்ராய்), கொள்முதல் வரி, மத்திய விற்பனை வரி போன்ற அனைத்தும் மறைந்து ஒரே வரியாக வசூலிக்கப்படும். இதனால் நம் நாட்டுப் பொருள்களை வெளிநாட்டுச் சந்தைகளில் குறைந்த விலைக்கு விற்று நன்கு போட்டியிட முடியும். வருமான வரி நிரந்தரக் கணக்கு எண்ணுடன் ஜிஎஸ்டி பதிவும் இணைக்கப்படுவதால் வியாபாரிகளால் இனி வரி ஏய்ப்பை எளிதாகச் செய்ய முடியாது. இவை அனைத்தும் நாட்டின் வளர்ச்சிக்கே வழிவகுக்கும். இது எப்படி, எப்போது நடக்கும் என்று நாம் காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- எம். கோவிந்த ராவ், பொருளாதார நிபுணர்.
சுருக்கமாகத் தமிழில்: சாரி
© ‘தி இந்து’ (ஆங்கிலம்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in