Published : 24 Dec 2013 12:00 AM
Last Updated : 24 Dec 2013 12:00 AM

எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா?

எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5.1933ந் தேதி மாலை 7.45 மணிக்கு ஆவி நீத்தார். இதற்காக நான் துக்கப்படுவதா, மகிழ்ச்சியடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு இலாபமா, நஷ்டமா என்பது இது சமயம் முடிவுகட்ட முடியாத காரியமாய் இருக்கிறது.

வெட்கப்படுகிறேன்

எப்படியிருந்தாலும், நாகம்மாளை மணந்து வாழ்க்கைத் துணையாகக் கொண்டு 35 வருட காலம் வாழ்ந்துவிட்டேன். நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல், நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை. நான் சுயநல வாழ்வில் மைனராய், காலியாய், சீமானாய் இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தார் என்பது மறக்க முடியாத காரியம்.

பெண்கள் சுதந்திர விஷயமாகவும், பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ - போதிக்கிறேனோ அதில் நூறில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்துகொண்டிருந்தேன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை. ஆனால், நாகம்மாளோ பெண் அடிமை விஷயமாகவும் ஆண் உயர்வு விஷயமாகவும், சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்துகொண்டிருந்தார் என்பதையும் அதை நான் ஏற்றுக்கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடு கிறேன்.

சின்ன சமாதானம்

நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும் வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்துவந்தேன். இவைகளுக்கெல்லாம் நான் சொல்லக்கூடிய ஏதாவதொரு சமாதானம் உண்டென்றால் அது வெகு சிறிய சமாதானமேயாகும்.

அதென்னவென்றால், நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும் நான் பொதுநலச் சேவையில் ஈடுபட்ட பிறகு பொதுநலக் காரியங்களுக்கும், சிறப்பாகச் சுயமரியாதை இயக்கத்திற்குமே பயன்படுத்தி வந்தேன் என்பதுதான். நாகம்மாள் நான் காங்கிரசிலிருக்கும்போது மறியல் விஷயங்களிலும், வைக்கம் சத்தியாக்கிரக விஷயத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்துவந்தது உலகம் அறிந்ததாகும்.

ஆகவே, நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற் றென்று சொல்லட்டுமா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே!

அதிசயமில்லை

எது எப்படியிருந்தபோதிலும், நாகம்மாள் மறைவு ஒரு அதிசய காரியமல்ல. நாகம்மாள் இயற்கை எய்தினார். இதிலொன்றும் அதிசயமில்லை.

நாகம்மாளை அற்ப ஆயுள்காரியென்று யாரும் சொல்லிவிட முடியாது. நாகம்மாளுக்கு 48 வயது ஆனபோதிலும், அது மனித ஆயுளில் பகுதிக்கே சிறிது குறையானபோதிலும் இந்திய மக்களின் சராசரி வாழ்நாளாகிய இருபத்தி மூன்றரை வயதுக்கு இரட்டிப்பென்றே சொல்ல வேண்டும். செத்தால் சிரிக்க வேண்டும்; பிறந்தால் அழ வேண்டும் என்ற ஞானமொழிப்படி நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும் ஒரு நஷ்ட சம்பவமாகவும் கருதாமல், அதை ஒரு மகிழ்ச்சியாகவும் இலாபமாகவும் கருத வேண்டும் என்றே நான் ஆசைப்படுகின்றேன். ஆசைப்படுவது மாத்திரமல்லாமல் அதை உண்மையென்றும் கருதுகிறேன்.

எப்படியெனில், எனது வாழ்நாள் சரித்திரத்தில் இனி நிகழப்போகும் அத்தியாயங்களோ சிறிது விசேஷ சம்பவங்களாக இருந்தாலும் இருக்கலாம். அதை நாகம்மாள் இருந்து பார்க்க நேரிட்டால் அந்த அம்மாளுக்கு அவை மிகுந்த துக்கமாகவும் துயரமாகவும் காணக்கூடியதாய் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமிருக்காது. அத்துடன் அதைக் கண்டு சகியாத முறையில் யானும் சிறிது கலங்கக்கூடும்.

ஆதலால், நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன் குடும்பத்தொல்லை ஒழிந்தது என்கின்ற ஓர் உயர் பதவியையும் அடைய இடமேற்பட்டது.

இது நிற்க, நாகம்மாள் மறைவை நான் எவ்வளவு மகிழ்ச்சியான காரியத்திற்கும் இலாபமான காரியத்திற்கும் பயன்படுத்திக்கொள்கின்றேனோ அந்த மாதிரி எனது மறைவையோ நலிவையோ நாகம்மாள் உபயோகப்படுத்திக்கொள்ள மாட்டார். அதற்கு நேரெதிரிடையாக்குவதற்கே உபயோகித்துக்கொள்வார். ஆதலால், நாகம்மாள் நலத்தைக் கோரியும், நாகம்மாள் எனக்கு முன் மறைந்தது எவ்வளவோ நன்மை.

நஷ்டமல்ல

என்னருமைத் தோழர்கள் பலருக்கு நாகம்மாள் மறைவு ஈடுபடுத்த முடியாத நஷ்டம் என்று தோன்றலாம். அது சரியான அபிப்பிராயமல்ல. அவர்கள் சற்றுப் பொறுமையாய் இருந்து, இனி நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளைக் காண்பார்களேயானால் அவர்களும் என்னைப் போலவே நாகம்மாள் மறைவு நலமென்றே கருதுவார்கள். நாகம்மாளுக்கு காயலா ஏற்பட்ட காரணமே, எனது மேல்நாட்டுச் சுற்றுப் பிரயாணம் காரணமாய் ஒரு வருட காலம் பிரிந்து இருந்திருக்க நேர்ந்த பிரிவாற்றாமையே முக்கிய காரணம். இரண்டாவது, ரஷ்ய யாத்திரையினால் எனக்கு ஏதோ பெரிய ஆபத்து வரும் என்று கருதியது.

மூன்றாவதாக, நமது புதிய வேலைத் திட்டங்களை உணர்ந்த பின் ஒவ்வொரு நிமிஷமும் தனக்குள் ஏற்பட்ட பயம், ஆகிய இப்படிப்பட்ட அற்ப காரணங்களே அவ்வம்மைக்குக் கூற்றாக நின்றது என்றால், இனி இவற்றைவிட மேலானதான பிரிவு, ஆபத்து, பொருளாதாரக் கஷ்டம் முதலியவை உண்மையாய் ஏற்பட இருக்கும் நிலை அவ்வம்மைக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் தோழர்கள் நாகம்மாள் மறைவுக்கு வருந்த மாட்டார்கள் என்றே கருதுகிறேன்.

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பிருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும் சங்கராச்சாரிகள்போல (அவ்வளவு ஆடம்பரத்துடனல்ல - பண வசூலுக்காக அல்ல) சஞ்சாரத்திலேயே, சுற்றுப்பிரயாணத்திலேயே இருக்க வேண்டும் என்றும் நமக்கென்று ஒரு தனி வீடோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் நிரந்தர வாசமோ என்பது கூடாதென்றும் கருதி இருந்தது உண்டு. ஆனால், அதற்கு வேறு எவ்விதத்தடையும் இருந்திருக்கவில்லையென்றாலும் நாகம்மாள் பெரிய தடையாய் இருந்தார். இப்போது அந்தத் தடை இல்லாமல் போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். ஆதலால் நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையைத் தருவதாகுக!

(குடி அரசு - தலையங்கம் 14.05.1933)
தொகுப்பு: பசு.கவுதமன், பெரியாரிய எழுத்தாளர்,
‘ஈ.வெ.ராமசாமி என்கிற நான்’ நூலின் தொகுப்பாசிரியர்.
தொடர்புக்கு: gowthamanpasu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x