

பி
ஹாரில் சமீபகாலமாக நடந்தேறிவரும் அரசியல் போக்குகள், அந்த மாநிலத்தின் கூட்டணி அரசு முன்பு இருந்ததைப் போல் தொடர்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதையே காட்டுகின்றன. இதே நிலை தொடர்ந்தாலோ அல்லது துணை முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவருமான தேஜஸ்வி யாதவைப் பதவிநீக்கம் செய்தாலோ, நேர்மையான தலைவர் என்றும், ஊழல் விஷயத்தில் சமரசம் செய்துகொள்ளாதவர் என்றும் அறியப்படும் முதல்வர் நிதீஷ் குமாருக்கு எந்த அளவுக்குப் பலன் கிடைக்கும் என்று தெளிவாகத் தெரியவில்லை.
அதேபோல், தேஜஸ்வி பதவிநீக்கம் செய்யப்படும் பட்சத்தில் அவருக்கு எந்த அளவுக்கு அனுதாபம் கிட்டும் என்பதையும் கணிப்பது கடினம். ஏனெனில், வெறும் குற்றச்சாட்டுகளை மட்டும் வைத்து ஒருவரைப் பதவிநீக்கம் செய்வது சரியாக இருக்காது. மேலும், பிஹாரில் உருவாகியிருக்கும் சூழல், அடுத்து நடைபெறவிருக்கும் தேர்தலில் பாஜகவுக்கு எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என்றும் கணித்துவிட முடியாது. ஆனால், ஒரு விஷயம்: நிதீஷ் குமாருக்கும் லாலு பிரசாத் யாதவுக்கும் இடையிலான உறவு முன்பைப் போல் இருக்கப்போவதில்லை.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை நிதீஷ் குமார் ஆதரித்தது, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடனான ஐக்கிய ஜனதா தளத்தின் விரிசல், 2019 மக்களவைத் தேர்தலில் ஒற்றுமையான ஒரு எதிர்க்கட்சிக் கூட்டணி அமைவதை மேலும் பலவீனப்படுத்தியிருக்கிறது.
அதிகரிக்கும் அழுத்தம்
இந்த விவகாரத்தை எதிர்கொள்வதில் நிதீஷ் குமாரிடமும், லாலு பிரசாத் யாதவிடமும் தடுமாற்றம் தெரிகிறது. தேஜஸ்வி யாதவ் பதவி விலக மறுக்கும் பட்சத்தில், அவரைப் பதவிநீக்கம் செய்வதன் மூலம் அரசியலைச் சுத்தப்படுத்துவதில் தனக்கு இருக்கும் பொறுப்பை நிதீஷ் குமார் நிரூபித்தாக வேண்டும் என்று ஒரு அழுத்தம் இருக்கிறது. மறுபுறம், ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் தான் ராஜிநாமா செய்தால், அந்தப் புகார்கள் உண்மை என்று ஏற்றுக்கொண்டதாகிவிடும் என்பதால், தான் பதவிநீக்கம் செய்யப்படுவதைத்தான் தேஜஸ்வி யாதவும் விரும்புகிறார். ஒருவேளை, பதவிநீக்கம் செய்யப்படும் பட்சத்தில், சதித்திட்டத்தில் தான் பலியிடப்பட்டதாகத் தன்னைக் காட்டிக்கொள்ள தேஜஸ்வி முயற்சிப்பார்.
அரசியலைப் பொறுத்தவரை எல்லாமே கண்ணோட்டத்தைப் பொறுத்ததுதான். ஒரு காலத்தில், காங்கிரஸிலிருந்து வெளியேறிய வி.பி.சிங், காங்கிரஸ் அரசுக்கு எதிராகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். காங்கிரஸின் முன்னணித் தலைவர்களுக்கு ‘போபர்ஸ்’ பீரங்கி ஊழலில் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டினார். அடுத்து நடந்த தேர்தலில் வென்று பிரதமராகவும் ஆனார். ஆனால், இன்றுவரை போபர்ஸ் ஊழலில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெளிவாகத் தெரியாது.
உறவா பகையா?
பிஹாரில் பாஜகவின் அரசியல் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியபோது அதை எதிர்கொள்ளும் விதத்தில் 2015 பிஹார் சட்ட மன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்கச் சம்மதித்தார் நிதீஷ் குமார். எனினும், நிதீஷ் குமாருக்கும் லாலு பிரசாத் யாதவுக்கும் இடையிலான உறவு எப்போதுமே அத்தனை சுமுகமாக இருந்ததில்லை. தேர்தலின்போது நிதீஷ்குமாருக்கு இருந்த நற்பெயரை முன்வைத்து, அந்தக் கூட்டணி போட்டியிட்டது. ‘வளர்ச்சி நாயகன்’ என்றெல்லாம் அப்போது நிதீஷ் குமார் அழைக்கப்பட்டார். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் நிதீஷ் குமாரை ஓரங்கட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம் முயற்சி செய்தது. இரு கட்சிகளும் சமமான எண்ணிக்கையிலான இடங்களில் போட்டியிட்டாலும் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 71 இடங்கள்தான் கிடைத்தன. ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு 80 இடங்கள் கிடைத்தன.
மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது போன்ற பிரச்சினைகளில் இரு கட்சிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றின. ஷஹாபுதீன் சிறையிலிருந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டபோது நிதீஷ் குமாரை விமர்சித்து அறிக்கைகள் வெளியிடப்பட்டன. மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை ஆதரித்ததன் மூலம், கூட்டணியைப் பலவீனப்படுத்திவிட்டார் என்று நிதீஷ் குமாரை ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங் கடுமையாக விமர்சித்தார்.
தற்போது, பதிலடி தரத் தொடங்கியிருக்கும் நிதீஷ் குமார், குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளருக்குத் தந்த ஆதரவை மறுபரிசீலனை செய்ய மறுத்தார். ‘பிஹாரின் மக’ளான மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமாரை எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தியபோதும் தனது முடிவை அவர் மாற்றிக்கொள்ளவில்லை. இதில் நிச்சயம் லாலு பிரசாதுக்கு அதிருப்தி என்றாலும், நிதீஷ் குமாரின் மனதை மாற்ற அவரால் முடியவில்லை.
துணை முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள்மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நிலையில், ஊழலை ஒழிப்பதில் துளியும் சமரசம் காட்டுவதில்லை என்று எனும் முடிவில் உறுதியாக நிற்கிறார் நிதீஷ் குமார். லாலு பிரசாதுக்கும் அவருக்கும் இடையிலான மோதல் உச்சமடைந்திருக்கும் சூழலில், ஊழல் ஆட்சியை நடத்துவதைக் காட்டிலும் தன் மீதான நற்பெயரைக் காத்துக்கொள்ளப் பதவி விலகவும் தயங்கப்போவதில்லை என்று தெளிவாகத் தெரிவித்துவிட்டார். எனினும், வெவ்வேறு சமூகங்களை உள்ளடக்கிய பிஹார் வாக்காளர்களின் நம்பிக்கையை அவரால் பெற முடியுமா?
என்னதான் செய்வார் நிதீஷ்?
ஒருவேளை, கூட்டணி உடையும் பட்சத்தில் என்ன மாதிரியான அரசியல் சூழல் ஏற்படும் என்பதைப் பொறுத்தே அது அமையும். ஆட்சி நடத்த வேண்டும் என்றால், ராஷ்ட்ரிய ஜனதா தளம் அல்லது பாஜகவின் ஆதரவு நிதீஷ் குமாருக்குத் தேவை. கூட்டணி முறிவுக்குப் பின்னர், வெளியிலிருந்து ஆதரவு தரத் தயார் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் சூசகமாகத் தெரிவித்திருந்தாலும் அது நிதீஷ் குமார் மீதான பிம்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஒருவேளை பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலோ அல்லது பாஜக வெளியிலிருந்து ஆதரவு தந்தாலோ சந்தர்ப்பவாதி எனும் விமர்சனத்தை நிதீஷ் குமார் எதிர்கொள்ள நேரும்.
இரண்டுமே அவருக்குப் பலன் தரப்போவதில்லை. யாதவ் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான குர்மீக்கள், கோரீகளின் ஆதரவும் ஐக்கிய ஜனதா தளத்துக்குப் பெரிய அளவில் இல்லை. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஆதரவை வேண்டுமானால் அவரால் பெற முடியும். யாதவ்கள் அவருக்கு நிச்சயமாக வாக்களிக்கப்போவதில்லை. 2013-ல் பாஜகவுடனான உறவைத் துண்டித்துக்கொண்டார் என்பதால் அதிருப்தியடைந்த உயர் சாதியினரும் நிதீஷ் குமாரை ஆதரிக்கப்போவதில்லை. லோக் ஜனசக்திக் கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் தலித் மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்றிருக்கும் நிலையில், தலித் மக்களின் ஆதரவைத் திரட்டுவதும் நிதீஷ் குமாருக்குக் கடினமான விஷயம்தான். பாஜகவை நோக்கி நகரத் தொடங்கினால் அது முஸ்லிம்களைத் தனிமைப்படுத்துவது என்றாகிவிடும். இந்தச் சூழல் நிதீஷ் குமாருக்குக் கடுமையான சவாலை ஏற்படுத்தியிருப்பதுடன், பிஹாரில் பாஜக வளர்ச்சியடைவதற்கும் வழிவகுத்திருக்கிறது!
© ‘தி இந்து’ (ஆங்கிலம்),
தமிழில்: வெ.சந்திரமோகன்