

கடந்த வாரம் பத்திரப்பதிவுத் துறையில் நிலங்களின் வழிகாட்டு மதிப்பை மூன்றில் ஒரு பங்காகத் தமிழ்நாடு அரசு குறைத்தது. பல இடங்களில் நிலத்தின் வழிகாட்டு மதிப்பு அதன் சந்தை மதிப்பைவிட அதிகமாக இருப்பதால், பத்திரப்பதிவு குறைந்து, அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், இந்த மாற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது. நிலப் பரிவர்த்தனையில் குறைந்த வழிகாட்டு மதிப்பின் அடிப்படையில் முத்திரைத்தாள் கட்டணம் வசூலிக்கும்போது அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். இதைத் தடுக்கும் விதமாகப் பத்திரப்பதிவுக் கட்டணத்தை ஒரு சதவீதத்திலிருந்து மூன்று சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது. ஆக, இந்தத் திட்டத்தால் என்ன மாற்றம் வரும்?
ஒன்று, மாநில மொத்த வரி வருவாயில் முத்திரைத்தாள் வருவாய் சேரும்போது அதனை உள்ளாட்சி அமைப்புகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இனிமேல் முத்திரைத்தாள் வருவாய் குறையும். அதனால், உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கிடைக்க வேண்டிய தொகை குறையும். அதே நேரத்தில், பத்திரப்பதிவுக் கட்டணம் இரண்டு மடங்கு உயரும். அதை மாநில அரசு தனக்கே வைத்துக்கொள்ளலாம். இதனால் மாநில அரசின் வருவாய் பெருகும். இரண்டு, நிலத்தை விற்பவர் மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டிய மூலதன ஆதாய வரி (capital gain tax) குறையும். முன்பு வாங்கிய விலையைவிட இப்போது நிலத்தின் மதிப்பு குறைவாக இருப்பதாலோ சிறிதளவே உயர்ந்துள்ளதாலோ மூலதன ஆதாய வரி குறைவாக இருக்கும்.
மூன்று, தமிழகம் முழுவதும் நிலத்தின் வழிகாட்டு மதிப்பைக் குறைத்ததால் பல இடங்களில் நிலத்தின் சந்தை மதிப்பு வழிகாட்டு மதிப்பைவிட அதிகமாக இருக்கும், இது கறுப்புப் பணத்தை, கருப்புப் பொருளாதாரத்தை மேலும் விரிவடையச் செய்யும். நிலத்தின் விற்பனையைச் சீர்படுத்தி, சரியான மதிப்பில் பத்திரப்பதிவை உறுதி செய்ய அரசு செய்ய வேண்டியது இரண்டு. ஒன்று, முத்திரைத்தாள் விகிதத்தைக் குறைக்க வேண்டும். இரண்டு, பத்திரப்பதிவுக் கட்டணத்தைக் குறிப்பிட்ட ஒரு தொகையாக நிர்ணயிக்க வேண்டும். ஒரு நிலத்தின் பத்திரத்தைப் பாதுகாப்பாக வைத்து, அதன் உரிமையை நிலைநாட்டுவதற்கு நிலத்தின் உரிமையாளருக்கு உதவுவது பத்திரப்பதிவுத் துறையின் பிரதான சேவை. பத்திரத்தில் உள்ள நிலத்தின் மதிப்புக்கு ஏற்ப இந்தச் சேவையின் தன்மை மாறாது.
எந்த ஒரு அரசாலும் நிலத்தின் சந்தை மதிப்பைச் சரியாகக் கூற முடியாது. முத்திரைத்தாள் வரியின் விகிதம் குறைவாகவும், பத்திரப்பதிவுக் கட்டணம் குறிப்பிட்ட அளவில் வரையறுக்கப்பட்ட தொகையாக இருக்கும்போதும்தான் நிலத்தின் உண்மையான சந்தை மதிப்பைக் குறிப்பிடுவதற்கு வாங்குவோரும் விற்போரும் முன்வருவார்கள். மேலும், ஒவ்வொரு நிலத்தின் விற்பனைப் பதிவையும் அதனை விற்போர், வாங்குவோரின் வருமான வரிக் கணக்குகளுடன் இணைக்க வேண்டும். இதற்கான வழிமுறைகள் ஏற்கெனவே உள்ளன. இது கறுப்புப் பண உருவாக்கத்தைத் தடுப்பதுடன் அரசுக்கு வேண்டிய வரி வருவாயையும் பெற்றுத்தரும்.
இராம. சீனுவாசன்
சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்,
தொடர்புக்கு: seenu242@gmail.com