Published : 01 Oct 2013 10:13 AM
Last Updated : 01 Oct 2013 10:13 AM

நமக்குள் இருக்கும் ஏழாவது மனிதன்

நம் அரசியல் தலைவர்கள் எப்போதும் அரசியல் தலைவர்களாக மட்டுமே இருப்பதில்லை. ஞானோதயம் மிக்கவர்களாக மாறிப் பல பொன்மொழிகளை உதிர்ப்பதும் உண்டு. சமீபத்திய வரவு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. “நாம் இன்னும் கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. நமக்கு வேதனை அளிக்கக்கூடிய அதே தவறுகள்தான் மறுபடியும் நிகழ்ந்தபடி இருக்கின்றன” என்று பேசியிருக்கிறார் பிரணாப் முகர்ஜி.

வகுப்புவாதத்தை ஒழித்துக்கட்டும் விதமாக நாம் எவ்வளவோ பேசினாலும் (கவனியுங்கள் - பேசினாலும்தான், செயல்பட்டாலும் அல்ல) அது ஒரு கொரில்லா போர்போல மறைந்து நின்று ஒவ்வொரு முறையும் நம்மைத் தாக்குகிறது. ஒரு பிரபலமான தமிழ் வார இதழ் 15 ஆண்டுகளுக்கு முன்பு தன் பின்புற அட்டையில் முப்பரிமாணப் படங்களை (3டி) பிரசுரித்துவந்தது. மேலோட்டமான பார்வைக்கு ஒருவிதமாகவும், முப்பரிமாணத்தில் வேறாகவும் தோன்றுவன அந்தப் படங்கள். அதில் ஒரு படத்தில் ஆறு நபர்கள் நிற்பார்கள்: அதையே முப்பரிமாண நோக்கில் பார்க்கும்போது ஏழாவதாக ஒரு மனிதன் அதே தோற்றத்தில் வருவான். நம்முடைய சமூக அமைப்பு இப்படிப்பட்டதுதானோ? அந்த ஏழாவது மனிதன் ஆறு பேரின் உருத்திரட்சியாக வெளிவருவது நம் மன அமைப்பின் பிரதிபலிப்பா? வகுப்புவாதம் மறைந்துதான் இருக்கிறதே தவிர, ஒழிந்துவிடவில்லை. நம்முடைய அரசியல் தந்திரங்கள் வகுப்புவாதச் சனியனை மறைந்திருக்கத்தான் பயிற்றுவித்திருக்கிறது; இது நம் குற்றம். நம்முடைய குற்றங்களை நாமே வளர்த்துக்கொண்டு, அதில் நம்மையே ஏமாற்றிக்கொள்கிறோம்.

வேற்றுமையில் ஒற்றுமை என்று நாம் பேசுவது வெறும் கிளிப்பேச்சுதானே என்று ஒதுக்கித் தள்ளிவிட வேண்டாம். இப்படியாகச் சொல்லித்தான் நம் உணர்வுகளை மீட்டிக்கொள்ள வேண்டும். பிரணாப் முகர்ஜி மிக அழகாக அந்த உரையில் இதையும் சொல்கிறார். “வேற்றுமையில் ஒற்றுமை என்ற தனித்துவமான தன்மையை நாம் எங்கிருந்தும் இறக்குமதி செய்யவில்லை, ஏதோ விபத்துபோல நமது சமுதாயத்தில் அது நம்மை வந்து சேரவும் இல்லை. இந்த உயரிய எண்ணம் நம் சமுதாயத்தில் காலம் காலமாக மிக ஆழமாக வேரூன்றி நீடித்தபடி இருக்கிறது” என்கிறார்.

பொதுவாகவே, செயலுக்கு மாறான சொற்களை நம் தலைவர்கள் எப்போதும் பேசிவருவதால் அவர்களின் உரையைக் கேட்பதும் அதற்கு மதிப்பளிப்பதும் ஒரு கால விரயமான செயலாகவே என் மனத்தில் படும். ஆனால், இந்த முறை பிரணாப் முகர்ஜி இதயத்தின் அடியாழத்திலிருந்து சொற்களை எடுத்துக் கோத்திருக்கிறார். எனவே, விழியின் ஓரத்தில் கண்ணீர் துளிர்த்தது.

ஒருவேளை இந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட அண்மையில் நடந்த முசாஃபர்நகர் கலவரம் ஒரு காரணமாக இருந்திருக்கலாமோ என்னவோ? இந்த மாதிரிக் கலவரங்கள் நடக்கிறபோதெல்லாம் நம்முடைய பின்நவீனத்துவக் காலங்கள் ஒரு கனவாகவே கலைந்துவிடுகின்றன. முசாஃபர்நகர் கலவரத்தில் ஈடுபட்டு ரத்தக்களரியைப் பெருக்கியவர்களைவிட, நிழலாகப் பின்தொடர்ந்த நம் அரசியல்வாதிகள்தான் அதிக ரத்தக்களரியை உருவாக்கினார்கள். பங்காளிகள் சரிக்குச் சரியாகப் போட்டுத் தள்ளியிருக்கிறார்கள். அவரென்றும் இவரென்றும் வேறுபாடு இல்லை. புதிய நாற்காலிகளை உருவாக்கவும் பழைய நாற்காலிகளைக் கவிழ்க்கவும் ரத்த ஆறுகளைவிட சரியான உபகரணங்கள் நம் நாட்டில் இல்லை.

இந்தியாவின் அரசியல் நடப்புகளில் வகுப்புவாதம் மைய நீரோட்டமாக இருக்கிறது. முசாஃபர்நகரின் ரத்தச் சிதறல்கள் காய்வதற்கு முன்னராகச் சமுதாய நல்லிணக்கத்துக்கான தேசிய விருதுகளையும் நாம் வழங்கிக்கொண்டிருக்கிறோம்.

நமது மதங்கள் விரோதத்தைப் போதிக்கவில்லை என்று எல்லோரும் வாழ்நாளில் ஒரு முறையாவது சொல்லியிருக்கிறோம். ஆனால், நம் ஒவ்வொருவருடைய வருங்காலத்தையும் கடந்த காலமாக மாற்றிக்கொள்கிறோமே, நம்முடைய மனதில் இருப்பதுதான் என்ன?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x