Published : 02 Jul 2017 10:01 AM
Last Updated : 02 Jul 2017 10:01 AM

இந்திய ஜிஎஸ்டி தனித்துவமானது கொஞ்சம் சிக்கலும் ஆனது! - பிரணாப் சென் பேட்டி

சர்வதேச அளவில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்திய ஜிஎஸ்டியின் தனித்தன்மை என்ன? பொருளாதார நிபுணரும் திட்டக் குழு முன்னாள் உறுப்பினரும், தேசியப் புள்ளிவிவர ஆணைய முன்னாள் தலைவருமான பிரணாப் சென்னுடன் ஒரு சின்ன பேட்டி.

புதிய ஜிஎஸ்டி முறையால் நன்மைகள் என்ன?

முதலாவதாக, ஒரு பொருளுக்கோ சேவைக்கோ வெவ்வேறு வரிகள் இல்லாமல் ஒரே விகித வரியாக விதிக்கப்படுவதுதான் பொது சரக்கு, சேவை வரி. நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் ஒரேயொரு மறைமுக வரியை மட்டும் செலுத்தினால் போதும். இதனால் வரி அமைப்புக்குள் இருந்த சிக்கலான தன்மை குறைக்கப்பட்டுவிட்டது. ஒரே சரக்குக்கு அல்லது சேவைக்கு வெவ்வேறு வரிகள் கிடையாது. முந்தைய வரிவிதிப்பு முறையில் அடுத்தடுத்து வெவ்வேறு வரிவிதிப்புகள் இருக்கும். நாடு முழுக்க ஒரே சந்தை, எனவே சரக்கை எங்கும் தடையின்றிக் கொண்டுசெல்ல முடியும்.

புதிய முறையில் உள்ள குறைபாடுகள் என்ன?

இனிமேல் புதிதாகத் தொழிலைத் தொடங்குவது எளிது. நீங்கள் தயாரிக்கும் அல்லது வாங்கும் பொருளுக்கு என்ன வரி விகிதம் என்று நிச்சயமாகத் தெரிந்துகொண்டு அதற்கேற்பத் திட்டமிடலாம். ஆனால், நீங்கள் எந்தத் தொழிலைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்துச் சிக்கல் இருக்கிறது. சில்லறை வியாபாரம், ஹோட்டல்கள் ரெஸ்டாரெண்டுகள், கட்டுமானப் பணி போன்றவற்றில் சிக்கல்கள் அதிகம் ஏற்படும்.

பொதுவாக, `பொது சரக்கு, சேவை வரி` என்றால் நாடு முழுக்க ஒரு பொருளுக்கு அல்லது ஒரு சேவைக்கு ஒரே மாதிரியான வரி விகிதம்தான் இருக்க வேண்டும். ஆனால், 0%, 5%, 12%, 18% மற்றும் அதற்கும் மேல் என்று வெவ்வேறு வரிவிகிதங்கள் இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் இருப்பதால் வியாபாரிகளுக்குச் சிக்கல் ஏற்படும். அதாவது, ஒருசில பண்டங்கள் அல்லது சேவைகளில் மட்டும் ஈடுபடுவோருக்கு அதிகம் பிரச்சினைகள் இல்லை. ஏராளமான பொருள்களை உற்பத்தி செய்கிறவராகவோ விற்பவராகவோ இருந்தால் சிக்கல்கள் அதிகரிக்கும்.

பிற நாடுகளுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு?

பிற நாடுகளில் நாடு முழுக்க ஒரே மண்டலமாகக் கருதி ஒரு பொருளுக்கு மூன்று வித வரி விகிதம் மட்டுமே இருக்கும். இந்தியாவில் வரிவிதிப்பு விகிதங்களும் அதிகம், வரி மண்டலங்களும் அதிகம்.

©‘தி இந்து’ ஆங்கிலம்,
தமிழில்: ஜூரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x