மூடிய திரையரங்குகளும் மூடாத நினைவுகளும்

மூடிய திரையரங்குகளும் மூடாத நினைவுகளும்

Published on

பாக்கியலட்சுமி திரையரங்கைத் தாண்டித்தான் எங்கள் ஊரான களக்காடு நுழைய வேண்டும். ஒவ்வொருவரையும் முகமன் கூறி வரவேற்பதுபோல எல்லையில் வெள்ளைப் பளிங்கு மாளிகையாகக் கம்பீரமாய் நின்றிருந்தது பாக்கியலட்சுமி. அந்தத் திரையரங்கைப் பாராமல் ஊருக்குள் நான் நுழைந்ததில்லை. சில தினங்களுக்கு முன் ஊருக்குள் நுழையும்போது வழக்கம்போல அந்தத் திசை நோக்கித் திரும்பினேன்; பகீரென்றது. திரையரங்கம் மூளியாக நிற்கிறது. பெரும் பகுதியை இடித்துவிட்டார்கள். சிலையாகத் தாமரையில் லட்சுமி வீற்றிருப்பதால், அதை மட்டும் இடிக்காமல் இருக்கிறார்கள்!

பால்யத்தில் உறவாடிய திரையரங்கை இழப்பது நம் பால்யத்தின் பசுஞ்சுவடுகளை இழப்பதாகும். எல்லா ஊர்களிலும் திரையரங்குகள் செயலிழந்துவிட்டன; அகோர நிலப்பசியில் அவற்றை இடிக்கிறார்கள்; என் ஊரிலும் அப்படித்தானே என்று மனத்தைச் சமாதானப்படுத்த முடியவில்லை. அது கட்டிடக் கலையைச் சிறப்பு செய்த அரங்கம். இந்தத் திரையரங்க இடிப்பைப் பார்த்தபின் என் நண்பர்கள் ஒவ்வொருவராக இறந்துபோன துயரமெல்லாம் பெருக்கெடுத்தது. அவர்களோடுதானே இது பிணைந்திருந்தது - எண்ணற்ற வழிகளில்!

வெறுமனே சினிமா பார்த்தது, பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தது என திரையரங்கின் அடையாளங்கள் முடிவுறவில்லை. நம் திருநாள்களையெல்லாம் சினிமா அன்றி வேறு எதனாலும் முழுமை செய்திட முடியாமல் இருந்தோமே! திரையரங்கம் நோக்கிக் குழந்தைகளும் தாய்மார்களும் ஆர்ப்பரித்துவரும் அழகை என்னவென்று சொல்ல முடியும்? அவர்தம் துயரங்களை - துன்பங்களைக் களையும் மந்திர மண்டலங்களாகத் திரையரங்குகள் இருந்தனவல்லவா! ஐந்தாறு நாட்களுக்கொரு முறை படங்கள் மாற்றப்படும்போதெல்லாம் திரையரங்குகளில் ஒரு குட்டித் திருவிழா நடப்பதாக இருக்கும். பெரிய நடிகர்கள் படங்கள் என்றாலோ, பெரும் வெற்றிபெற்ற படங்கள் என்றாலோ திரையரங்கை நோக்கிச் செல்லும் அவர்கள் கிராமங்களை, அதன் சாலைகளைத் திருவிழாக் கோலங்களாக ஆக்கிக்கொண்டே செல்வார்கள். அவர்களைக் கண்ணுறும் நமக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

மூடப்படும் திரையரங்குகள்

நாம் நமக்குக் கிடைத்த திரைச் செல்வங்களை எவ்வளவு நேர்மறையாக அணுக முடியுமோ அந்த அளவுக்கு அவற்றை அணுகியுள்ளோம். நம் குடும்பச் சிக்கல்கள் பேசப்பட்டுள்ளன. நம் இசை மரபுகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. நாட்டுப்புறக் கலைவடிவங்கள் பேரளவில் பயன்படுத்தப்படவில்லையென்றாலும் பொதுச் சமூகத்தின் கவனத்துக்கு அவை கொண்டுசெல்லப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கென்று திரையுலகம் ஒரு தனித்த பாணியைக் கடைப்பிடித்துவந்திருக்கிறது. மற்ற மாநிலத் திரைப்படங்களைவிட நம்முடையவை அரசியல் மாற்றங்களை முன்வைத்துள்ளன; பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பியுள்ளன; மக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்கு ஏற்ற முறையில் பாடல்களும் இசையும் புனையப்பட்டுள்ளன. நிலவுடைமைச் சமூகத்தைத் தோலுரிப்பதில் அவை ஆற்றியுள்ள பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இதர மாநிலத் திரைப்படங்கள் இவ்வகையில் பின் தங்கியிருந்தன. இந்தியாவுக்கு முன்னோடியாகத் தமிழ்த் திரையுலகம் இருந்த கதை இப்போது மாறிக்கொண்டிருப்பது கவலை தரும் விஷயமாகும். நம் திரையரங்குகள் தொடர்ந்து மூடப்படுகின்றன; ஒரு காட்சிக்கு முப்பது பேர் திரண்டாலே ஆச்சரியமூட்டுகின்றது. கடந்த பத்தாண்டுகளாக நான் சென்ற திரையரங்குகளில் இந்த எண்ணிக்கை கூட அதிகபட்சமாகத்தான் இருந்திருக்கின்றன. சில படங்களை இரவுக் காட்சிகளில் பார்க்கச் சென்றபோது, குறிப்பிடத்தக்க அளவுக்கு ரசிகர்கள் வராததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை அண்ணா சாலைத் திரையரங்குகளிலேயே இத்தகைய அவலங்களால் படம் பார்க்காமல் திரும்பியுள்ளேன்.

திரைப்படத்தை நாம் ரசிப்பதாக இருந்தால் அதற்கேற்ற எண்ணிக்கையில் ரசிகர்களும் திரையரங்கை நிரப்ப வேண்டும். அத்தகைய கூட்டத்துக்கு மத்தியில்தான் நம் மனமும் ரசனை மனோபாவத்தை ஏற்கும். இப்போது ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை நாம் பார்ப்பதாகக் கற்பனை செய்துபாருங்கள்; காட்சிக்குக் காட்சி திரையில் நிகழும் களேபரங்களுக்கு நிகராக நம்மோடு அமர்ந்திருக்கும் ரசிகர்களின் களேபரங்களும் கைத்தட்டல்களும் கூரையைப் பிய்த்தெடுக்கும் சிரிப்பொலிகளும் இருந்தால்தான் அந்தப் படத்தின் மொத்தச் சாரமும் நம்முள் இறங்கும். சோகத்தில் துடிதுடிக்கும் ‘துலாபாரம்’ படத்தைப் பார்க்க நேர்ந்தாலும் நம்முடன் கூடியிருக்கின்ற அந்த எண்ணற்ற ரசிகர்களின் கண்ணீர்ப் பெருக்கினூடேதான் நம்முடைய துயரத்தையும் கரைக்க முடியும். இன்பமோ துன்பமோ அவற்றைக் கூட்டாக அனுபவிப்பதின் வாயிலாகவே நாம் நம் பண்பாட்டின் உன்னதங்களை அடைந்தோம். பிறர் துயரம் நம் துயரமாக, பிறரின் குதூகலம் நம்முடைய உல்லாசமாக, காதலர்களின் மென்னுணர்வுகள் நம்முடைய மென்னுணர்வுகளாக மாறிவந்தன.

செலவு மிகுந்த ரசனையாகிறது

இவ்வளவு இருந்தாலும் இன்று தமிழகம் தன் தொன்மையானதும் கட்டிடக் கலைக்கு வசீகரம் சேர்த்ததுமான திரையரங்குகளைப் படிப்படியாக இழந்துவருகிறது. முன்னொரு காலத்தில் நாடகக் கொட்டகைகள் காலியாகிவிட, அவை திரையரங்குகளாக மாறின. அது, காலத்தின் இயல்பான ஓட்டம்; தொழில்நுட்பம் நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் சென்ற வழிமுறை. ஆனால், அதே விதமாக இன்றைக்குத் திரையரங்கின் நசிவுகளைக் கணக்கிடக் கூடாது.

தொலைக்காட்சிகளும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நாடகங்களும் மட்டுமே நம் திரையுலகை வீழ்த்திக்கொண்டிருப்பதாகக் கருதுவது சரியான கருத்தல்ல. திரைப்படங்களை உலகுக்கு அறிமுகப்படுத்திய மேலைநாடுகள் எவ்வளவோ விஞ்ஞான முன்னேற்றங்களைக் கண்டபோதும் தம் திரையரங்குகளை இழந்துவிடவில்லை. இந்தியாவின் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே கொண்டுள்ள அமெரிக்காவில் இன்றைக்கும் நாற்பதாயிரம் திரையரங்குகள் உள்ளன. நம் நாட்டுக்கு இணையான மக்கள்தொகை கொண்ட சீனாவிலும் கிட்டத்தட்ட அதே அளவுக்குத் திரையரங்குகள் உள்ளன.

ஐயாயிரம் திரையரங்குகளில் சீனாவின் தன்மைக்கு அந்நியமான ‘பாகுபலி’ திரையிடப்படுகிறது; வசூலை வாரிக் குவிக்கிறது; சீன அதிபர் இந்தியப் பிரதமரிடம் பாகுபலியைக் குறித்து உரையாடுகிறார். ஆனால், இந்தியாவில் இப்போது 8,500 திரையரங்குகள் மட்டுமே செயல்படுகின்றன. கூடவே, சினிமா தயாரிப்பு எப்படி அதிக செலவு கோருவதாக இருக்கிறதோ, அதைப்போல சினிமா ரசனையும்கூட செலவுமிக்கதாக மாறியிருக்கிறது. பெரிய நகரங்களில் எழும் மால்கள் கணினி யுக வருமானத்தைக் கவ்வியிழுக்கச் செய்யும் மகா சுரண்டல் தன்மைகளைக் கொண்டவை. இவற்றின் வளர்ச்சியைக் காட்டி நடுத்தர - ஏழை எளிய மக்களின் கலைநுகர்வுகளைக் காவுகொடுத்துவிட முடியாது. இவர்களின் மண் மணம் சார்ந்த திரையரங்குகள் இயற்கையோடு ஒத்திசைந்து இருந்தவை; மீண்டும் அப்படியே இருக்க வேண்டியவை. அவர்களின் வியர்வைக் கசகசப்புக்கும் சமூக உறவாடலுக்கும் ஆசுவாசமளித்தபடியே அவர்களின் கலைத் தாகத்தை ஈடு செய்ய வேண்டிய திரையரங்குகள் நமக்குத் தேவை.

இன்று ஒரே தேசம், ஒரே வரி என்ற கவர்ச்சிகரமான சொல்லாடல்களால் படங்களுக்கு 28% சரக்கு - சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தித் திரைப்படங்களின் விரிவான சந்தையைத் தமிழ்த் திரைக்கும் பொருத்திப்பார்த்து வரிவிதிப்பது அநீதியல்லவா? தமிழ்த் திரையுலகினரும் மத்திய ஆட்சியாளர்களின் வரிவிதிப்பைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டு மாநில அரசிடம் மன்றாடியது இன்னும் பெரிய வேதனை. திரையரங்குகளின் வேலைநிறுத்தமும் பேச்சுவார்த்தையும் முடிவுக்கு வந்துவிட்டன. கிராமப்புறத் திரையரங்குகள் மூடப்படுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

- களந்தை பீர்முகம்மது, ‘பிறைக் கூத்து’,
முதலான நூல்களின் ஆசிரியர்,
தொடர்புக்கு: kalanthaipeermohamed@gmail.com

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in