Published : 06 Jul 2017 09:06 AM
Last Updated : 06 Jul 2017 09:06 AM

விவசாயிகள் தற்கொலை: வறட்சி மட்டுமே காரணமில்லை

விவசாயிகளின் தற்கொலைகளுக்கு முதன்மையான காரணம், கடன்சுமை. வறட்சியின் காரணமாகவே விவசாயிகள் கடன்சுமைக்கு ஆளாகிறார்கள் என்று மத்திய மாநில அரசுகள் தங்கள் பொறுப்பைக் கைகழுவ முயற்சிக்கின்றன. உண்மையில் கடன்சுமைக்குக் காரணம், வேளாண் விளைபொருட்களுக்கான சந்தை சரியான முறையில் நிர்வகிக்கப்படவில்லை என்பதுதான். விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றால், சந்தை மேலாண்மை சரிசெய்யப்பட வேண்டும். ஆனால், ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இதற்கான முயற்சிகளை எடுக்கத் தயாராக இல்லை என்பதுதான் நிலைமையை மேலும் சிக்கலுக்குள்ளாக்குகிறது.

‘இந்தியாவில் விவசாயிகள் தற்கொலைகளும் வானிலை காரணங்களும்’ என்ற தலைப்பில் ‘ஐ.நா. சபையின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்துக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம்’ ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் நீலாஞ்சன் பானிக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெனிவா நெட்வொர்க் அமைப்பின் இயக்குநர் பிலிப் ஸ்டீவன்ஸும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டிருந்தனர். இந்த ஆய்வில் பிஹார், பஞ்சாப், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களும் மாதிரிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த ஆய்வின் முடிவுகள் தமிழ்நாட்டுக்கும் மிகவும் பொருந்தக்கூடியவை.

தேசிய மனித உரிமை ஆணையம் ஜனவரி 25, 2017 அன்று தமிழக அரசின் விளக்கம் கேட்டு அனுப்பிய அறிவிக்கையில், தமிழ்நாட்டில் 106 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது. ஆனாலும், 2016-17 சாகுபடிப் பருவத்தில் தற்கொலை செய்துகொண்ட தமிழக விவசாயிகளின் எண்ணிக்கையைப் பற்றிய முழுமையான விவரங்கள் இல்லை என்பதுதான் உண்மை நிலை. மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பி.யு.சி.எல்.), தமிழ்நாடு பெண் விவசாயிகள் உரிமைக்கான கூட்டமைப்பு ஆகியவை மேற்கொண்ட நேரடிக் கள ஆய்வுகளிலிருந்து, 2016 டிசம்பர் தொடங்கி 2017 ஜனவரி வரையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாரடைப்பு வந்தோ அல்லது தற்கொலை செய்துகொண்டோ இறந்துள்ளனர் என்று தெரியவருகிறது.

விளைச்சல் பொய்த்துப்போவது, ஒருவேளை விளைச்சல் நன்றாக இருந்தாலும் சரியான விலை கிடைக்காதது, அதன் விளைவாக மீள முடியாத வறுமைக்கு ஆளாவது ஆகிய மூன்றும்தான் விவசாயிகளின் தற்கொலைகளுக்கு முக்கியக் காரணங்கள் என்கிறது நீலாஞ்சன் பானிக், பிலிப் ஸ்டீவன்ஸ் இருவரும் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் முடிவு. சந்தையில் விளைச்சலுக்குச் சரியான விலை கிடைக்காததற்குக் காரணம், திறனில்லாத வேளாண் சந்தை மேலாண்மைதான் என்றும் அது சுட்டுக்காட்டுகிறது.

திறனற்ற மேலாண்மைக்குத் தீர்வு என்ன?

உலக வங்கி அளித்துள்ள விவரங்களின்படி, இந்தியாவின் விவசாய நிலங்களில் 35% மட்டுமே பாசன வசதியைப் பெற்றுள்ளன. பாசன வசதிகள் இல்லாததைப் போலவே, பருவமழை பொய்க்கும்போது நிவாரணம் பெறும் வகையில் காப்பீடு திட்டங்களும் வலுவாக இல்லை. முக்கியமாக, பெரும்பாலான விவசாயிகள் அரிசி, கோதுமை போன்ற மிகவும் வருமானம் குறைவான பயிர்களையே பயிரிடுகின்றனர். காய்கறிகள், பழங்கள் போன்ற அதிக வருமானம் தரும் பயிர்களை முயற்சிப்பதில்லை. தானியப் பயிர்களைக் காட்டிலும் காய்கறி மற்றும் பழ வகைகளைப் பயிரிடுவதன் மூலமாக விவசாயிகளால் நான்கு மடங்கு அதிகமான வருமானத்தைப் பெற முடியும். ஆனால், காய்கறிகளையும் பழங்களையும் பாதுகாக்க முறையான குளிர்வசதி கொண்ட கிடங்குகள் இல்லை. எனவே, சரியான விலை கிடைக்காதபட்சத்தில், வருமான இழப்பைச் சந்திக்கவும் வேண்டியிருக்கும். இதன் காரணமாகவே பெரும்பாலான விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பரிசோதிக்கும் விஷப்பரீட்சைக்குத் தயாராக இல்லை.

விவசாயிகளிடம் மிகவும் குறைவான நிலப்பரப்பே உள்ளது. இந்திய விவசாயிகளில் 83% பேர் ஒரு ஹெக்டேருக்கும் குறைவான நிலத்தைத்தான் வைத்திருக்கிறார்கள். எனவே, விளைபொருட்களின் விலையைக் குறித்து அவர்களால் பேரம்பேச முடிவதில்லை. இந்தக் குறைகளைச் சரிசெய்யும் வகையில் வேளாண் விளைபொருட்கள் சந்தை கமிட்டி சட்டத்தில் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தக் குறைகள் சரிசெய்யப்பட்டால்தான் வேளாண் விளைபொருட்கள் சந்தையைத் திறன்பட நிர்வகிக்க முடியும்.

அரசு என்னதான் செய்கிறது?

வழக்கமாக ஆளுங்கட்சிகள் விவசாயக் கடன்களை ரத்து செய்வது, குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவது, வேதியுரங்களுக்கு மானியங்கள் கொடுப்பது, விவசாய வருமானத்துக்கு வரிவிலக்கு கொடுப்பது ஆகியவற்றின் மூலமாக விவசாயிகளின் கடன்சுமையைக் குறைக்க முயற்சிப்பதாகக் கூறுகின்றன. அரசின் மேற்கண்ட நடவடிக்கைகள் விவசாயிகளுக்குப் பலனளித்தாலும் அவை கடன்சுமைக்கு முழுமையான தீர்வு ஆகாது.

ஆண்டுதோறும் பெய்யும் மழையின் அளவுக்கும் விளைச்சலின் அளவுக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. மழையளவின் மாறுபாட்டுக்கு ஏற்ப, அவ்வப்போதைய நிலைமைகளைச் சமாளிக்கும் வகையில் அரசும் ரிசர்வ் வங்கியும் இணைந்து திட்டங்களை வகுக்க வேண்lடும்.

தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்பு மற்றும் இந்திய உணவு கார்ப்பரேஷன் ஆகிய இரண்டு அமைப்புகளும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்கின்றன. ஆனால், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இந்தக் கொள்முதல் நடவடிக்கைகளால் குறிப்பிடத்தக்க எந்தப் பயனையும் பெறவில்லை என்பதுதான் உண்மை நிலை.

உதாரணத்துக்கு, இந்திய உணவுக் கழகம் பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து 70% நெல்லைக் கொள்முதல் செய்கிறது. தமிழக விவசாயிகள் அதிக அளவில் அரிசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். முக்கியமாக, காவிரி டெல்டா விவசாயிகள் நெல் பயிரிடுவதை மட்டுமே நம்பியுள்ளனர். ஆனால், நெல் விளையும் மற்ற மாநிலங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுவதைக் காட்டிலும் தமிழகத்திலிருந்து அரசு கொள்முதல் செய்யும் அளவு மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது.

கூட்டுறவு முறை பயன் தருமா?

வேளாண் விளைபொருட்கள் சந்தை கமிட்டியின் விதிமுறைகள் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் காய்கறிகள், பழங்களை ஏற்றுமதியாளர்களுக்கோ அல்லது உணவுப் பொருட்கள் தயாரிப்பவர்களுக்கோ நேரடியாக விற்பனை செய்யவும் தடையாக இருக்கின்றன. எனவே, சிறுவிவசாயிகளுக்கு சந்தை வாய்ப்புகள் குறுக்கப்படுகின்றன. இடைத்தரகர்கள் மட்டுமே பலனடைகின்றனர். சிறுவிவசாயிகள் வலுவான வகையில் தங்களை அமைப்புகளாக ஒருங்கிணைத்துக்கொண்டாலன்றி, அவர்கள் பெருநிறுவனங்களிடம் விலை பேரங்களில் ஈடுபடுவதற்கும் வாய்ப்பில்லை.

சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ளாட்சி அமைப்புகளே உருளைக்கிழங்கு பயிரிடும் சிறுவிவசாயிகளுக்கான சந்தைக் கூட்டமைப்புகளை உருவாக்கியுள்ளன. உருளைக்கிழங்கு பயிரிடும் விவசாயிகள் ஒன்றுசேர்ந்து முடிவெடுத்து அதன் விலையைத் தீர்மானிக்கிறார்கள் என்ற விவரமும் மேற்கண்ட ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியில் இந்தக் கூட்டுறவு முறை, அமுல் நிறுவனத்தால் ஏற்கெனவே வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்திருக்கிறது. விவசாய உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதிலும் அத்தகைய கூட்டுறவு முறையைப் பரிசோதித்துப் பார்க்கலாம். அப்போதுதான் விளைவிக்கும் விவசாயியே விலை நிர்ணயிக்கும் வாய்ப்பைப் பெற முடியும்.

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x