Last Updated : 04 Jun, 2017 11:41 AM

 

Published : 04 Jun 2017 11:41 AM
Last Updated : 04 Jun 2017 11:41 AM

ஜெ-சசி நிறுவனங்களின் பின்னல் வலை

சென்னை தியாகராய நகரில் இருபுறமும் மரங்கள் வளர்ந்த, கவனத்தை ஈர்க்கும் எந்த அம்சமும் இல்லாத ஒரு வீதியின் அடுக்ககத்தில் ‘கியான்’ (GYAN) என்ற பெயர்ப் பலகை பளிச்சென்று கண்ணில் படுகிறது. ஓரிரண்டு காரணங்களைத் தவிர, அது ஒன்றும் கவனிக்கத்தக்க அடுக்ககம் அல்ல. கதவு எண் 12, கதவு எண் 16 என்ற இரு வீடுகள் மட்டும் சில தனியார் நிறுவனங்களின் பதிவுபெற்ற அலுவலகங்களாகத் திகழ்கின்றன. அந்நிறுவனங்கள், அஇஅதிமுக (அம்மா) கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, அவருடைய அண்ணி இளவரசி ஆகியோருடன் தொடர்புள்ளவை. ஒன்றுக்கொன்று வலைப்பின்னல் தொடர்புள்ள முகமூடி நிறுவனங்களுக்கு இவைதான் முகவரி. அதிகம் கேள்விப்பட்டிராத பெயர்களைக் கொண்டவை சில நிறுவனங்கள்.ஸ்ரீஜெயா ஃபைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ், ஃபேன்சி ஸ்டீல்ஸ், ஆவிரி பிராப்பர்டீஸ், கியூரியோ ஆட்டோ மார்க், காட்டேன் ஃபீல்ட் ரிசார்ட்ஸ் அவற்றில் சில. அனைவருக்கும் பரிச்சயமான நிறுவனம் ஜாஸ் சினிமாஸ் (பழைய பெயர் ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங்), 2015-ல் சென்னையில் ஒரு மல்டிபிளக்ஸ் நிறுவனத்தை வாங்கியபோது அனைவரின் புருவங்களையும் உயர வைத்தது.

இந்நிறுவனங்கள் எல்லாவற்றுக்கும் தணிக்கையாளர் கே. சௌந்தர்வேலன். அவரது பதிவு அலுவலகம் கதவு எண் 16-ல் இருக்கிறது. இந்த அடுக்ககத்தில் குடியிருப்பவர்கள் எதையும் பேச மறுத்துவிட்டனர். அக்கம் பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள், இந்தப் பெயரில் அங்கு யாருமே இல்லை என்று அடித்துக் கூறுகிறார்கள்.

மேலே குறிப்பிடப்பட்ட நிறுவனங்கள் ‘கியான்’ அடுக்கக முகவரியிலிருந்து செயல்படலாம் என்று ‘இதயம் ஹோம்ஸ் அண்ட் பில்டர்ஸ்’ என்ற மர்ம நிறுவனம் எழுத்துபூர்வமாக ஒப்புதல் கடிதம் கொடுத்திருக்கிறது.

1996-க்குப் பிறகு இந்நிறுவனங்கள் உருவாயின. பெரும்பாலானவை தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா 2001-ல் இரண்டாவது முறை பதவியேற்ற பிறகு ஏற்பட்டவை. வருவாய்க்குப் பொருத்தமில்லாத வகையில் சொத்துகளைக் குவித்ததாக ஜெயலலிதா, சசிகலாவுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது 1991-1996 காலத்துக்கானது. அந்த வழக்கில் தொடர்புள்ள நிறுவனங்கள் நமது எம்ஜிஆர், ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ், ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ், ராமராஜ் அக்ரோ மில்ஸ், லெக்ஸ் பிராப்பர்டி டெவலப்மெண்ட் அண்ட் அதர்ஸ் ஆகியவை.

அன்றிலிருந்து சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் அடுத்தடுத்து சில நிறுவனங்களைத் தொடங்கினர். அவற்றில் பெரும்பாலானவை மர்மமானவை. அவற்றில் முதலீடுகள் செய்யப்பட்டதும் எடுக்கப்பட்டதும் ஏன் என்று வெளிப்பார்வைக்குத் தெரியவில்லை. இந்த வலைப்பின்னல் நிறுவனங்களைப் பற்றி மேலும் நமக்குத் தெரிவது:

மிடாஸ், ஜாஸ் தெரிந்ததே. மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரீஸ் என்ற நிறுவனத்திடமிருந்து இந்த மர்ம வலைப்பின்னலைப் புரிந்துகொள்ள முடியுமா என்று பார்ப்போம். 14 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கப்பட்ட மிடாஸ் நிறுவனம் சசிகலா, இளவரசியுடன் அதன் இயக்குநர்கள் கே.எஸ்.சிவகுமார், கார்த்திகேயன் கலியபெருமாள் மூலம் தொடர்புள்ளது. இவ்விருவரும் இளவரசியின் மாப்பிள்ளைகள்.

ஜெயலலிதா முதலமைச்சராக இரண்டாவது முறை பதவியேற்ற ஓராண்டுக்குப் பிறகு 2002 அக்டோபரில் மிடாஸ் தொடங்கப்பட்டது. ஸ்ரீபெரும்பூதூரில் அதன் பதிவு அலுவலகம் இருக்கிறது. 2009-10 முதல் இந்நிறுவனத்தின் பங்குகளை அதிகம் வைத்திருக்கும் இரு நிறுவனங்கள் ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங் (2005-ல் தொடங்கப்பட்டது, 2013-14-ல் ஜாஸ் சினிமாஸ் என்று பெயர் மாற்றப்பட்டது), சிக்னெட் எக்ஸ்போர்ட்ஸ், தலா 48.4% பங்குகளுடன். சிக்னெட் ஏற்றுமதி 2003-ல் தொடங்கியது.

நிறுவனங்களின் தொடக்கம், அமைப்பு, நடவடிக்கைகள், பங்கு முதலீடு, கடன் பெறுதல், கடன் தருதல் போன்ற எல்லா அம்சங்களும் ஒரே மாதிரியானவை! பெரும்பாலான நிறுவனங்கள் உண்மையில் எந்தவித களச் செயல்பாட்டையும் கொண்டவை அல்ல. மாருதி டிரான்ஸ்போர்ட்ஸ், ஃபேன்சி டிரான்ஸ்போர்ட்ஸ் விதிவிலக்கானவை. இவற்றில் செலுத்தப்பட்ட மூலதனம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை. ஆனால் இதர முதலீடுகளும் கடன்களும் கோடிக்கணக்கில். இதன் பரிவர்த்தனைகள் விளங்கிக்கொள்ள முடியாதவை.

இந்த வலைப்பின்னலில் இடம்பெற்றுள்ள பல நிறுவனங்கள் வங்கியல்லாத அமைப்புகளிடமிருந்து அதிகக் கடனைப் பெற்றுள்ளன. அதே ஆண்டில் வெளியாருக்குக் கடனும் முன்பணமும் கூட அதிகம் தரப்பட்டுள்ளன. வங்கியல்லாத நிறுவனங்களைப் பொறுத்தவரை இவை அசாதாரணமான நடவடிக்கைகள். மூலதனத்தை அதிகப்படுத்தினால் அதை அந்த நிறுவனத்திலேயே முதலீடு செய்வதுதான் வழக்கம். இந்த வலைப்பின்னலில் நான்கு நிறுவனங்களின் செயல்களை மட்டும் கவனமாக ஆராய்ந்தோம். அவற்றின் பரிமாற்றங்கள் விளக்கங்களுக்கு அப்பாற்பட்டவை.

சிக்னெட் எக்ஸ்போர்ட்ஸ்

சிக்னெட் எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தில் சசிகலாவும் ஸ்ரீ ஜெயா ஃபைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ல் நிறுவனமும் சம கூட்டாளிகள். அதன் நடப்பு இயக்குநர்கள் கலியபெருமாள், கே.எஸ். சிவகுமார். இந்நிறுவனம் எந்தத் தொழிலையும் செய்யவில்லை. ஆனால், வருமானத்தில் பெரும்பகுதி வங்கிகளில் போடப்பட்டிருக்கும் நிரந்தர வைப்புகளிலிருந்து கிடைக்கும் வட்டியாக இருக்கிறது. 2008-09 வரை இது செயலற்றுக் கிடந்தது. 2011-12 முதல் 2014-15 வரையில் இதன் விற்றுமுதல் ஏதுமில்லை, நிறுவனம் இழப்பையே சந்தித்தது (நிறுவனங்களின் பதிவாளர் அலுவலகத்திலிருந்து இந்தக் காலத்துக்கு மட்டும்தான் தரவுகள் கிடைத்தன).

அதே சமயம், _ஸ்ரீஹரிசந்தனா எஸ்டேட்ஸ் போன்ற சசிகலா குடும்ப இதர நிறுவனங்களிடமிருந்து இதற்குக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிறுவனமும் மாவிஸ் சாட் காம் (இது ஜெயா டி.வி. நிறுவனத்தை நடத்துகிறது) ஜாஸ் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது. சென்னை வேளச்சேரியில் பீனிக்ஸ் மாலில் உள்ள லக்ஸி சினிமாஸ் என்ற பல்திரை அரங்கு ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்துடையது. லக்ஸியை சத்யம் சினிமாஸ் நிறுவனத்திடமிருந்து 2015-ல் ஜாஸ் வாங்கியது. உரிமையாளரைக் கட்டாயப்படுத்தி வாங்கினார்கள் என்ற பேச்சுகூட அடிபட்டது. ஜாஸ் நிறுவனத்துக்கு இளவரசியின் மாப்பிள்ளைகள் இருவரும்தான் இயக்குநர்கள், இளவரசியின் 29-வயது மகன் விவேக் ஜெயராமன் நிர்வாக இயக்குநர்.

2010-11-ல் சசிகலாவும் ஸ்ரீஜெயா ஃபைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ல் நிறுவனமும் தலா ரூ.1.1 கோடி, ரூ.1.2 கோடி கொடுத்து சிக்னெட் நிறுவனத்தின் 11 லட்சம், 12 லட்சம் பங்குகளை வாங்கினர். ஆனால் அந்தப் பங்குகள் அவர்களுக்கு மாற்றப்படவில்லை. ‘பங்குகள் ஒதுக்கப்படுவதற்காக முன்பணமாகப் பெறப்பட்டது’ என்று அத்தொகை குறிப்பிடப்பட்டிருக்கிறது. அடுத்த நிதியாண்டில் இப்படி ஒதுக்கப்படாமல், முன்பணமாகப் பெறப்பட்ட தொகை ரூ.5.72 கோடியாக இரட்டிப்பாகியிருக்கிறது. நமது எம்ஜிஆர், ஜெயா பிரிண்டர்ஸ் மற்றும் இதர நிறுவனங்கள் ரூ.3.41 கோடியை வழங்கியுள்ளன.

2012-13-ல் பங்குகள் வழங்கப்படுவதற்காகத் தரப்பட்ட முன்பணம் ரூ.2.3 கோடிக்குக் குறைந்துவிட்டது. ரூ.3.41 கோடி நீண்ட காலக் கடன் தொகையாக மாற்றப்பட்டுவிட்டது. 2013-14-ல் ரூ.5.72 கோடியான மொத்தத் தொகையுமே நீண்டகாலக் கடனாக மாற்றப்பட்டுவிட்டது. இதில் ரூ.5.23 கோடி மாவிஸ் சாட் காம் மற்றும் மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரீஸ் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டது. சசிகலாவிடமிருந்தும் வேறு நிறுவனங்களிடமிருந்தும், பங்குகளை வாங்கும் சாக்கில் பணம் சிக்னெட் நிறுவனத்துக்குச் சென்று மீண்டும் மிடாஸ், ஜெயா டி.வி.க்கே திரும்பிவிட்டன.

ஸ்ரீஜெயா ஃபைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ்

ஸ்ரீஜெயா ஃபைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் சிக்னெட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குகளை வைத்திருக்கிறது; அதன் மூலம் ஜாஸ் சினிமாவிலும் பங்குகள் இருக்கின்றன. இந் நிறுவனத்தின் 90% பங்குகளை வைத்திருக்கும் இளவரசி இதன் உரிமையாளர். ஸ்ரீஜெயா ஃபைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் சசிகலாவின் வலையமைப்பில் உள்ள எல்லா நிறுவனங்களுடன் தொடர்புள்ளது. சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோரை நிறுவனர் இயக்குநர்களாகக் கொண்டு இந்நிறுவனம் 1994 செப்டம்பர் 6-ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வி.எஸ்.சிவகுமார், எஸ்.அனந்தராமன் என்ற இருவரும் செலுத்தப்பட்ட ரூ.1,000 முதலீட்டில் சம பங்கைச் செலுத்தியவர்கள்.

2003-04 முதல் 2012-13 வரையில் இந்த நிறுவனம் பங்குகள் கேட்டு பல்வேறு நிறுவனங்கள் அளித்த பணத்தைத் தொடர்ந்து பெற்று வந்துள்ளது. ஆனால், யாருக்கும் பங்குகளை வழங்கவில்லை. பங்குகளுக்கான விண்ணப்பத் தொகை என்றே பற்று-வரவு அறிக்கையில் அது தொடர்ந்து வரவு வைக்கப்பட்டிருக்கிறது. 2004 மார்ச் 31-ல் ரூ.7.11 கோடியாக இருந்த விண்ணப்பத் தொகை 2013 மார்ச் 31-ல் ரூ.11.43 கோடியாக உயர்ந்தது. 2013-14-ல் இத்தொகை கடனாக மாற்றப்பட்டது. பங்குகளை வழங்குமாறு கேட்டு, பிறகு கடன் தந்தவர்களாக மாறிய நிறுவனங்கள் நமது எம்ஜிஆர், ஜெயா பிரிண்டர்ஸ், ஸ்ரீஜெயா பப்ளிகேஷன்ஸ், ஜே ஃபார்ம் அவுஸ். இந்தக் கடனை வழங்கியவர்களுக்கு வட்டியே தரப்படவில்லை.

2005-ல் இந்நிறுவனத்தின் பெயர் ஸ்ரீஜெயா ஃபைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்று மாற்றப்பட்டு, செலுத்தப்பட்ட மூலதனத் தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டது. வி.எஸ்.சிவகுமார், எஸ்.அனந்தராமன் ஆகியோருக்கு இந்த மூலதனத்தில் 60.5%, 39.5% பங்கு. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் விலகிய பிறகு இவ்விருவரும் நிறுவனத்தின் இயக்குநர்களாயினர்.

ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு 2011-12-ல் இந்த நிறுவனம் கடன்களை வாங்குவது, கொடுப்பது, சசிகலாவுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் தொடர்புள்ள நிறுவனங்களில் முதலீடு செய்வது ஆகியவற்றில் ஈடுபட்டது. இந்த ஆண்டில்தான் ஜெயலலிதா ஸ்ரீஜெயா ஃபைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1.92 கோடியையும் சசிகலாவுக்கு ரூ.10.5 லட்சத்தையும் கடனாக அளித்தார்.

ராயல் வேலி ஃப்ளோரிடெக் எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் ரூ.45 லட்சம் கடனை இந்நிறுவனத்துக்கு வழங்கியது. ராயல் வேலி ஃப்ளோரிடெக் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் என்று ஜெயலலிதா 2011-ல் தேர்தல் ஆணையத்திடம் அளித்த பிரமாண வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார். ஸ்ரீஜெயா ஃபைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் இந்த நிதியாண்டில் செய்த முதலீடுகள் அனைத்தும் இதே குழுமத்தின் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த நிறுவனங்களில்தான். ஆவிரி பிராப்பர்டீஸ் (வி.எஸ். சிவகுமார், வி.ஆர். குலோத்துங்கள் இருவரும் சமபங்கு கூட்டாளிகள்) நிறுவனத்துக்கு ரூ. 3 கோடியும் ரிசார்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1.39 கோடியும் ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங்குக்கு ரூ.1.36 கோடியும் கிடைத்தன. 2010-11-ல் ஸ்ரீஜெயா மொத்தமாக ரூ.8.57 கோடியை குழுமத்தின் வெவ்வேறு நிறுவனங்களுக்கு வழங்கியது. இப்படிக் கடன் வாங்குவது, கொடுப்பதைத் தவிர வேறு எந்தச் செயலிலும் நிறுவனம் ஈடுபடவில்லை.

2013-14-ல் வங்கிகளில் போட்டிருந்த டெபாசிட்டுகள் மூலமும் விவசாய நிலத்திலிருந்து குடிவாரத் தொகையாகவும் ஸ்ரீ ஜெயா நிறுவனம் ரூ.12.14 லட்சம் ஈட்டியது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இந்நிலம் வாங்கப்பட்டிருந்தது. 2014 மார்ச் 31-ன் படி நிறுவனத்துக்கு ரூ.18.37 கோடி சொத்து இருந்தது. இது கடன்களும் முன்பணமும் அடங்கியது. ஹாட் வீல்ஸ், சிக்னெட் எக்ஸ்போர்ட்ஸ், மாருதி டிரான்ஸ்போர்ட்ஸ், ஆவிரி பிராப்பர்டீஸ் ஆகிய நிறுவனங்களுக்கு ரூ.10.81 கோடி வழங்கப்பட்டது. 2015 மார்ச் 31-ன் படி இந்நிறுவனம் ரூ.15.97 கோடியைத் திரட்டியது. இதைப் பிற நிறுவனங்களுக்குக் கடனாகக் கொடுத்தது அல்லது பங்குகளில் முதலீடு செய்தது. ரூ.1 லட்சம் பங்கு மூலதனத்துடன் தொடங்கப்பட்ட ஸ்ரீ ஜெயா என்ற நிறுவனம் நிதியை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாற்ற முகமூடி நிறுவனமாகச் செயல்பட்டது.

ஃபேன்சி ஸ்டீல்ஸ்

குறுகிய காலக் கடன்கள், நீண்ட காலக் கடன்கள், முன்தொகை, ரியல் எஸ்டேட் முதலீடு, இதர பரிமாற்றங்கள் என்று ஒன்றுக்கொன்று தொடர்புள்ள நிறுவனங்களில் இப்படி பணம் வருவதும் போவதுமாக இருக்கும் நிலையில் ஒரு நிறுவனம் மட்டும் தனித்து நிற்கிறது. 2008 மே மாதம் தொடங்கப்பட்ட அபோஜி டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் 2011-ல் ஃபேன்சி ஸ்டீல்ஸ் என்று பெயர் மாற்றப்படும் வரையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இந்த ஆண்டில்தான் பெரும்பான்மை வலுவுடன் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தார். 2011 நவம்பரில் நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டதோடல்லாமல் இரும்புக் கழிவு போன்ற பொருட்களை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபடுவது என்றும் தீர்மானித்தது. அதே ஆண்டில் ஜெயலலிதாவின் தனி உதவியாளர் எஸ்.எஸ். பூங்குன்றன் இந்நிறுவனத்தின் இயக்குநராக்கப்பட்டார்.

அதன் பிறகு அந்நிறுவனம் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடமிருந்தும் வேறு இரு நிறுவனங்களிடமிருந்தும் பழைய இரும்பை வாங்கி விற்று ரூ.80.9 கோடி என்ற உயர் அளவை எட்டியது. (அவ்விரு நிறுவனங்களும் ஹூண்டாய் நிறுவனத்துக்கு உதிரி பாகங்களை விற்பவை.) அடுத்த ஆண்டிலேயே வியாபாரம் படுத்து நிறுவனத்துக்கு ரூ.2.5 கோடி இழப்பு ஏற்பட்டது. நிறுவனத்தின் விற்றுமுதல் வெறும் ரூ.1.17 கோடி.

பங்கு வாங்குவதற்கான பணமாகவும் கடனாகவும் வழக்கமாகப் பிற நிறுவனங்களுக்கு வருவதைப் போல இதற்கும் வந்து, அது பிற நிறுவனங்களுக்குக் கடனாகவும் சென்றது. வட்டியில்லாக் கடனாக, எந்த ஈடும் இல்லாமல் எவரிடமிருந்தோ ரூ.8 கோடியை இது கடன் வாங்கியது. அதில் ரூ.3 கோடி எவருக்கோ கடனாகத் தரப்பட்டது. 2012-13-ல் நிறுவனத்தின் வியாபாரம் சரிந்த பிறகும் இந்நிறுவனத்துக்குப் புதிதாக பங்கு முதலீட்டுத் தொகை கிடைத்தது. அதன் செலுத்தப்பட்ட பங்கு முதலீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.50.51 கோடியாக உயர்ந்தது. முந்தைய நிதியாண்டு கடனாக வாங்கியிருந்த ரூ.8 கோடி திருப்பிச் செலுத்தப்பட்டுவிட்டது அல்லது பங்குத் தொகையாக மாற்றப்பட்டது. முதலிலிருந்த பங்குதாரர்களே கூடுதல் தொகையைக் கொண்டுவந்தார்களா, புதிய முதலீட்டாளர்கள் கிடைத்தார்களா என்று தெரியவில்லை.

ஜாஸ் சினிமாஸ்

2011 டிசம்பர் 19-ல் போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து சசிகலா வெளியேற்றப்பட்டார், அவருடைய கணவர் எம். நடராஜன் உட்பட கிட்டத்தட்ட எல்லா உறவினர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நூறு நாட்கள் கழித்து ஜெயலலிதாவின் இல்லத்துக்குத் திரும்பினார் சசிகலா. உறவினர்களுடன் இனி தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டேன் என்று பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு, கடிதம் எழுதிக் கொடுத்தார். இந்தக் காலம் வரை, ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் 2 இயக்குநர்களும் (அதன் முந்தைய பெயர் ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங்) ஜெயலலிதாவுக்கு நெருக்கமாகவே இருந்தனர். அவர்கள் பூங்குன்றன், பத்திரிகையாளர் சோ ராமசாமி. சசிகலா திரும்பிய பிறகு2012 ஜூன் முதல் கே.எஸ். சிவகுமார், கலியபெருமாள் இருவரும் இயக்குநர்களாயினர். 2014-15-ல் சசிகலாவுக்கு இருந்த பங்குகள் 4,100-லிருந்து 41.67 லட்சங்களாக ஆயிரம் மடங்கு உயர்ந்து, அவரை நிறுவனத்தின் உரிமையாளராக்கின.

நிறுவனத்துக்காக 3 முகவரிகள் தரப்பட்டுள்ளன. முதல் முகவரி 151, மாம்பலம் ஹை ரோடு, தி.நகர், சென்னை. இந்த முகவரியில் ஸ்ரீரங்கா என்ற பெயரில் 3 மாடி வர்த்தக அலுவலகக் கட்டிடம் இருக்கிறது. இந்தப் பெயரில் நிறுவனம் ஏதும் இங்கு இல்லை என்று அங்கிருக்கும் காவலாளி தெரிவிக்கிறார்.

இந்த வலைப்பின்னலில் உள்ள வேறு இரு நிறுவனங்களும் கூட அதே முகவரியில் இருப்பதாகத்தான் பதிவாகியிருக்கின்றன. அவை 2008-ல் தொடங்கப்பட்ட ஆவிரி பிராப்பர்டீஸ், ஃபேன்சி ஸ்டீல்ஸ். அந்தப் பகுதியில் நீண்ட நாட்களாகக் குடியிருப்பவர்களிடமும் அங்குள்ள நிறுவனங்களில் பணிபுரிகிறவர்களிடமும் விசாரித்தால் எந்தத் தகவலும் தெரியவில்லை. ஜாஸ் அல்லது ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங் நிறுவனத்துக்கு 2009-லிருந்து பதிவு செய்யப்பட்ட முகவரி மனை எண் 21-ஏ, தெற்குப் பகுதி, கிண்டி தொழில்பேட்டை, சென்னை 600032. கியான் அடுக்ககத்தில் உள்ள புதிய இடத்துக்கு ஜாஸ் சினிமாஸ் பிறகு மாறியது.

கிடைத்த ஆவணங்களைப் பரிசீலித்த சட்ட நிபுணர்கள் இந்த நிறுவனங்களுக்கு இடையிலான பிணைப்புகளைப் புரிந்துகொள்ள முடியாமல் திகைக்கிறார்கள். எந்தவித வர்த்தகச் செயல்பாடும் கிடையாது, பணம் எதற்காக ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொன்றுக்குப் பாய்கிறது என்றும் புரியவில்லையே என்கின்றனர்.

கிடைக்காத ஆட்கள், போலி முகவரிகள்!

இந்நிறுவனங்களைப் பற்றிய புலனாய்வின்போது இயக்குநர்களாக இருந்த, இருக்கும் சிலரை அடையாளம் காண முயன்றோம். ஹாட் வீல்ஸ் என்ஜினீயரிங்கின் முன்னாள் இயக்குநர் பி.சி. போத்ரா ஓர் உதாரணம். அவருடைய முகவரி தணிகாசலம் சாலை, ஆயிரம் விளக்கு என்றிருக்கிறது. தி. நகரில் தணிகாசலம் சாலை இருப்பதால் அங்கு தேடியபோது சில்வர் பார்க் அபார்ட்மென்ட்ஸில் இந்தப் பெயரில் ஒருவருக்கு அடுக்ககம் இருப்பது தெரிந்தது. அவரோ அவருடைய குடும்பமோ அங்கு இல்லை. கடந்த அக்டோபரில் அவர்கள் வீட்டை எங்களுக்கு விற்றுவிட்டு காலி செய்துவிட்டனர் என்று புதிய உரிமையாளர் தெரிவிக்கிறார். அவர் திடீரென்று வீட்டை விற்றுவிட்டுப் போவதாகக் கூறினார், புதிய முகவரியைத் தரவில்லை என்கிறார் புதிய உரிமையாளர்.

சசிகலாவின் கணவர் நடராஜனின் உறவினர் வி.ஆர். குலோத்துங்கன் சில நிறுவனங்களின் இயக்குநர். சிக்னெட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் பங்குதாரர். அவருடைய வீட்டு முகவரி, பணக்காரர்கள் குடியிருக்கும் காதர் நவாஸ்கான் சாலையில் உள்ள ஜெம்ஸ் கோர்ட் என்ற இடம். அங்கே ஒரு கடைதான் இருக்கிறது.

சசிகலாவின் உறவினர் பி.ஆர். சண்முகம், ஃபேன்சி டிரான்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை நிர்வகிக்கிறார். சிக்னெட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் பாதி அவருடையது. ஹாட் வீல்ஸ் நிறுவனத்தில் நீண்ட நாள்களுக்கு முன்னால் இயக்குநராக இருந்தேன், இப்போது இல்லை என்கிறார்.

இளவரசியின் மாப்பிள்ளைகளான கே.எஸ். சிவகுமார், கார்த்திகேயன் கலியபெருமாள் இருவரும் கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களிலும் இயக்குநர்களாக இருக்கின்றனர். நிறுவனத்துக்கான விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பரமேஸ்வரி நகர், அடையாறு முகவரியில் சிவகுமாரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. வீடு பூட்டப்பட்டிருக்கிறது. உள்ளே நுழையவே முடியவில்லை.

‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி

ஓவியம்: ஆர்.ராஜேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x